அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

கோவை விவாதம்: இமாம் மஹ்தியை (அலை) அவர்களைப் பற்றி பொய்யரின் புலம்பல்


திருக்குர்ஆன் அடிக்குறிப்பு எண் 187 (9வது பதிப்பில்) பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்:

அது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவர் தன்னை நபி என்று வாதிட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பொய்யர் என்று நிரூபணமானது.

நம் விளக்கம்:

1. ஒரு மௌலவிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த அளவு எதைப் பற்றி எழுதுகிறோமோ அது பற்றிய அடிப்படை அறிவு தேவை. அது பி.ஜே என்ற பொய்யருக்கு இல்லை என்று தெளிவாகிறது. பாகிஸ்தானில் காதியான் என்ற ஊர் இல்லை. அது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதனைக் கூட தெரியாதவர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நுபுவத்தைப் பற்றி எப்படி அறிந்திருக்க முடியும்?

2. அவர் வாழ்ந்த காலத்திலேயே பொய்யர் என்று நிரூபணமானது என்று கூறுகிறார். ஒவ்வொரு உண்மை நபியை பற்றியும் பகைவர்களின் புலம்பல்களையே பி.ஜே யும் கூறியுள்ளார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்துக் கொண்டால், இஸ்ரா – மிஹ்ராஜ் சம்பவத்திலும், உஹத் போரிலும், அவர்களின் மரணத்தின் போதும் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த அளவுகோலின் படி, இஸ்லாத்தின் எதிரிகள், மறுப்பவர்கள் பார்வையிலும் அவர் பொய்யர் என்று அவர் காலத்திலேயே நிரூபணமானது (நவூதுபில்லாஹ்) என்று பி.ஜே முஸ்லிம் அல்லாதவராக அதாவது ஒரு இந்துவாகவோ, யூதராகவோ, நாத்திகராகவோ பிறந்திருந்தால் எழுதியிருக்கக் கூடும்.

நபி மொழியில் வருகிறது.

மறுமையில் ஒரு நபி அவரைப் பின்பற்றுபர்கள் எவருமின்றி தன்னந்தனியே செல்வார்கள். எவரும் அவர்களின் வாழ் நாளில் பின்பற்றவில்லை என்பதினால் அவர் வாழ்நாளில் நபி இல்லை என நிரூபணமாகிவிடுமா?

பி.ஜே யின் கருத்துப்படி, ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் தம் தூதுச் செய்தியைப் போதித்தும் அவரைத் மனைவியும் மகனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ளவில்லை. என்பதால் பொய்யர் ஆவாரா?

நபி (ஸல்) அவர்களின் சம காலத்தில் அரபுலகில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களும், சிலை வணங்கிகளும் அன்னாரை நபி என்று ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அளவுகோலின் படியும் நபி (ஸல்) அவர்கள் பொய்யர் (நவூதுபில்லாஹ்) என்று நடுநிலை தவறியவன் எழுதக் கூடும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தோன்றிய பொய் நபிமார்கள் தம் வாழ்நாளிலே வேரோடும், வேரடி மண்ணோரும் அழிந்து போனார்கள். அதற்குப் பின்னர் நம் காலம் வரை தோன்றிய பொய் நபிமார்களுக்கும் முகவரி இல்லை. அவ்வளவு ஏன் எனக்குப் பிறகு 30 பொய் நபிமார்கள் தோன்றுவார் என்று நபி மொழியில் கூறப்பட்ட அனைத்தும் பொய்யர்களைப் பற்றியும் எந்த மௌலவிக்கும் தெரியாது. அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களைப் பற்றி பி.ஜே க்கும் முகவரி தெரிந்திருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் ஜமாஅத் 120 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 கோடி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு கலீபாவின் கீழ் தொடர்ந்து வளர்ந்து வருவது அவர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாகும்.