அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முபாஹலா தோல்வி அடைந்ததா? – நஜாத் ஆசிரியருக்கு பதில்.


நஜாத் ஆசிரியரின் கேள்வி:

எந்த முகத்தோடு இந்தக் காதியானி மிர்ஸா தாஹிர் முபாஹலாவுக்கு அழைக்கிறாரோ நாம் அறியோம். ஒருவேளை அவரது பாட்டனார் மிர்ஸா குலாம் 15-4-1907 இல் மௌலவி சனாவுல்லாஹ் அமிர்தஸரி அவர்களுடன் முபாஹலா செய்து அந்த பிராத்தனையின் விளைவாக காலராவினால் 26-5-1908 மரணமடைந்ததை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும். 

நம் பதில்:


யாரோ ஒரு அண்டப்புளுகன் எழுதி வைத்துவிட்டுப் போனதை இந்த ஆகாசப் புளுகர் இப்போது எடுத்து எழுதியிருக்கிறார். 

“லஹ்ன துல்லாஹி அலல் காதிபீன்” பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக. 

இவருடைய மேற்கண்ட கூற்று முற்றிலும் உண்மையென இவர் நம்புகிறாரென்றால். அவை பொய்யாக இருந்தால் இறைவனின் சாபம் தம்மீது இறங்கட்டும் என இவர் கூறட்டும்! இவர் தன்மான முள்ளவராக இருந்தால் இதனை இவர் தமது எட்டில் வெளியிடட்டும். 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தனது காலத்தில் வாழ்ந்திருந்த உண்மையின் எதிரிகளுக்கும் தம்மீது வீண் அவதூறுகளை சுமத்திக் கொண்டிருந்தவர்களுக்கும் முபாஹலாவிற்கான அழைப்பு விடுத்தார்கள். என்பது உண்மையே! அந்த முபாஹலாவை ஏற்று அறிக்கை வெளியிட்ட குலாம் தஸ்தகிர் மௌலவி இஸ்மாயீல் (அலிகட்) மற்றும் பல ஆலிம்சாக்களும் இறைவனின் கோபத்திற்கு இலக்காகி இறந்து போயினர். மௌலவி ஸனாவுல்லாஹ் இந்த ‘முபாஹலாவை’ ஏற்றிருப்பதாக முதலில் தமது ‘அஹ்லே ஹதீஸ்’ ஏட்டில் 29-3-1907 இல் அறிவிப்பு செய்திருந்த போதிலும் பின்னர் தடுமாறி 26-4-1907 இல் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு அவர் கூறியிருந்த காரணம் இதுதான்:- 

“பொய்யர்களும் குழப்பக்காரர்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கின்றான். அதனால் மிர்ஸா சாஹிப் நீண்டநாள் வாழ்வார். நான் அவருக்கு முன் மரணமடைவேன். அதனால் இந்த சவாலை நான் ஏற்கத் தயாரில்லை!’

“எனக்கும் உங்களுக்குமிடையில்தான் இந்த எதிர்ப்பு நடந்துவருகிறது. நான் மரணித்துவிட்டால் எனது மரணத்தினால் மக்களுக்கு என்ன பலன் ஏற்படப் போகிறது .............. உங்களுடைய இந்த அழைப்பை ஏற்க எனக்குச் சம்மதமில்லை” (அஹ்லே ஹதீஸ் 26-4-1907) 

இதற்குப் பிறகும் மௌலவி, ஸனாவுல்லாஹ் தனது பிரசுரங்களில், முபாஹலாவை தான் ஏற்காததை வெளிப்படுத்தி கீழ்வருமாறு அறிக்கை விடுத்திருந்தார்:-

நான் தங்களைப்போல் நபியோ ரெஸுலோ அல்ல. எனக்கு இல்ஹாம் வருவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட முபாஹலா (எதிர்ப்புப் போட்டி) களுக்கு நான் தயாரில்லை. ( இல்ஹாமதே மிர்ஸா பக்கம் 85) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளராக இருந்தும் முஸைலமாவுக்கு முன்னதாகவே மரணமடைந்துவிட்டார்கள் (முரக்கயே காதியானி பக்கம் 9) 

இவற்றிலிருந்து மௌலவி ஸனாவுல்லாஹ் ஒரு பித்தலாட்டக்காரர் என்பதும் அவர் முபாஹலாவை ஏற்கவில்லை என்பதும் புலனாகும். 

