அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஜமாத்தே இஸ்லாமியின் அறியாமை


அல்லாஹ் காத்தமுன்னபியீன் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் வாங்கிய ஓர் உடன் படிக்கயைப்பற்றி நபிவழி டிசம்பர் இதழில் வெளிவந்தது. அதுபற்றி (islamic foundation trust (IFT)) சார்பாக வெளியிடப்படும் மாதமிருமுறை பத்திரிகையாகிய "சமரசம்' ஜனவரி இதழில் ஒரு மறுப்புரையை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மறுப்புரைக்கு அடிப்படை மௌலவி மௌதூதியின் "தர்ஜுமானுல் குரான்" இதழில் வெளியான 'சிந்தனையை கிளறக்கூடிய' (?) பதில்கள்தான் எனவும். குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே தர்ஜுமானுல் குர்ஆனில் முஸ்லிம்களின் உள்ளம் ஒரு நபியை தான் கேட்கின்றது என்பதை மௌலவி மௌதூதியே எழுதி வைத்திருப்பதை இவர்கள் படிக்காதிருப்பது பரிதாபமே!

மௌதூதி இவ்வாறு எழுதுகிறார்:

"பெரும்பாலான மக்கள் மார்க்கத்தை நிலைநிறுத்தத் தூண்டுவதற்காக எத்தகைய ஒரு முழுமையான ஆண் மகனைத்தேடுகிறார்கள் என்றால் அவர் தம்மில் ஒவ்வொரு நபரின் முழுமை தன்மையைப் பற்றிய சிந்தனையின் வடிவமாக இருக்க வேண்டும். அவருடைய எல்லா அம்சமும் வல்லமை மிக்கதாக இருக்க வேண்டும். வேறு சொற்களில் சொல்லப்போனால், இவர்கள் (முஸ்லிம்கள்) நாவினால் கத்மே நுபுவ்வத்தை ஒப்புக் கொண்டாலும், உண்மையில் இவர்கள் ஒரு நபியை எதிபார்கின்றனர். மேலும் எவராவது நுபுவ்வத் தொடர்கின்றது என்ற பேச்சை எடுத்தால் அவருடைய நாவையும், பிடரியையும் பிடித்து இழுப்பதற்கு இவர்கள் ஆயத்தமாகி விட்டாலும் உள்ளேயிருந்து இவர்களின் உள்ளம் ஒரு நபியை வேண்டுகின்றது. நபியை விட குறைவான எவர்மீதும் இவர்கள் திருப்தி கொள்ளவில்லை!" (தர்ஜுமானுல் குரான் டிசம்பர் 1942 janavary 1943 page 406)

ஆக, இறுதி நபி, இறுதி நபி என் இந்த முஸ்லிம்கள் வாய்கிழிய கத்தினாலும் அவர்களின் உள்ளம் ஒரு நபியை வேண்டுகிறது. ஒரு நபியால் தான் சீர்கெட்டுப்போன முஸ்லிம் சமுதாயத்தை சீர்திருத்த முடியும் என்பதையும் முஸ்லிம்கள் நம்புவதை மௌதூதி ஒப்புக்கொண்டுள்ளார். மௌதூதியின் துதி பாடும் சமரசம் பத்திரிகை குறிப்பிட்டுள்ளபடி மௌதூதியின் தர்ஜுமானுல் குரான் இதழில் வெளிவந்த மேற்கண்ட பதிலையும் 'சிந்தனையை கிளறக்கூடிய பதிலாகக் கொள்வார்களா?

அடுத்து, அல்லாஹ் வாங்கிய நபிமார்களின் உடன்படிக்கை பற்றிய விஷயத்திற்கு வருவோம். அல்லாஹ் அனைத்து நபிமார்களிடமும் வாங்கிய ஓர் உடன் படிக்கை பற்றி இவ்வாறு கூறுகின்றான்:

"மேலும் அல்லாஹ் நபிமார்களின் உடன்படிக்கையை வாங்கியபோது, அதாவது நான் உங்களுக்கு வேதத்தையும், 
ஞானத்தையும் தந்த பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைபடுத்தக்கூடிய தூதர் உங்களிடம் வந்தால், நீங்கள் அவர்மீது கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் கண்டிப்பாக அவருக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? என் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று அவன் கூறியதற்கு, ஆம். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார். நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன் என்று அவன் கூறினான்.(திருக்குர்ஆன் 3:82)

