அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தவ்ஹீதின் தத்துவம்


ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

புனித கலிமாவில் பொதிந்துள்ள கருத்தை கவனியுங்கள் ! “லாயிலாக இல்லல்லாஹ்” என்ற கலிமாவை ஒரு மனிதன் நாவினால் மொழிந்து அதன் பொருளான, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்பதை தனது உள்ளத்தில் உறுதிபடுத்துகிறான். “இலாஹ்” எனும் அரபி மொழிச் சொல் வணக்கத்திற்குரியவன், நேசத்திற்குரியவன், விருப்பத்திற்குரியவன் என்றெல்லாம் பொருள்படும்.

இந்தக் கலிமா முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள திருக்குர் ஆனின் சுருக்கமாகும்.. இதன் பொருள் என்னவெனில், இறைவனை

முதன்மையானவனாகக் கொள்ளாதவரை இறைவனை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக எண்ணாத வரை இறைவனையே இலக்காகக் கொள்ளாத வரை மனிதனால் இரட்ச்சிப்புப் பெற இயலாது என்பதாகும்.

எவர் “ லாயிலாஹ இல்லல்லாஹ் “ என்று கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என்றொரு நபிமொழி உண்டு. மக்கள் இதன் கருத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாவால் மட்டும் கலிமா சொன்னால் போதுமானது என இவர்கள் நினைக்கிறார்கள். அதன் மூலம் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணுகிறார்கள்.

இறைவன் சொற்களோடு தொடர்பு வைப்பதில்லை. அவன் இதயத்தோடு தொடர்பு கொள்கிறான். இந்த நபிமொழியின் கருத்து என்னவெனில், எவர் உண்மையில் இந்த கலிமாவை தமது இதயத்திலே பதிய செய்வாரோ, எவர் இறைவனின் எல்லா மகத்துவங்களையும் தமது இதயத்திலே இடம்பெறச் செய்வாரோ அவரே சுவர்க்கத்தில் நுழைவார் என்பதாகும்.

ஒரு மனிதன் கலிமாவை உண்மையாக ஏற்றுக்கொள்கின்றபோது அவனுக்கு இறைவனைத் தவிர வேறெதுவும் நேசத்திற்குரியதாகவோ வணக்கத்திற்குரியதாகவோ தோன்றுவதில்லை. இறைவனைத்தவிர வேறெதையும் அவன் விரும்புவதுமில்லை. இதுவே “அப்தால்” “குத்துப்” “கவுஸ்” என்பன போன்ற ஆன்மீக நிலைகளாகும். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் மீது உளப்பூர்வமான நமிக்கைக்கொண்டு செயல்படுவதென்பது இதுவேயாகும்.

நாம் சிலையயோ மனிதனையோ வணங்கவில்லை என நீங்கள் பெருமைக் கொள்ள வேண்டாம். சிலைகளை வணங்குவதிலிருந்தும் மனிதனை வணங்குவதிலிருந்தும் விலகுவதென்பது ஒரு சாதாரண விஷயமாகும்.

இறை ஞானத்தையும் சத்தியத்தையும் அறியாத இந்து மத்தைச் சார்ந்தவர்கள் கூட தற்போது சிலை வணக்கத்தைக் கைவிட்டு வருகின்றனர். நீங்கள் சிலைகளை வணங்காததால் மட்டும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் நோக்கம் நிறைவேறாது. சிலைகளைத் தவிர வேறு பல பொய்த் தெய்வங்கள் உண்டு. அவை அனைத்தையும் விட்டொழிப்பது அவசியமாகும். மனோ இச்சை, உலக ஆசை இவையும் மனிதன் வணங்குகின்ற சிலைகளேயாகும். “லாயிலாஹ இல்லல்லாஹ்” இதனையும் தடை செய்கிறது.

ஒரே இறைவனைத் தவிர மற்ற எல்லாவிதத் தெய்வங்களையும் இவ்வுயரிய “கலிமா “மறுக்கிறது. மனயிச்சையின் தெய்வங்களையும், உலக நேசம் என்ற தெய்வத்தையும் இதயத்திலிருந்து அகற்றி ஏக இறைவனான அல்லாஹ்விற்கு மட்டுமே அதில் இடம் அளிப்பதே புனித கலிமாவை உண்மையில் ஏற்றுக் கொள்வது ஆகும்.

