அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

வீடுகளில் ஒழுக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துங்கள்.

.
பொய் எல்லாத் தீமைகளுக்கும் குழப்பங்களுக்கும் அச்சாணியாகவும் எல்லாப் பாவச் செயல்களின் வித்தாகவும் இருக்கின்றது.


நன்மையில் துவக்கப்படுவது நன்மையில் முடிவதைப் போல் தீயதில் துவக்கப்படுவது தீமையில்தான் முடிவடையும்.

இன்னாமஅல் அஹ்மாலு பின் நியாத் – எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையப்பெறும் என்ற நபி மொழியின் கருத்தும் இதுவேயாகும்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமும் துவக்கமும் எப்படி இருக்குமோ அதற்கேற்றவாறே அதன் முடிவும் அமையும்.



பொய்யில் தனது பயணத்தை தொடங்குபவரால் ஒருபோதும் உண்மையை அடைய இயலாது. அவருடைய வாழ்வில் பொய்யும் புரட்டும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய தீய செயல்களும் பெருகும். இறுதியில் அவரது முடிவும் அதற்கேற்றவாறே அமையும்.


ஹக் என்பது அல்லாஹ்வின் குணப் பெயராகும். அதாவது அல்லாஹ் உண்மையின் வடிவாகவும், சத்தியத்தின் உறைவிடமாகவும் இருக்கின்றான். எனவே பொய்யை ஒரு சாதாரண துர்குணமாக மட்டும் எண்ணாதீர்கள். அதன் தீய விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்,


சமுதாய சீரமைப்பில் நல்லொழுக்கத்திற்கு பெரும் பங்குண்டு. நபி (ஸல்) அவர்கள் மனித இனத்திற்கு தலைவராகவும், வழிகாட்டியாகவும் நியமிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த அளப்பரிய நேசமேயாகும். இதனாலேயே தூய திருமறை அவர்களை “ரஹ்மதுலில் ஆலமீன்” (அனைத்துலகிற்கும் ஓர் அருட்கொடை) என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. இது வேறு எவருக்கும் கிடைக்காத சிறப்பாகும்.


‘ரஹ்மத்” (அருள்), “நஸியத்” துடன் (போதிப்பதுடன்) தொடர்புடைய ஒன்றாகும். பெற்றோர்களுடைய நேசமற்ற தன்மை பிள்ளைகளை பாதிக்கும் ஒரு செயலாகும். சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கும் பெற்றோர்களிடத்தில் பிள்ளைகளுக்கு நேசமும் அன்பும் இருக்காது. இத்தகைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நஸியத் (போதனை) செய்தாலும் அதில் கடுமையான அகம்பாவமே காணப்படும். சிறு பிள்ளைகள் நுண்ணறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். சிறு பிள்ளைதானே அவர்களுக்கு என்ன தெரியும் என நினைத்து செயல்படுவது பெரும் தவறாகும்.


குழந்தைகள் கள்ளமில்லாதவர்கள் அதனால் அவர்கள் அறிவும் கூர்மையானதாகவும் ஒளிமிக்கதாகவும் இருக்கும். சிறு பிள்ளைகள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று என்னும் பெற்றோர்களே எதுவும் தெரியாதவர்கள். வீட்டில் என்ன நடைபெறுகிறது, பெற்றோர்களின் மனநிலை, அவர்களின் எண்ணங்கள், அவர்கள் நன்மையை நாடுபவர்களா அல்லது தீயதை ஏற்பவர்களா என்பதெல்லாம் பிள்ளைகளுக்கு நன்றாகத் தெரியும். எனவே நல்லொழுக்கமற்ற பெற்றோரின் போதனைகளை பிள்ளைகள் நிச்சயமாக ஏற்று நடக்கமாட்டார்கள். பிள்ளைகளுக்கு அவர்களின் இயலாமை அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாதிருக்கிறது.


சில சமயங்களில் பெற்றோர்கள் எல்லை கடந்து போகும்போது பிள்ளைகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. அப்போது அவர்களுக்கு அடியும் உதையும் விழுகின்றது. ஆனால் பிள்ளைகளை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது தாங்கள்தான் என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை. பெற்றோர்கள் வீடுகளில் ஏற்படுத்தும் மோசமான சூழ்நிலைகள் அந்த பெற்றோர்களிடத்தில் பிள்ளைகளுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாமல் செய்துவிடுகிறது. இதனால் இத்தகைய பெற்றோர்களின் போதனைகளுக்கு எவ்வித பயனும் இருப்பதில்லை. அன்பும், நேசமும் உள்ள ஒரு சூழல் வீட்டில் இருக்கும்போதுதான் பெற்றோர்கள் செய்யும் போதனைகளால் நற்பயன் ஏற்ப்படும். எனவே சின்ன சின்ன விஷயங்களை முன்னிட்டு மனக் கசப்பை ஏற்ப்படுத்தாதீர்கள். உங்கள் வீடுகளில் அமைதி நிலவும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்துங்கள்.