மேற்கண்ட வசனத்தில் மீஷாக்குன் நபியீன் என்ற சொல் வருகிறது. இதன் பொருள் நபிமார்களின் உடன்படிக்கை என்பதாகும். இங்கு அன்னபியீன் என்று வந்திருப்பதிலிருந்து அனைத்து நபிமார்களையும் குறிக்கும் என்பதை சாதாரண அடிப்படை மொழி அறிவு கொண்டவர்களால் கூட புரிந்து கொள்ளமுடியும் மௌதூதியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவருக்கு சாதாரண அடிப்படை அரபி மொழி அறிவு கூட இல்லை என்று பொருள். அல்லது தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார் என்று பொருள். இந்த வசனத்தில் நபிமார்களின் உடன்படிக்கை என்பதில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் அடங்குவார்களே அல்லாமல், அவர்களுக்கு எவ்வித விதிவிலக்கையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த மீஷாக் என்னும் உடன்படிக்கையை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் அல்லாஹ் வாங்கியிருப்பதாக நாம் திருக்குரானில் காண்கிறோம்.

"மேலும் நாம் நபிமார்களிடம் அவர்களின் உடன்படிக்கை வாங்கியபோது, உம்மிடமும், நூஹ, இப்ராஹீம், மூசா, மர்யமின் மகன் ஈசா ஆகியோரிடமும், நாம் அவர்களிடம் உறுதி வாய்ந்த உடன்படிக்கை ஒன்றை வாங்கினோம்." ( திருக்குர்ஆன் 33:8)

அதாவது, ஒவ்வொரு நபியிடமும் அவரிடம் உள்ள வேதத்தை உண்மை படுத்தக் கூடிய ஓர் இறைதூதர் வந்தால் அவர்மீது ஈமான் கொள்வதுடன் அவருக்கு உதவி புரிய வேண்டும் என உறுதிமொழி வாங்கப்பட்டது. இந்த உறுதிமொழியைத்தான் அல்லாஹ் காத்த்முன்னபியீன் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடமும் வாங்கியிருக்கின்றான். என்பதை 33:8 வசனத்தில் உள்ள 'மின்க' (உம்மிடமும்) என்ற சொல் உணர்த்துகிறது. இதைத்தான் சமாதான் வழி இதழ் குறிப்பிட்டிருந்தது.

இதனை மறுத்தவாறு சமரசம் இவ்வாறு

"இவ்விரண்டு வெவ்வேறு விஷயங்களையும் முடிச்சுப் போட்டு குர்ஆனில் எங்குமில்லாத மூன்றாவது விஷயத்தை எந்த ஆதாரத்தின்படி உண்டாக்கிகொண்டார்கள்?".

இதற்க்கு எமது பதில்.

'இது எங்குமில்லாத மூன்றாவது விஷயம்' என IFT நிறுவனம் குறிப்பிடுவது அபாண்டமான பொய்யாகும். ஏனெனில் கேரளத்திலுள்ள ஜமாத்தே இஸ்லாமி கொள்கைக் கொண்டிருக்கும் இப் நிறுவனமே, 33:82 வசனத்திலுள்ள எல்லா நபிமார்களிடமும் வாங்கிய உடன்படிக்கைதான் என்பதை கீழ்வருமாறு ஒப்புக்கொண்டுள்ளது

"நபிமார்களிடம் அல்லாஹ் வாங்கிய இந்த உடன்படிக்கை பற்றி இங்கே (33:8)-ம் வசனத்தில்) விவரிக்கவில்லை என்றாலும். சூரா ஆலு இம்ரானில் (3:82-ம் வசனத்தில்) சொல்லப்பட்டதிலிருந்து அந்த உடன்படிக்கை என்ன என்பதை நம்மால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. நபிமார்களிடம் உடன்படிக்கை வாங்கியதாக முதலில் (3:82 ல்) கூறியபிறகு ஐந்து நபிமார்களுடைய பெயரை (33:8-ல) குறிப்பாக எடுத்துக் கூறியிருக்கின்றான்". (திருக்குர்ஆன் விளக்கவுரை 33:7 வசனத்தின் அடிக்குறிப்பு பக்கம் 2574, கனம் வெளியீடு, கோழிக்கோடு 3-வது தொகுதி 1996 நவம்பர்)

