அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

பாகிஸ்தான் தபால் தலையில் அஹ்மதியின் உருவம்


நோபல் பரிசு பெற்ற முதல் அஹ்மதி விஞ்சானி டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவரின் உருவம் பொறித்த தபால் தலையொன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. நம்ப இயலாத இந்தச் செய்தியை பாகிஸ்தான் நாளேடு 'டான்' வெளியிட்டுள்ளது.

அணுசக்தி துறையில் பாக். அரசின் உயர்மட்ட ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர்கள் என அந்நாடு சட்டமியற்றியதைத் தொடர்ந்து அப்பதவியை துறந்தார்கள். பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.


எனினும் உலகின் பல்வேறு உயர்ந்த நாடுகள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முன்வந்தன. ஆனால் அவர்கள் அதனை ஏற்காது தாம் பாகிஸ்தானின் ஒரு பற்றுதல் மிக்க குடிமகனாக இருக்க விரும்பினார்கள். இன்னும் சில நாடுகள் சிறப்பு விருதுகளை அவர்களுக்கு அளித்து கௌரவித்தன. டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களோ பின்தங்கிய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றி வந்தார்.

பாகிஸ்தானில் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் மிக உயர்ந்த பதவியில் இருந்த போது அவர்களைக் 'காதியானி' எனக் காரணம் காட்டி அவர்களைப் பதவியிலிருந்து இறக்க அந்நாட்டின் முல்லாக் கூட்டம் கூக்குரலிட்டது.

ஆனால் அவர்கள் உலகின் மிக உன்னத விருதான நோபல் பரிசினைப் பெற்றபோது அவர்களை நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என உரிமை பாராட்ட வேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தான் அரசிற்கு ஏற்பட்டது. இப்போது அது டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு கௌரவித்துள்ளது. பாக். அரசு தனது கடந்த கால பாவத்திற்காக பரிகாரம் செய்கிறதா?

அஹ்மதிகள் உயர்வடைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதையும் அவர்களை தாழ்த்த எண்ணுகின்றவர்கள் தளர்வடைந்து போவார்கள் என்பதையுமே இது போன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே!