அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

மிஹ்ராஜ் பயணம்


ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானுலகில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு அங்கு பலரைச் சந்தித்து முடிவில் இறைவனை நேருக்கு நேராகக் கண்டு பேசி திரும்பினார்கள். இதுவே மிஹ்ராஜ் என பொதுவாகக் கருதப்படுகிறது. இதற்க்கு ஓர் அற்புதத்தை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று திருக்குரானிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் திட்டவட்டமாகத் தெரியவருமானால் முஸ்லிம்கள் தமது பகுத்தறிவுச் சிந்தனையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அதை அப்படியே நம்புவது கடமையாகும்.

ஆனால், மிஹ்ராஜ் என்பது நிகழ்ந்த ஒன்றென்றாலும் அது தற்கால முல்லாக்கள் கூறுவது போன்று நடைபெற்றதா? நபி (ஸல்) அவர்கள்

உண்மையிலேயே வானத்திற்கு சென்றார்களா? அல்லது இந்த முல்லாக்கள், மார்க்கத்தின் பல்வேறு விஷயங்களைக் குழப்பியடித்து, கற்பனை கலந்து சமுதாயத்திலே மூட நம்பிக்கைகளுக்கு வித்திட்டிருப்பது போன்று மிஹ்ராஜ் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பியுள்ளனரா? இது பற்றிய திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் தொகுப்புகளில் இது பற்றி கூறப்பட்டிருப்பவற்றையும் அலசி ஆராய்வது அவசியமாகும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் என்று வாதித்த போது மக்காவாசிகள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திகாட்டுமாறு சொன்னார்கள். இறுதியாக, 'நீர் வானத்திற்கு ஏறிச்செல்ல வேண்டும்: நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்கு கொண்டு வராதவரை நீர் வானத்திற்கு சென்றதையும் நாங்கள் நம்ப மாட்டோம்' என்று கூறினார்கள். இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு கீழ்வருமாறு பதிலளிக்க இறைவன் ஆணையிட்டான். 'நீர் கூறுவீராக, என் இறைவன் தூய்மையானவன் நான் ஒரு மனித தூதரேயன்றி வேறு இல்லை.' ( திருக்குர்ஆன்)

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உடலோடு வானத்திற்கு ஏறிச்செல்லவில்லை என்பது புலனாகிறது. அவ்வாறு சென்றிருந்தால். அதற்க்கான சான்றினை அல்லது சாட்சிகளைக் காட்டுமாறு இறைவன் பணித்திருப்பான். மாறாக, தான் மனிதனாகிய ஒரு தூதரேயன்றி வேறில்லை என்று கூரச்சொன்னது, அது போன்ற ஓர் அற்புதத்தை நிகழ்த்துவது அவர்களால் இயலாத காரியம் என்பதை உணர்த்துவதற்க்கேயாகும்.

மிஹ்ராஜும், இஸ்ரா என்னும் இரவுப் பயணமும்.

பொதுவாக மிஹ்ராஜ் பற்றிப் பேசுகின்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அதாவது மக்காவிலுள்ள கஅபத்துல்லாவிலிருந்து ஜெருசலத்திலுள்ள அக்ஸா பள்ளிவாசலுக்கு சென்றார்கள் என்று ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு, அங்கிருந்து வானுலகு சென்றதாகக் கூறுவார்கள். ஆனால் திருக்குரானின் பனீ இஸ்ராயீல் என்னும் அதிகாரத்தில்,

'தன் அடியாரை சிறப்புக்குரிய (இந்த) மஸ்ஜிதிலிருந்து தொலைவிலுள்ள (அந்த) மஸ்ஜது வரை இரவு நேரத்தில் கொண்டு சென்ற (இறைவன் தூய்மையானவன். (திருக்குர்ஆன் 17:1). என்று காணப்படுகிறது. இதில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்திற்குச் சென்றதாக எந்த செய்தியும் இல்லை.

அதே போன்று மிஹ்ராஜ் பற்றி விபரிக்கப்பட்டுள்ள 'அன்-நஜ்மு' அதிகாரத்தில் 5 முதல் 16 வரையுள்ள வசனங்களில் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஜெருசலத்திற்கு ஓரிரவில் பயணம் செய்ததாக எந்தத் தகவலும் இல்லை. இதிலிருந்து இவை இரண்டும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வெவ்வேறான இரண்டு அனுபவங்கள் என்பதை உணரலாம்.