அதுமட்டுமல்லாமல், சவூதி அரேபியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள உருது மொழியாக்கத்திலும் 3:82, 33:8 ஆகிய இரு வசனங்களிலும் உள்ள மீஷாக் (உடன்படிக்கை) ஒன்றுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரசம் கூறுவது போல இவ்விரண்டு உடன்படிக்கைகளும் வெவ்வேறு என்றால் மேற்கண்ட மொழியாக்கங்களில் அவர்களின் கொள்கையுடையவர்களே எப்படி இரண்டும் ஒன்று என ஒப்புக்கொண்டார்கள்? தேவை இல்லாத விசயங்களை முடிச்சுப்போட்டு குர்ஆனில் எங்கும் இல்லாத மூன்றாவது விஷயத்தை உருவாக்கி கொண்டார்கள் என சமரசம் அவர்களைப் பற்றியும் கூறத் துணியுமா?

சமரசத்திற்கு ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். இது அஹ்மதி முஸ்லிம்கள் போட்ட முடிச்சு அல்ல இது அல்லாஹ் போட்ட முடிச்சு ஆகும். உங்கள் முன்னோர்களும் அதை ஒப்புக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் போட்ட முடிச்சை முரண்டு பிடிக்காமல் அப்படியே ஒப்புக் கொள்வதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது. அதுதான் சமரச முடிவாகும். எனவே, சமரசத்தின் முடிவும் அதுவாகத்தான் இருக்கவேண்டும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து 'குர்ஆனில் ஒன்றல்ல: பல உறுதி மொழிகளைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன எனக் குறிப்பிடும் மௌதூதி அதற்க்கு எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 2:83, 7:169 ஆகிய வசனங்களின் பனி இஸ்ராயீல்களிடம் உடன்படிக்கை வாங்கப்பட்டதையும். 3:187 ல் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் உடன்படிக்கை வாங்கப்பட்டத்தையும் எடுத்துரைத்து விட்டு நபி(ஸல்) அவர்களிடம் வாங்கிய 33:7 ஆம் வசனத்திலுள்ள உறுதிமொழியை மேற்கண்ட இவ்வளவு உடன்படிக்கைகளில் ஒன்றுடன் கூட சேர்த்துக் கூறாமல் குறிப்பாக 3:81-வது வசனத்தின் உறுதி மொழியுடன் எதற்க்காக இணைத்துக் கூற வேண்டும்? எனக் கேட்கிறார்.

இதற்க்கு நமது பதில், திருக்குரானில் 25 இடங்களில் மீஷாக் (உடன்படிக்கை) என்ற இந்த சொல் வருகிறது. ஆனால் மீஷாக் என்ற சொல் எங்கேயும் நபிமார்களுடன் இணைத்துக் கூறப்படவில்லை. 3:82, 33:8 ஆகிய இரு வசனங்களில் மட்டும்தான் மீஷாக்குன் நபிய்யீன் (நபிமார்களின் உடன்படிக்கை) மீஷாக்கஹும் (அவர்களின் உடன்படிக்கை) என நபிமார்களுடன் இணைத்து அல்லாஹ் கூறியிருக்கின்றான். நாமாக இணைத்து கூறியிருந்தால், எதற்க்காக இணைத்து கூற வேண்டும்? என மௌதூதி நம்மைப் பார்த்து கேட்பதில் கொஞ்சமாவது நியாயமிருக்க முடியும்? அல்லாஹ் தான் இவ்விரு இடங்களில் மட்டும் நபிமார்களுடன் இணைத்துக் கூறியிருக்கின்றான். எனவே இந்தக் கேள்வியை அவர் தம் அறிவீனத்தால் அல்லாஹ்விடம் கேட்க துணிந்துவிட்டார். நபியை மறுப்பவர்களின் மனதில் இவ்வகையான விபரீத எண்ணங்கள் தோன்றுவது இயற்கைதானே.

