அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

மஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஈஸா நபியின் இன்னொரு பெயர் மஸீஹ் யுக முடிவு நாளின் கடைசியில் வரவிருக்கிற தஜ்ஜாலையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸீஹ் எனக் கூறியுள்ளார்கள். ஈஸா நபியைப் போலவே தாஜ்ஜாலும் நீண்ட காலமாக உயிருடன் இருந்து வருகிறான்... எனவே மஸீஹ் என்பது இங்கு அரபி மொழிச் சொல்லின் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. நீண்ட காலம் வாழ்பவரை மெஸாயா என வேதமுடையோர் கூறி வந்தனர். மெஸாயாவைத்தான் திருக்குர்ஆன் மஸீஹ் எனக் கூறுகிறது (பார்க்க திருக்குர்ஆன் 3:45, 4:157, 9:30-31, 4:171-172, 5:17, 5:72, 5:75) பி.ஜே யின் தமிழாக்கம் 2 ஆம் பதிப்பு 


நம் விளக்கம் 

திருக்குர்ஆன் 3:46 இல் அவர் பெயர் மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்று இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன் 4:173 இல் அவரை மஸீஹ் என்று அழைக்கிறான். 5:18 இல் மர்யமின் மகன் மஸீஹ் என்றும், 5:79 இல் மர்யமின் மகன் ஈஸா என்றும் 3:56 இல் ஈஸா என்றும் அழைக்கப்படுகிறார். 

எனவே அவரது முழுப் பெயர் மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்பதாகும். அவர் மஸீஹ், ஈஸா, ஈஸப்னு மர்யம், மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்று முழுப் பெயரின் ஒரு பகுதியைக் கொண்டும் அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லலாம். 

தாஜ்ஜாலும் மஸீஹ் என்று நபி (ஸல்) அவர்களால் அழைக்கப்பட்டுள்ளான். தாஜ்ஜாலும், மஸீஹும் மிக நீண்ட காலம் வாழ்வதால் அவ்வாறு அழைக்கப்படவில்லை, இது பி.ஜே யின் தவறான கூற்றாகும். மஸீஹ் எனும் அரபிச் சொல்லுக்கு மிக நீண்ட பயணம் செய்பவர் என்று பொருள். இவ்விருவரும் மிக நீண்ட பயணம் செய்வதால் மஸீஹ் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு மஸீஹ் என்பது இங்கு இருவருக்கும் அரபி மொழிச் சொல்லின் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மிக நீண்ட காலம் வாழ்பவரை வேதமுடையவர்கள் மெஸாயா என்று கூறி வந்தனர் என்பதற்கு பி.ஜே தக்க ஆதாரம் தர வேண்டும். மொத்தத்தில் மஸீஹ் என்பதற்கு பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் தந்த விளக்கம் சரியன்று. 

மஸீஹ் என்றால் மிக நீண்ட பயணம் செய்பவர் என்ற பொருளை திருக்குர்ஆன் 3:45 வது வசனத்தின் விளக்கத்தில், 1. தப்ஸீர் இப்னு காஸீர் 2. தப்ஸீருல் ஹமீத் 3. தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் 4. அன்வாருல் குர்ஆன் 5. மௌலவி முஹம்மது அலி எழுதிய அடிக்குறிப்பு ஆகிய நூற்களிலும் காணலாம். 

திருக்குர்ஆன் 23:51 வசனம் நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் ஒரு அடையாளமாக ஆக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும், நீரூற்றுகளைக் கொண்ட ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம் என்று கூறுகிறது. இதில் வரும் தஞ்சம், அடைக்கலம் எனும் சொல் உயிரையும் உயிரினும் மேலான ஈமானையும் காக்க ஹிஜ்ரத் செய்து வேறொரு இடத்திற்குச் செல்லுதல் எனும் பொருளில் வருகிறது. (பார்க்க 18:17; 8:27) 

எனவே, ஹஸ்ரத் ஈஸா மஸீஹ் சிலுவையிலிருந்து காப்பாற்றப்பட்டு ஹிஜ்ரத் செய்து காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தார் என்று தெளிவாகிறது. இவ்வாறு மஸீஹ் என்று அழைத்துள்ளான். இவ்வாறே தாஜ்ஜாலும் முழு உலகையும் சுற்றி வருவதால் நீண்ட பயணம் செய்வதால் அவனும் மஸீஹ் என்று அழைக்கப்படுகிறான். இவ்வாறே அல்லாஹ் மஸீஹ் எனும் சொல்லை அரபி மொழி கூறும் பொருளில்தான் பயன்படுத்தியுள்ளான். 

ஒரு சொல் ஒரு மொழியில் இருக்கும் போது அந்த மொழி தரும் பொருளில்தான் அதன் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் அச்சொல்லுக்கு பிற மொழி தரும் வேறொரு பொருளில் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன? ஒரு வாதத்திற்காக நீண்ட நாள் வாழ்பவர் எனும் பொருள் அதற்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளைத் தரும் ஒரு சொல் அரபி மொழியில் இல்லையா? அந்த அளவுக்கு அரபு மொழி சொல் வளம் குன்றிய மொழியா?

பி.ஜே மஸீஹ் மிக நீண்ட பயணம் செய்தவர் என்னும் உண்மை கருத்தை மூடி மறைக்க, நீண்ட நாள் வாழ்பவர் எனும் தவறான கருத்தை வலிந்து புகுத்த முயன்றுள்ளார்.