அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

காதியானிப் பிரச்சினை - மௌலான மௌதூதி ஏட்டிற்கு பதில்


அஹ்மதியா ஜமாத்தை முஸ்லிம்களல்லாத சிறுபான்மையினராக ஆக்க வேண்டும் எண்ணத்துடன் 1953 இல் ஜமாத்தே இஸ்லாமி என்ற (மௌதூதி) இயக்கத்தின் தலைவர் அபுல் அஹ்லா மௌதூதி பாகிஸ்தானில் 'காதியானிப் பிரட்ச்சினை' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதன் காரணமாக பாகிஸ்தானில் அந்நாட்டு அரசிற்கு எதிராக மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்ப்பட்டது. இந்தக் குழப்பங்களுக்கு காரணமாயிருந்த மௌதூதி சாஹிபை பாகிஸ்தான் அரசாங்கம் சிறையிலடைத்து மரண தண்டனைகூட விதித்தது. பின்னர் அவர் விடுதலையானார்.

இதே தீய நோக்கத்துடன் இந்தப் புத்தகம் 1963 இல் ஆண்டில் இலங்கையில்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தற்போது 1997 இல் இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.

" இலங்கையிலும், காதியானிகளின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள இக்காலக் கட்டத்தில் அவர்களின் உண்மையான உருவத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு இந்நூல் பெரிதும் உதவும். "

என வெளியீட்டாளர் குறிப்பிடுகின்றார். ஆனால் இவர்களின் எத்தனையோ பொய்ப் பிரச்சாரங்கள் பயனளிக்காமல் அஹ்மதிய்யா ஜமாத்தின் உண்மையை மக்கள் எப்போதோ உணர ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் புத்தகம் மூலம் தமிழ் நாட்டிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ அஹ்மதிய்யா இயக்கத்தை ஒழித்துக் கட்டிவிடலாம். என்ற இவர்களின் எண்ணம் ஒரு பகல் கனவேயாகும். ஏனெனில் 1953 இல் இந்தப் புத்தகம் பாகிஸ்தானில் வெளிவந்தபோது 15 லட்சமாக பேராக இருந்த அஹ்மதிகள் இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு வளர்ந்தோங்கி 1985 இல் 45 லட்சத்திற்கு மேல் பெருகிவிட்டார்கள்.

அதே போன்று 1963 இல் இந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்த போது இருந்த நிலையை விட தற்போது இலங்கையில் அஹ்மதியா ஜமாஅத் பல இடங்களில் வளர்ந்து மிக முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வளர்ச்சியில் ஏதாவது குறைபாடு இருக்கின்றதென்றால் காதியானிப் பிரட்ச்சினை என்ற இந்தப் புத்தகத்தின் இந்தப் பதிப்பு அந்தக் குறைபாட்டை நீக்க உதவியாக இருக்கும்.

ஏனென்றால் அஹ்மதிகளையும், அதன் கொள்கைகளையும் பற்றி உணர்ந்து வரும் முஸ்லிம் பொது மக்களுக்கு இந்தச் சிறு புத்தகத்திலுள்ள பொய்கள் நன்கு புலப்படும். மேலும் 'உண்மைக்கு எதிராக பொய்யிற்கு ஒரு போதும் வெற்றி கிடைக்காது' என்று திருக்குரானே கூறுகிறது.

'காதியானிப் பிரட்ச்சினை' யின் பதிப்புரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"பிரிட்டானிய ஆட்சியாளர்கள் காதியானி இயக்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். இதனைப் பயன்படுத்தி இவ்வியக்கம் வேகமாக வளர்ந்தது. இவ்வியக்கத்தைச் சார்ந்தோருக்கு நிர்வாக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக இவ்வியக்கத்தின் செல்வாக்கு மிகவும் உயர்ந்து காணப்பட்டது."

ஆனால் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமாகும். இதனை நிரூபித்துக் காட்ட எந்த மௌலானாவினாலும் இதுவரை முடியவில்லை.