இதை விட நகைப்பிற்குரிய விஷயம், இவ்விரு உறுதிமொழிகளும் நபியுடன் தொடர்புபடுத்தி கூறப்பட்டிருப்பதால் இவ்விருவசனங்களும் (3:82, 33:8) ஒன்றுக்கொன்று விளக்கமாக இருக்கிறது என்ற உண்மையை மறுப்பதற்கு அவர் கூறியிருக்கும் அதிமேதாவித்தனமான பதில்தான். அவர் கூறுகிறார்: இவ்வாறு வசனங்களும் நபியுடன் தொடர்புடையதாக இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று விளக்கமாக இருப்பதாக எவராவது கூறுவாரேயானால் நபியின் சமுதாயத்திடம் வாங்கிய அனைத்து உறுதிமொழியும் நபியின் மூலமாகத்தான் வாங்கப்பட்டது என நான் கூறுவேன். அவர் சொல்லவரும் கருத்து, உடன்படிக்கை என்ற சொல் நபிமார்கள் என்ற சொல்லுடன் இணைந்து வந்தாலும் இணைந்து வராவிட்டாலும் அதன் பொருள் நபியின் மூலமாகத்தான் வாங்கப்பட்டது என்பதாகும்.. உதாரணமாக பனி இஸ்ராயீலிடம் உடன்படிக்கை வாங்கினோம் என்று வருகிறதென்றால் அந்த பனி இஸ்ராயீலின் நபியின் மூலம் வாங்கினான் என்றுதானே பொருள் பிறகு மீஷக்குன்னபியீன் (நபிமார்களின் உடன்படிக்கை) என நபிமார்களுடன் இணைத்துக் கூறப்பட்டதனால் அவ்விரண்டு மட்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உடன்படிக்கையாக எப்படி ஆகிவிடும்? எனக் கேள்வி எழுப்புகிறார்.

மறுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதனால் இவர்கள் சாதாரண அறிவையும் இழந்து விடுகிறார்கள். இறைவன் ஒரு சமுதாய மக்களிடம் வாங்கும் உடன்படிக்கையை அந்த சமுதாயத்தின் நபியின் மூலமாகத்தான் வாங்குகிறான். என்பதை இந்த முல்லா அறிந்திருக்கும்போது அறிவுமிக்க இறைவன் அதை அறியமாட்டானா என்ன? பிறகு பனி இஸ்ராயீலிடம் உடன்படிக்கை வாங்கினோம். வேதம் கிடைக்கப் பெற்றவர்களிடம் உடன்படிக்கை வாங்கினோம். என்றெல்லாம் கூறும் இறைவன் இரண்டு இடங்களில் மட்டும் நபிமார்களிடம் உடன்படிக்கை வாங்கினோம் என்று ஏன் கூறவேண்டும்? இதிலிருந்து நிச்சயமாக நபிமார்களிடம் உடன்படிக்கை வாங்கினோம் என்று கூறிய இவ்விரு உடன்படிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

3:82 ம் 33:8 ம் ஒரே உடன்படிக்கையைத்தான் குறிப்பிடுகிறது என்ற எமது கருத்தைத்தான் சவூதி அரேபியா மொழியாக்கமும் கேரளா ஜமாத்தே இஸ்லாமி முஜாஹிது பிரிவினரின் மொழியாக்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. அதற்க்கு IFT என்ன பதில் தரப்போகிறது? அவர்களையும் தேவையில்லாத முடிச்சு போடுபவர்கள் என பழி சுமத்துவார்களா? பதில் தரட்டும் சமரசம்! சம ரசனையாக இருக்கும்.!!