இது குறித்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள். 

‘பொய்யன் உண்மையாளருடைய வாழ்நாளில் மரணமடைவான் என நாம் கூறவில்லை. மாறாக முபாஹலா செய்பவர்களிலேயே பொய் கூறுபவர் உண்மையாளரின் வாழ்வில் மரணிப்பார் என்றே நாம் கூருயிருந்தோம். இது முபாஹலாவிற்கு மட்டுமே பொருந்தும். நபிபெருமானார் (ஸல்) அவர்களின் எதிரிகள் அனைவரும் அவர்களுடைய வாழ்நாளில் மரணமடைந்தார்களா? இல்லையே. ஆனால் முபாஹலா செய்தால் உண்மையாளரின் சத்தியத்தை நிரூபிக்க இறைவன் பொய்யனை மரணிக்கச் செய்வான். எனவே என்னோடு முபாஹலா செய்யாத என் எதிரிகள் எனது மரணத்திற்குப் பின்னரும் வாழ்ந்திருப்பார்கள் (அல் ஹகம் 10-10-1907)

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 26-5-1908 இல் இறைவனடி சேர்ந்தார்கள். பொய்யரான மௌலவி சனாவுல்லாஹ். ‘பொய்யனும் குழப்பக்காரனும் நீண்ட காலம் வாழ்வான்’ என்ற அவரது கூற்றுப்படி நீண்ட நாள் வாழ்ந்திருந்தார். அப்படி அவரை வாழச் செய்து அவர் ஒரு படுபொய்யர், குழப்பக்காரர் என்பதை அல்லாஹ் உலகுக்கு எடுத்துக் காட்டினான். இதுவே உண்மை. 

நஜாத் ஆசிரியர் கூறும் மௌலவி ஸனாவுல்லாஹ், டாக்டர் அப்துல் ஹக்கீம், அப்துல்லாஹ் ஆத்தம் இவர்களின் சந்ததிகள் இன்று பஞ்சாபில் வாழ்கிறார்களா? இறைவனின் வல்லமைமிகு கரம் இவர்களை முற்றாகத் துடைத்துவிட்டது. ‘இன்ன ஷானியக ஹுவல் அப்தர்’ – உமது எதிரிகளே சந்ததியற்றவர் – என்பதைப் போன்று இவர்களின் பெயர் சொல்லக் கூட இன்று அங்கு ஆளில்லை. 

ஆனால் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) வாழ்ந்திருந்த காதியானில் இன்றும் அவர்களின் சந்ததிகள் வாழ்கின்றனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவு மற்றும் இன்ன பல களேபரங்கள் அப்பகுதியில் நடந்திருந்தும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் பெயரும் ஜமாத்தும் இங்கு நிலைநின்று வருகிறது. அதுமட்டுமன்று அவர்களின் சந்ததிகள் இன்று பல்வேறு உலகநாடுகளில் சிறப்பாக வாழ்கின்றனர். மேலும் அவர்களின் மறைவிற்குப் பிறகு நூறாண்டுகள் கழிந்தும் அவர்களுடைய பேரர் அவர்களுடைய சார்பில் ஜமாத்தின் இன்றைய எதிரிகளுக்கு முபாஹலா அழைப்பு விடுக்கிறார்.

நஜாத் ஆசிரியர் கூறும் ‘உண்மையாளர்களை’ அழித்துவிட்டு அவர் யாரை பொய்யர்கள் என்று கூறுகிறாரோ அவர்களை அல்லாஹ் மேலோங்கச் செய்துவிட்டானா? என்ன அபத்தமான வாதம் இது! சிந்திக்கின்றவர்கள் நிச்சயமாக இதனை உணரவே செய்வர்.