அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஈஸப்னு மர்யம் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 206 இல் நாடோடிகள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னு ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன் என்பதாகும். 

ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபியர்களின் வழக்கம். 


எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன் என்று குறிப்பிடுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் பாதையின் மகன் என்று குறிப்பிடப்படுவான். 

சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்படமாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள்தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம். 

நம் விளக்கம்: 

இந்த விளக்கத்தை சிந்தனையில் வைத்துக் கொண்டு திருக்குர்ஆனின் இறைவன் ஈஸா நபியை இப்னு மர்யம் என்று கூறியிருப்பதையும் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தன்னை ஈஸப்னு மர்யம் என்று கூறியிருப்பதையும் காண்போம். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் 66:13 இல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக மர்யம் (அலை) அவர்களைக் குறிப்பிடுகின்றான். ஏதோ பெயரளவில் நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையையே தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்கள். அதில் முதன்மையாக விளங்குபவர்களை இப்னு மர்யம் என்று கூறவேண்டும். அதாவது எப்போதும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன் என்று கூறுவதுபோல், வாழ்க்கையையே பயணமாகக் கொண்டவனை இப்னு ஸபீல் என்று கூறுவதுபோல், தன் வாழ்க்கையையே நம்பிக்கையாகக் கொண்டு வாழ்பவரை இப்னு மர்யம் என்று அழைப்பதே மிகப் பொருத்தம் ஆகும். 

அல்லாஹ் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பிற்கும் பெண்களைத்தான் எடுத்துக்காட்டாக கூறியுள்ளான். நிராகரிப்போருக்கு நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களையும், நம்பிக்கையாளர்களுக்கு பிர்அவ்னின் மனைவி மற்றும் மர்யம் (அலை) அவர்களை எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளான். ஏன்? 

திருக்குர்ஆன் ஆண்களை நபிமார்களாகவும், அவர்களிடத்து விசுவாசம் கொள்கிறவர்களைப் பெண்களாகவும் கூறுகிறது. இவ்வாறே நபிமார்களை விசுவாசம் கொள்ளாதவர்களையும் பெண்களாகவே கூறுகிறது.

இதன் அடிப்படையில் ஒருவரை மர்யம் என்றோ பிர்அவ்னின் மனைவி என்றோ சொன்னால் அவர் நம்பிக்கையாளர் என்றும், ஒருவரை நூஹ் நபியின் மனைவி என்றோ லூத் நபியின் மனைவி என்றோ சொன்னால் அவர் காபிர் என்றும் பொருள். இவ்வாறே ஒருவரை இப்னு மர்யம் என்று சொன்னால் அவர் ஒரு மிகச் சிறந்த நல்ல மூமின் என்று பொருள். ஒருவருக்கு ஒரு தன்மை இருப்பதைக் காட்ட வேண்டுமாயின் அதனுடன் அரபியர் அபூ (தந்தை) இப்னு (தனயன்) அகு (சகோதரன்) என்ற பதங்களில் ஏதேனும் ஒன்றை அதனுடன் சேர்த்துக் கூறுவது அரபியரின் வழக்கம். இக்கருத்தில் தான் சந்திரன் இப்னுல் லைல் (இரவின் புதல்வன்) என்றும் அரபி நாட்டானுக்கு அக்குல் அரப் (அரபியரின் சகோதரன்) என்றும் வழிப்போக்கனுக்கு இப்னுஸ் ஸபீல் (பாதையின் மகன்) என்றும் அரபியர் கூறுகின்றனர். (தப்ஸீருல் ஹமீத் : 111 வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விளக்கம்) 

நபித்தோழர்கள் இக்ரிமா (ரலி) அவர்களை பிர்அவ்னின் மகன் (இப்னு பிர்அவ்ன்) என்று கூறினார். காரணம் நபி (ஸல்) அவர்கள் அபூஜஹிலை, தன் காலத்தின் பிர்அவ்ன் என்று கூறினார்களா. எனவே நபித் தோழர்கள் அபூஜஹீலின் மகனை இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். 

அவ்வாறே ஈஸப்னு மர்யம் என்றால், மிகச் சிறந்த மூமினாக இருந்து, ஈஸா நபியின் தகுதியை அடைந்தவர் என்று பொருள், அதாவது மர்யம் (அலை) அவர்களின் தகுதியிலிருந்து ஈஸா நபியின் தகுதிக்கு அல்லாஹ்வால் உயரத்தப்பட்டவர் என்று பொருள். 

இந்த அடிப்படையில்தான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தன்னை ஈஸப்னு மர்யம் என்று கூறினார்கள். 

மேலே சொல்லப்பட்ட எடுத்துக் காட்டுகளிலிருந்து தன்னை இப்னு மர்யம் என்று அல்லாஹ் அழைக்கிறான் என்று ஒருவர் கூறினால் மர்யம் (அலை) அவர்களின் மகனாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறுவது அவர் தன்னை அபூஜஹீல் என்று ஏற்றுக் கொள்வதாக பொருள். அதாவது அறியாமையின் தந்தை என்று தன்னைத்தானே ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்