அடுத்து 3:82 வசனத்திற்கு மௌலவி பி.ஜே
கொடுத்த விளக்கத்தை பார்ப்போம். அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"இதில் எல்லா நபி மார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடங்க மாட்டார்கள் என்று கருதுவதற்கு இவ்வசனம்(3:82) இடம் தரவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையையே இவ்வசனம் கூறுகிறது." (பி.ஜே- தமிழ் மொழி யாக்கம் 3:82 வசனத்தின் அடிக்குறிப்பு )

நாம் கூறியுள்ள படியும் சவூதி அரேபியா உருது மொழியாக்கம், முஜாஹிது மொழியாக்கங்களின் படியும் அனைத்து நபிமார்களிடம் வாங்கிய அதே உடன்படிக்கைதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமும் வாங்கப்பட்டது என்பதை மௌலவி  பி.ஜே யும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இரண்டு வசனங்களையும் தேவையில்லாமல் அஹ்மதி முஸ்லிம்கள் முடிச்சு போடுகிறார்கள் என்ற மௌதூதியின் வாதம் தவிடு பொடியாகிவிட்டது.

ஹஸ்ரத் நபி(சல) அவர்களிடம் இதே உடன்படிக்கை வாங்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள பி.ஜே நபியை மறுப்பதற்கு ஒரு அந்தர் பல்டி அடித்தார். அவர் எழுதுகிறார்:

"ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வசனம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது".

அதாவது நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும், 
ஞானத்தையும் நான் தந்த பிறகு இன்னொரு தூதர் நபிமார்களாகிய உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்கு உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. இதன் பொருள் என்னவென்றால், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே! உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நாம் வழங்கிவிட்டோம் இனி இதனை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு இறைத்தூதர் உங்களிடம் அதாவது நபி (ஸல்) அவர்களிடம் வந்தால் அத்தூதரை நபி(ஸல்) அவர்கள் ஈமான் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அப்படி எந்த ஒரு இறை தூதரும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் அவர்மீது ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஈமான் கொண்டு, அவருக்கு உதவி இருப்பார்கள் என்று பி.ஜே கூற வருகிறார்.

பி.ஜே எடுத்து வைக்கும் வாதம் என்னவென்றால் 'அல்லாஹ் ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் குர்ஆனில் பயன்படுத்த மாட்டான். நபிமார்களிடம் உடன்படிக்கை எடுக்கும் போது 'உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று அல்லாஹ் கூறுகிறான் 'உங்களிடம்' என்ற வார்த்தை முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். (பி.ஜே குரான் மொழியாக்கம் )

ஆக, 'உங்களிடம் இறைத்தூதர் வந்தால்' என அல்லாஹ் நபியைப் பார்த்து கூறுகிறான். நபியை நோக்கிக் கூறிய வார்த்தை ஆதலால் அது நபிக்கு மட்டுமே பொருந்தும். ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் இருக்கும் போது அப்படி எந்தவொரு நபியும் வரவில்லை. எனவே நபியிடம் வாங்கிய உடன்படிக்கை சமுதாயத்திற்கு பொருந்தாது என்ற ஒரு புதுமையான கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நுபுவ்வத்தின் வாசல் திறந்த்துள்ளது. என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்ட பி.ஜே நபி(ஸல்) அவர்களிடம் வாங்கிய உடன்படிக்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு பொருந்தாது என்று அதிமேதாவித்தனமாக மறுத்துள்ளார். ஆனால் இப்படி மறுப்பதால் அவர் நுபுவ்வத்தை மட்டுமல்ல திருக்குரானின் பல்வேறு வசனங்களையும் மறுக்க வேண்டியது வரும். ஏனெனில் திருக்குரானின் பல வசனங்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை நோக்கி கூறப்பட்டவையாக உள்ளன. ஆனால் அவை சமுதாயத்திற்கும் பொருந்துபவையாக உள்ளன. உதாரணமாக

"நபியே, நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு கொடுக்கும் போது, குறிப்பிட்ட காலவரைக் கேற்ப அவர்களுக்கு மணவிலக்கு கொடுத்து அந்த காலவரையைக் கணித்துக் கொள்ளுங்கள்..."(65:2)...."

இங்கு பொதுவான ஒரு சட்டம் நபியை நோக்கி கூறப்பட்டிருக்கிறது. இது நபிக்கு மட்டுமே உரியது என்று கூற முடியுமா?

