அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அரபி மொழி உலக மொழிகளின் தாய்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 244 இல் அவரவர் மொழியில் வேதங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இதன் காரணமாக ஒரு சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்படுபவர் அச்சமுதாயத்தின் மொழியை அறிந்தவராகவே இருக்கிறார் என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 14:4) கூறுகிறது. 

நம் விளக்கம்: 

அவரவர் மொழியில் வேதங்கள் என்று பி.ஜே கொடுத்துள்ள தலைப்பு தவறாகும். சமுதாய மொழியில் தூதர்கள் என்றுதான் மொழியாக்கம்
செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் 14:4 வது வசனத்தில் “எந்த தூதரையும் அவர் சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்” என்றுதான் வருகிறது. 

அப்படிஎன்றால், முழு உலகுக்கும் தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாய மொழியாகிய அரபி மொழியை அறிந்துள்ளார் என்று ஏற்க வேண்டும். அல்லது இன்று முழு உலகமும் ஒரு சமுதாயமாக மாறிவிட்டதனால், அத்தனை சமுதாய மக்களின் மொழிகளுக்கும் தாய் மொழியாக அரபி மொழி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அரபி மொழிதான் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறுவதாக நினைக்கக் கூடாது என்றும் அரபி மொழிதான் சிறந்த மொழி என்று எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருக்குர்ஆன் கூறவில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 227) இது தவறாகும்.

1) ஆனால் அனைத்து வேதங்களுக்கும் தாய் வேதம் உம்முல் கிதாப் – திருக்குர்ஆனே ஆகும். இதனை அல்லாஹ் அனைத்து நகரங்களின் தாய் நகரமான – உம்முல் குரா வாகிய புனித மக்கா நகரில் தன் தூதரைத் தோன்றச் செய்து உலகுக்கு அருளினான். அந்தத் தூதரோ அனைத்து நபிமார்களின் தாய் நபியாக – உம்மி நபியாக காத்தமன் நபியாக இருக்கிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

எனவே, ஒரு தாய் நபி, தாய் நகரில், தாய் வேதத்தை, உலகின் தாய் மொழியாகிய அரபி மொழியில் கொண்டு வந்துள்ளார். 

இவ்வாறு வேதத்துக்கு தாய் வேதம் இருப்பது போல், நகர்களுக்கு தாய் நகரம் இருப்பது போல், நபிமார்களுக்கு தாய் நபி இருப்பது போல், உலகில் உள்ள மொழிகளுக்கும் ஒரு தாய் மொழி இருக்க வேண்டும். அது அரபியே. 

ஒரு பொருள் மிகச் சிறந்தது என்பதற்கு. 

1)அது சிறந்த மூலப் பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

2)குறைபாடு இல்லாமல் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். 

3)அத்தொழிலில் மிகச் சிறந்தவன் அதனை செய்திருக்க வேண்டும். 

4)அப்பொருள் மிகச் சிறந்த முறையில் மக்களுக்கு பயன்பட வேண்டும். 

இவ்வாறே திருக்குர்ஆனும், 

1) மிகச் சிறந்த மொழியில் அதாவது அரபியில் 

2) மிகச் சிறந்த கருத்துக்களை கொண்ட தாய் வேதமாக 

3) எல்லாம் வல்ல அல்லாஹ்வால் 

4) மனித குலம் முழுவதற்கும் பயன்படுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அரபி என்பதற்கு தெளிவானது என்று பொருள்.(திருக்குர்ஆன் 13:38) இந்த வசனத்தில் வரும் அரபி எனும் சொல் தெளிவான என்ற பொருளில் தான் எடுத்து ஆளப்பட்டுள்ளது. இதனால்தான் அரபியர்கள் பிற மொழிகளை அஜமி மொழி – தெளிவற்ற மொழி என்று அழைத்தனர். (திருக்குர்ஆன் 16:104) 

இதனைத்தான் பி.ஜே அரபு மொழி தான் ஒரேமொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால் நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபுமொழி வெறி மிகைத்திருந்தது என்று எழுதியுள்ளார். (குர்ஆன் அருளப்பட்ட வரலாறு)

உலக மொழிகளின் தாய் மொழிக்கு என்னென்ன இலக்கணம் உண்டோ அவை அனைத்தும் அரபி மொழிக்கு முழுமையாக உண்டு. 

1) அரபி மொழியில் ஒரு சொல்லுக்கு இருக்கும் பொருள்கள் போல், பிற மொழியில் இல்லை. 

2) ஒரு பொருளை குறிக்கும் அதிகமான சொற்கள் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழியில் இல்லை. எடுத்துக்காட்டாக, அரபி மொழியின் வளத்திற்கு இப்பெயர்கள் எடுத்துக்காட்டாகும். பிராணிகளுடைய வயதின் மாதம், ஆண்டுகளுக்கு ஒப்பவும் தனித்தனி பெயர்கள் உண்டு. ஒட்டகத்துக்கு 1000 பெயர்களும், சிங்கத்துக்கு 630 பெயர்களும், பாம்புக்கு 200 பெயர்களும், தண்ணீருக்கு 170 பெயர்களும், மழைக்கு 64 பெயர்களும் உண்டு. இத்தகு சொல் வளம் பெற்றிருப்பது அரபி மொழியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்றாகும். (ஆதாரம்: திருக்குர்ஆன் தர்ஜுமா மவ்லானா எம். அப்துல் வஹ்ஹாப், அடிக்குறிப்பு எண் 76) 

3) ஒரு கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழிக்கு இல்லை. 

இதனால் தான் அனைத்து மொழிகளையும் அறிந்த அல்லாஹ் தன் இறுதி வேதத்தை அரபி மொழியில் இறக்கியுள்ளான். இவ்வாறு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மொழியாகிய அரபு மொழி உலக மொழிகளின் தாய் மொழியாகி உலகமே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு இறைவன் “அரபி மொழியே உலக மொழிகளின் தாய் மொழி” என்று இல்ஹாம் அனுப்பியுள்ளான். இதன் அடிப்படையில் அவர்கள் “மினனுர் ரஹ்மான்” என்று ஒரு நூல் எழுதி அக்கருத்தை நிரூபித்துள்ளார்கள். தன் சஹாபிகளிடம் (தோழர்களிடம்) உலக மொழிகளின் தாய் மொழி அரபி மொழி என்பதை உலக மொழிகளுடன் அரபு மொழியை ஒப்பிட்டு அக்கருத்தை நிரூபித்துக் கட்டுங்கள் என்றும் கூறினார்கள். இதனால் ஏறக்குறைய, உலகின் 50-க்கும் மேற்பட்ட மொழிகளுடன் ஒப்பாய்வு செய்து அரபு மொழியே உலகின் தாய் மொழி என்று நிரூபித்துள்ளார்கள்.