சில சிலைகள் வெளிப்படையானவை. சில சிலைகள் நுட்பமானவை. உதாரணமாக இறைவனைத் தவிர ஏனையவற்றில் நம்பிக்கை வைப்பதென்பது ஒரு சிலையாகு. ஆனால் அது ஒரு நுட்பமான சிலை என்று கூறலாம். மனிதனுக்கு டைஃபாய்டு போன்ற வெளிப்படையான நோய்களும் காசநோய் போன்ற நுட்பமன நோய்களும் ஏற்படுவதுண்டு. வெளிப்படையான நோய்களிலிருந்து அவன் குணமடைவது எளிது..ஆனால் மக்கள் தங்கள் கையிடுக்குகளில் வைத்துக் கொண்டுத் திரியும் நுட்பமான சிலை(களெனும் நோய்க)ளை அகற்றுவது சிரமமானது. பெரிய தத்துவ மேதைகளாலும் அறிஞர்களாலும் கூட தமது உள்ளங்களிலிருந்து இத்தகு சிலைகளை எடுத்தெறிய இயலாதிருக்கிறது.

ஏனெனில் அவை மிக நுட்பமான கிருமிகளைப் போன்றிருக்கின்றன. இறையருள் எனும் பூதக்கண்ணாடியின்றி அவற்றை கானயியலாது. இவை மனிதனுக்கு பெரும் தீங்கிழைக்கின்றன. இறைவனுக்குரியவற்றையும் பிறருக்குரியவற்றையும் இவை தங்கு தடையின்றி மோசம் செய்கின்றன. மார்க்கத்தை கற்றறிந்தவர்களென கருதப்படும் ஆலிம்களும் மவ்லவிகளும் நபி மொழிகளை கற்றிருக்கிறார்கள் ஆனாலும் தம்மிடமுள்ள இத்தகு சிலைகளை இவர்களால் கூட கண்டறிய முடிவதில்லை. இவற்றை அவர்கள் வணங்கி வருகின்றனர்.

இச்சிலைகளை விட்டு விடுவதென்பது மன உறுதிமிக்க ஒரு செயலாகும். ஆனால் இச்சிலைகளில் பின்னால் செல்கின்றவர்களோ தமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்களின் சொத்துகளை அபகரிக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வேட்டையாடி விட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் உலகப் பொருட்களுக்காக அலைவதோடு அவற்றின் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றனர். எதுவரை இத்தகு செயல்கள் ஒழிவதில்லையோ அதுவரை ஏகத்துவம் நிலை நாட்டப்பட்டுவிட்டது என்று கூற இயலாது. பெரும்பாலான மக்கள் இதனை உணர்வதில்லை. நாங்கள் கலிமா சொல்லவில்லையா? என இவர்கள் கேட்கிறார்கள். நிச்சயமாக நீங்கள் கலிமா வை படிக்கவில்லை என்றே இவர்களிடம் கூறவேண்டியதிருக்கிறது. கலிமா என்பது உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் ! (இவர்களிடம் உணர்வு இல்லையெனில் இவர்கள் கலிமா வைப் படித்தவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்?)……………….. ஆணவம், தற்பெருமை, வஞ்சகம், ஏமாற்று, துரோகம் இன்னும் இவைப்போன்ற கேடுகளிலிருந்து மனிதன் விலகுவதே தவ்ஹீதின்-ஏகத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும். இத்தகைய சிலைகளை ஒருவன் தனது உள்ளத்திலிருந்து அகற்றாதவரை அவன் “ லாயிலாஹ இல்லல்லாஹ் “ என்று கூறுவதில் உண்மையாளனாக இருக்கின்றான் என்று எவ்வாறு கூற முடியும்? இவற்றை உதறித்தள்ளாமல் நாவினால் மட்டும் கலிமா கூறுவதால் என்ன பயன் ஏற்பட முடியும்? மனயிச்சையினால் ஏற்படும் பொறாமை, துவேஷம் ஆகியவற்றை நிரந்தரமாக விட்டுவிடுபவனே, இறைவன் ஒருவனென்றும் அவனுக்கு இணை எதுவுமில்லை என்று உளப்பூர்வமாக நம்புகின்றவனாவான். மனிதனின் இதயமெனும் நிலத்தில் எலிகளைப்போல் நோய்களைப் பரப்பும் இத்தகைய பொய்த் தெய்வங்களை எரித்து சாம்பலாக்காதவரை மனிதன் தூய்மை பெறயியலாது. எவ்வாறு எலிகள் பிளேக் எனும் கொள்ளை நோயை கொண்டு வருகின்றனவோ அவ்வாறே இந்த எலிகளும் மனிதனின் உள்ளத்தை கெடுத்து அவனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.