எனவே நீர் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுக்கு உரியதை கொடுப்பீராக...(30:39)

இதிலும் நபியை நோக்கியே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இளமைக் காலத்திலேயே உறவினர்களுக்கு மதிப்பளிப்பவர்களாக ஏழைகளுக்கு இறந்குபவர்களாக வழிப்போக்கர்களுக்கு ஆதரவளிப்பவர்களாக விளங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்த நிலையில் அவர்களிடம் மேற்கண்டவாறு கூற வேண்டிய அவசியமில்லை. எனவே நபியை நோக்கி கூறப்பட்டிருந்தாலும் நபியைக் பின்பற்றியவர்களுக்கே இந்தக் கட்டளை எனப் புரிந்து கொள்ள வேண்டும் .ஒரு கட்டளை நபிக்கு மட்டுமே உரியது என்றால் அதனை இறைவன் தெளிவாகக் குறிப்பிடுவான். மேற்கோளாக திருக்குரானில் (33:51) ஆம் வசனத்தில் திருமண விசயத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குக் தரப்பட்ட அனுமதிகளைப் பற்றி குரிப்பிட்டபிறகு,'இந்தக் கட்டளை உமக்கு மட்டுமே ஆகும்' என இறைவன் குறிப்பிடுகின்றான்.

திருக்குரானின் இன்னும் சில வசனங்கள் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை நோக்கிக் கூறப்பட்டவையாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியவையாக உள்ளன. உதாரணமாக, பெற்றோர்களில் ஒருவர் அல்லது அவ்விருவரும் உம்முடைய வாழ்நாளில் முதுமையை அடைந்துவிட்டால் நீர் அவர்களை சீ என்று கூடச் சொல்லாதீர் என வருகிறது (17:24)

இங்கு ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை விளித்து பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனம் இறங்கும் போது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் பெற்றோர் உயிருடன் இல்லை. எனவே இது சமுதாயத்திற்கே பொருந்துகிறது.

எனவே, உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் என்பது நபியை பார்த்து கூறப்பட்டிருப்பதால் அது நபிக்கு மட்டுமே பொருந்தும் என்று பி.ஜே. யின் வாதம் அடிபட்டுப் போகிறது. மாறாக மபிக்கே இந்தக் கட்டளை என்றால், நபியைப் பின்பற்றும் மக்களுக்கு அக்கட்டளை மேலும் அதிகமாகப் பொருந்தும்.

மௌலவி பி.ஜே. இந்த 3:82 வசனத்தின் மூலம் ஹிலுறு நபி உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையை சுட்டிக்காட்டி, ஹிலுறு நபி உயிருடன் இருப்ப்பார் என்றால் அவர் இந்த உடன்படிக்கைப்படி நபி(ஸல்) அவர்களைத் தேடி ஓடி வந்திருக்கவேண்டும். கஷ்டப்பட்ட நேரங்களில் உதவி புரிந்திருக்க வேண்டும். பதர். உஹத் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.... இவ்வசனத்திலிருந்து கிலுறு நபி உயிருடன் இல்லை எனக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம் என எழுதியுள்ளார் (பி.ஜே. யின் தமிழ் மொழியாக்கம் பக்கம்:1028)

கிலுறு நபி ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு உதவி செய்ய வராததை வைத்து கிலுறு நபி மரணமடைந்து விட்டார் என்பதை புரிய முடிந்த பி.ஜே யால் பதர், உஹத் போர்களில் ஹசரத் ஈசா (அலை) அவர்கள் வரவில்லை என்பதிலிருந்து ஈசாவும் உயிருடன் இல்லை. மரணமடைந்து விட்டார். என்பதை புரியமுடியாமல் போனது ஏனோ? நமக்கு புறியவில்லை


இது உலகில் உயிருடன் இருக்கும் நபிக்கு மட்டும்தான் பொருந்தும். வானத்திலுள்ள ஈசா(அலை) அவர்களுக்கு இது பொருந்தாது என்று மௌலவி பி.ஜே கூறி தப்ப்பித்து விடவும் வழி இல்லை காரணம். 1994 கோவையில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தினருடன் நடந்த விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை தான் கூறவில்லை. என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். எனவே 3:82 வசனத்தின்படி கிலுறு உயிருடன் இல்லை என்றால் ஈசா வும் உயிருடன் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது தெளிவு.