இவைபற்றிய அறிவிப்புகளை ஆராயும்போது இந்த உண்மை வெளியாகிறது. 'இஸ்ரா' என்று அழைக்கப்படுகின்ற இரவுப் பயணம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை நபியாகப் பிரகடனப்படுத்தியதிளிருந்து பதினோரு ஆண்டுகள் கழிந்த பிறகு நடைபெற்ற ஒன்று என வரலாற்றிலிருந்து தெரியவருகிறது. (சுர்கானி, பாகம் 1, பக்கம் 332) இந்த இரவுப்பயனத்தி விபரிக்கின்ற ஹதீஸ்களும் இக்கருத்தை ஆமோதிக்கின்றன. இப்னு மர்தவியாவும், இப்னு ஸாதும் இந்த இரவுப் பயணம் ஹிஜ்ரத்திற்கு ஓராண்டுக்கு முன் அதாவது, நுபுவத்தின் பனிரெண்டாவது ஆண்டில் நிகழ்ந்ததாக அறிவித்துள்ளார்கள். (அல் - கசாயிசுல் குப்ரா, பாகம் 1, பக்கம் 162)

ஆனால் மிஹ்ராஜோ நபி (ஸல்) அவர்கள் தம்மை நபியாக வாதித்ததிலிருந்து ஐந்தாவது ஆண்டில் நிகழ்ந்த ஒன்று என எல்லா திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஒன்று பட்டு கருத்துத் தெரிவிக்கிறார்கள். எனவே, இஸ்ரா நிகழ்ச்சி, மிஹ்ராஜ் நிகழ்ச்சிக்கு ஏறத்தாள ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்தது என்பதும் அவை இரண்டும் வெவ்வேறான இரண்டு நிகழ்ச்சிகள் என்பதும் உறுதியாகிறது.

இந்நிலையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக இணைத்து இந்த முல்லாக்கள் கூறிவருவது அவர்களின் அறியாமையையே எடுத்துக் காட்டுகின்றது.

மேலும், முஸ்லிம்கள் மீது ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த மிஹ்ராஜின் போதே என்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். இந்த ஐவேளைத் தொழுகை நுபுவத்தின் ஐந்தாவது ஆண்டில் கடமையாக்கப்பட்டது என வரலாற்றில் காணப்படுகிறது. இந்நிலையில் மிஹராஜுடன் இஸ்ராவையும் இணைத்துப் பேசினால்  ஐவேளைத் தொழுகை நுபுவத்தின் பதினொன்று அல்லது பனிரெண்டாம் ஆண்டில் கடமையாக்கப்பட்டது எனக் கூற வேண்டிவரும். இவ்வாறு கூறுவது முழுக்க முழுக்க அபத்தமானதாகும்.

ஏனெனில், ஐவேளைத் தொழுகை நுபுவத்தின் ஐந்தாவது ஆண்டிலேயே கடமையாக்கப்பட்டுவிட்டது என்பதை எல்லா ஹதீஸ் தொகுப்பாளர்களும் உறுதி செய்கின்றனர்.

இரண்டாவது இந்த இஸ்ரா நிகழ்ச்சியின் போது, நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரி உம்முஹானி (ரலி) அவர்கள் மட்டுமே உடனிருந்ததாகக் கூறப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து ஜெருசலேம் வரை இரவில், தாம் செய்த பயணத்தைப் பற்றி இவர்களிடமே முதலில் கூறியுள்ளார்கள். இவர்களிடமிருந்து பெற்று நான்கு வெவ்வேறு அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ள இரவுப் பயணம் பற்றிய செய்தியை ஏழு ஹதீஸ் தொகுப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு அறிவிப்பாளர்களும் நபி(ஸல்) அவர்கள் ஜெருசலேம் சென்று மக்கவிற்குத் திரும்பினார்கள் என்று குறிப்பிடுகிறார்களேயொழிய வானத்திற்கு சென்றதாக சொல்லவேயில்லை. நபி (ஸல்) அவர்கள் இச்சமயத்தில் வானத்திற்கு சென்றதாக கூறியிருந்தால் அதனை உம்முஹானி (ரலி) அவர்கள் கண்டிப்பாக கூறியிருப்பார்கள். அதனை அவர்கள் கூறாததிலிருந்து குறிப்பிட்ட அந்த இரவில் வானத்திற்கு செல்லுகின்ற மிஹ்ராஜ் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது புலனாகிறது. எனவே மிஹ்ராசுடன் ஜெருசலேம் சென்ற இரவுப் பயணத்தைப் போட்டுக் குழப்பவேண்டிய அவசியமில்லை.