அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆதம் நபி சொர்க்கத்தில் வாழ்ந்தார்களா?


அந்-நஜாத் ஆசிரியர் கூறுகிறார் ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்திலிருந்துதான் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்று குரான் (2:35, 7:20,22, 20:121)ஆகிய ஐந்து இடங்களிலும் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகளிலும் தெளிவாகக் குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது".

இதற்க்கு விளக்கம் எழுதுவதற்கு முன் ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

இந்த ஐந்து வசனங்கள், ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் ஒரு தோட்டத்தில் வாழச்செய்து, அங்கு ஒரு குறிப்பிட்ட மரத்தை அணுகக் கூடாது என்றும், அதைத்தவிர அவர்கள் இருவரும்
விரும்பும் இடத்தில் எல்லாம் விரும்பியவற்றைப் புசிக்கலாம் என்றும், ஆனால் ஆதம் (அலை) அவர்கள் விலக்கப்பட்ட மரத்தை அணுகியதால், இறைவன் அவர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் இந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டுமென்றும், உங்களுக்குப் பூமியில் வேறிடத்தில் தங்குவதற்கு இடமும் வசதியும் உண்டென்றும் கூறியிருப்பதை காண்கிறோம்.

இந்த வசனங்களில் குறிப்பிட்ட ஜன்னத் என்ற அரபிச் சொல்லுக்கு, மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் என அந்நஜாத் பொருள் கூறுகிறது. அதாவது ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் இறைவன் சொர்க்கத்தில் வாழச்செய்தான். அங்குள்ள எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்க அனுமதித்தான் ஆனால் ஒரு மரத்தை மட்டும் அணுகவேண்டாம் என்று இறைவன் கூறியிருந்தான் என்று விளக்கம் தருகிறது.

ஆனால் இறைவன் தனது திருமறையின் பிறிதொரு இடத்தில் ஆதம் நபி பற்றி 'நான் எனது பிரதிநிதியை பூமியில் ஏற்படுத்தப்போகிறேன்.(2:30) என்று கூறுகிறான். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களை இறைவன் பூமியில் தான் படைத்தான் என்று தெளிவாகிறது. அதாவது ஆதம் (அலை) அவர்கள் வாழ்ந்த இடம் பூமியிலுள்ள ஒரு தோட்டமேயன்றி, மறுமையில் கிடைக்கும் சொர்க்கமல்ல.

முபரதாத் எனும் அரபி அகராதியில் 'ஜன்னத்' என்பதற்கு கீழ்வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது.

"ஜன்னா என்ற சொல்லுக்கு ஒன்றை மூடக்கூடியது என்றும் ஜன்னா ஹுல்லைலு என்றால் இரவு அதை மூடியது என்றும், ஜன்னத் என்றால் பூமியை மறைக்கக்கூடிய அளவுக்கு அதிகமான மரங்கள் உள்ள தோட்டம் என்றும் பொருளாகும்.

அதாவது 'ஜன்னத்' என்ற சொல் மரங்கள் அடங்கிய தோட்டத்தைக் குறிக்கும். திருக்குரானில் பல்வேறு தமிழாக்கங்களில் எல்லாவற்றிலும் ஜன்னத் என்பதற்கு சோலை, தோட்டம் என்று பொருள்தான் கொடுக்கப்பட்டிருந்தன.

மரணத்திற்குப் பின் கிடைக்கும். சொர்க்கத்தின் அடையாளங்களைப் பற்றி இறைவன் திருமறையில் இவ்வாறு கூறியுள்ளான்.

 சொர்கத்தில் நுழைந்தவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற்றப்படமாட்டார்கள். (15:49)

ஆதம் (அலை) அவர்கள் தமது இடத்தை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டார்.

சொர்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கேட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.(41:32)

ஆதம் (அலை) ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை புசித்ததின் காரணத்தால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

சொர்கத்தில் நாங்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்போம் என்று சொர்க்கவாசிகள் கூறுவார்கள் என்று திருமறை கூறுகிறது. (40:75)

ஆதம் (அலை) அவர்களுக்கு அத்தகைய சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

சொர்கத்தில் சைத்தானுக்கு அனுமதி கிடையாது. ஆனால் ஆதம் நபி வாழ்ந்த சொர்கத்தில் சைத்தான் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவைகளிலிருந்து ஆதம் நபியும் அவரது மனைவியும் சொர்கத்தில் வசிக்கவில்லை என்பதும், அவர்கள் இப்பூமியிலுள்ள ஒரு தோட்டத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.

பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் நாம் ஜன்னத்திலிருந்து வெளியேற்றினோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த திருக்குர்ஆன் வசனதிர்க்கு பிர்அவ்னும் அவனை சார்ந்தவர்களும் சொர்கத்தில் வாழ்ந்தார்கள் என்று நாம் பொருள் கொடுக்க முடியுமா?

மேலும் அந்த இடத்திலிருந்து ஆதமையும் அவரது மனைவியையும் மட்டுமின்றி 'நீங்கள் எல்லோரும் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறியதிலிருந்து ஆதம்(அலை) அவர்களை ஒப்புக்கொண்ட அனைவருக்குமுள்ள கட்டளைதான் இது என்றும், சொர்கத்தில் வசிப்பவர்களுக்க இடப்பட்ட கட்டளையல்ல என்றும் தெரிகிறது.

நவீன கண்டுபிடிப்புகளிலிருந்து இந்த தோட்டம் பாபிலோனியாவுக்கு அருகாமையிலுள்ள ஒரு தோட்டம் என தெரியவந்துள்ளது.