இமாம் மஹ்தியின் இரண்டாவது கலீபாவாகிய ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் (ரலி) அவர்கள் அஹ்மதியா ஜமாஅத், பிரிட்டானியா ஆட்சியிலிருந்து ஒரு பைசாவாவது பெற்றதாக எவராவது நிரூபித்துக் காட்ட முடியுமா? என்று அப்போதே சவால் விட்டார்கள். இந்த சவாலை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இறுதி நாள் வரை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

ஆனால் அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்க்கின்ற மௌலானாக்களும் அவர்களுடைய ஜமாத்துகளும் ஆங்கில அரசிடமிருந்து என்னென்ன சலுகைகள், நன்கொடைகள் பெற்றுக் கொண்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.

அஹ்லே ஹதீஸின் நத்வத்துல் உலமா என்ற நிறுவனம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்றும் இந்த நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து மாதந்தோறும் உதவித் தொகை கிடைத்துக் கொண்டிருந்ததென்றும் அந்த தேவ்பந்தி நிறுவனத்திலிருந்து வெளிவரும் பட்டதாரிகளான ஆலிம்கள் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சம்பளம் பெற்று வந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

தேவ்பந்திலுள்ள நத்வத்துல் உலமா நிறுவனத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி அவர்களின் பத்திரிகையான அன்னத்வா இவ்வாறு கூறுகிறது.

"ஆலிம்களின் முக்கியக் கடமை ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையை வளர்ப்பதேயாகும். (அன்னத்வா, பக்கம் 5 ஜூலை 1908)

அஹ்மதிய்யா ஜமாத்தின் கொடும் எதிரியாயிருந்த மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி, தமது பத்திரிகை இஷாத்துசுன்னாவில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருந்ததால் அவருக்கு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து பல ஏக்கர் நிலங்கள் கிடைத்தன. இந்த ஆலிம்களும், தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பல பதவிகளும் பட்டங்களும் சொத்துக்களும் சலுகைகளும் பெற்றுக் கொண்டதை  எங்களால் நிரூபித்துக் காட்ட முடியும்.

மேலும் நவாப் சித்திக் ஹசன்கான். மௌலவி நதீர் ஹுசைன் முஹத்திஸ் தெஹ்லவி, மௌலவி அஷ்ரப் அலி தானவி, சர் செய்து அஹ்மத்கான், மௌலவி நதீர் அஹ்மது ஷம்சுல் உலமா முதலிய ஆலிம்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முஸ்லிம்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இலங்கை மௌதூதி இயக்கம் இம்மகான்களைப் பற்றி இஸ்லாத்தின் துரோகிகள், ஆங்கிலேயர்களின் ஏவலர்கள் என்று கூறுவார்களா?

அஹ்மதியா இயக்கத் தலைவருக்கு நபித்துவப் பட்டம் கொடுத்து உருவாக்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்று கூறுவது பகுத்தறிவுக்கே மாறுபட்ட ஒன்றாகும். ஏனென்றால் தமது இயக்கத்தின் நோக்கம் கிறிஸ்தவர்களுடைய கொள்கைகளை முறியடித்து அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு ஒரு மனிதரும் இறைத்தூதரும் மட்டுமே என்பதை நிரூபிப்பதும் அவர் மரணித்து விட்டார் என்று எடுத்துக் காட்டுவதும் அவருடைய தோற்றத்தில், நான் வாக்களிக்கப்பட்ட மஸீகாக வந்துள்ளதாகவும் கூறுவதே யாகும்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உருவாக்கி இருப்பது இந்தியா முழுவதும் கிறிஸ்தவத்தைப் பரவச் செய்வதும் முழு இந்தியாவையும் இயேசுவின் கீழ் கொண்டுவருவதற்கேயாகும் என்று கூறிக்கொண்டிருந்த ஓர் ஆட்சி, அஹ்மதிய்யா இயக்கத்தை ஏற்ப்படுத்தியது என்று கூறுவது எந்த அளவு பகுத்தறிவுக்கு மாறுபட்ட ஒன்று என்று இந்த மௌதூதிகளால் புரிய இயலாதா? அஹ்மதிய்யா ஜமாத்தின் மீது இவர்கள் வைத்துள்ள குரோத மனப்பான்மை இவர்களை ஆத்மீகக் குருடர்களாக்கிவிட்டது