அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இறைவன் பேசும் தெய்வமா? பேசாத சிலையா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 19 இல் காளைக் கன்று என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. இதுதான் கடவுள் மூஸா வழி மாறிச் சென்று விட்டார் எனக் கூறி அம்மக்களை நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். (திருக்குர்ஆன் 20:96) 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் 20:95-96 வசனத்துக்கு பி.ஜே யின் மொழியாக்கம்: 


சாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். 

தமிழின் பிற தமிழாக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய இவ்வாறே உள்ளன. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் மொழியாக்கம்: 

சாமிரியே உன் விஷயம் என்ன என்று (மூஸா) கேட்டார். அவன் கூறினான், இவர்கள் காணாததை நான் கண்டேன். அந்தத் தூதர் கூறியவற்றுள் சிலவற்றை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் பின்னர் நான் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டேன். என் உள்ளம் இதனையே அழகு வாய்ந்ததாக்கிக் காட்டிற்று.

இந்த வசனத்திற்கு சிலர் தம் விளக்கத்தைக் காண்போம். 

1) அப்துல் வஹ்ஹாப் தன் அடிக்குறிப்பு 194 இல் 

அத்தூதர் (ஜிப்ரீலின்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்து இக்காளைக்கன்று சிலை மீது நான் போட்டேன். ஏனென்றால் அத்தூதர் காலடி பட்டவுடன் அந்த இடங்களில் புற்பூண்டுகள் பசுமையாகக் கண்டேன் என்று சாமிரி கூறினான் என்று எழுதுகிறார். 

2) மௌதூதி 20:96 வசனத்தின் அடிக்குறிப்பு எண் இல், 

அய்யா! உருக்கப்பட்ட தங்கத்தின் தங்களின் (மூஸா நபி) காலடி மண்ணை நான் போட்டதுமே அதிலிருந்து சிறப்பு வாய்ந்த இக்காலைக் கன்று வெளிப்படலாயிற்று. தங்களின் காலடி மண்ணின் பாக்கியமாகும் இது என்று சாமிரி கூறியதாக எழுதுகிறார். 

3) தப்ஸீருல் ஹமீதின் 20:96 வசனத்திற்கு உத்தமபாளையும் மௌலானா தரும் விளக்கமானது. 

ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குதிரையின் மீது ஏறி வந்ததையும் அக்குதிரை வழியில் வறண்ட இடங்களில் தன் கால்களை வைக்கும்போதெல்லாம் அக்காலடிப்பட்ட இடத்திலிருந்து அதே நொடியில் புற்பூண்டுகள் உண்டானதைப் பார்த்து இதில் விஷேசமிருக்கிறது எனக்கருதி அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதியுள்ளார். 

4) பக்கியத்துஸ் ஸாலிஹாத் வெளியிட்ட தப்ஸீரில் ஜிப்ரீல் வந்த குதிரையின் குளம்புபட்ட மண்ணெடுத்து இச்சிளைக்குள் போட்டுப் பார்த்தேன். இது கனைக்கத் துவங்கியது என்று எழுதப்பட்டுள்ளது. 

5) அன்வாருல் குர்ஆன், தூதரின் பாதத்தடியிலிருந்து ஒரு பிடியை (மண்ணை) எடுத்து அதன் வாயில் போட்டேன். அது சப்தமிட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 

மேலே கூறப்பட்ட விளக்கத்திலிருந்து 

1) ஒருவர் மூஸா நபியின் காலடி மண் என்கிறார். 2) ஒருவர் ஜிப்ரீலின் காலடி மண் என்கிறார். 3) ஜிப்ரீல் வந்த குதிரையின் காலடி மண் என்று ஒருவர் கூறுகிறார். 4) காளைக்கன்றின் சிலையிலிருந்து சப்தம் வந்தது என்கிறார் ஒருவர். 5) உருக்கிய உலோகக் கலவை தானே சிலையாகி சப்தமிட்டது என்கிறார் ஒருவர். 6) ஒருவரோ குதிரையின் காலடி மண் என்பதால் கன்றின் சிலை கனைத்தது என்கிறார். 

மூஸா நபியின் காலடி மண்ணுக்கு இத்தகு அற்புதம் இருப்பதை இஸ்ரவேல் மக்களும், பிர்அவுனும் அவன் கூட்டாளிகளும் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்தான். 

மண் எதில் வீசப்பட்டது? 

7) சிலர் காளைக்கன்றின் மீது என்றும், ஒருவர் காளைக் கன்றின் வாயில் என்றும், மற்றொருவர் உருக்கப்பட்ட தங்கத்தில் என்றும் இன்னொருவர் சிலைக்குள் என்றும் கூறுகின்றனர். 

8) மேலே கூறப்பட்டவர்கள் எல்லோரும் மண் என்பதில் ஒன்றுபடுகின்றனர். அந்த மண் எங்கிருந்து வந்தது? திருக்குரானின் மூலத்தில் மண் என்றும் வரவில்லை. சிலை என்றும் வரவில்லை. மண்ணையும் சிலையையும் அவர்கள் எங்கிருந்து கொண்டுவந்தனர். அதாவது மண்ணையும் சிலையையும் குறிக்கும் சொல் குர்ஆனின் மூலப்பாடத்தில் இல்லை. அதனால் மண்ணையும் சிலையையும் பற்றி மொழியாக்கத்தில் கூறவில்லை. சிலர் அடைப்புக்குள் மண்ணையும் சிலையையும் போட்டு எழுதுயுள்ளனர். அப்துல் ஹமீது பாகவி மண்ணையும் சிலையையும் வெளிப்படையாக எழுதியுள்ளார். 

9) திருக்குர்ஆனில் கூறப்படாத சொற்களாகிய மண்ணையும் சிலையையும் விளக்கத்தில் கொண்டு வந்து, நபிமொழியிலும் கூறப்படாத ஒரு கட்டுக் கதையை இவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ்வும் ரஸூலும் கூறாததைக் கூறுபவர்கள் அவர்கள் மீது இட்டுக் கட்டியக் கூறிய குற்றத்திற்கு ஆளாவர். அல்லாஹ்தான் இவர்களை மன்னிக்க வேண்டும். 

இறுதியாக, பி.ஜே தர்கா வழிபாடு எனும் நூலின் பக்கம் 37 – இல் 

ஸாமிரி என்பவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காலை மாட்டைச் செய்து அதை இரத்தமும் சதையும் கொண்ட காலியாக ஆக்கி அதை சப்தமிடச் செய்தான். இந்த விபரங்களைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக்கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் பட்டது.... (அல் குர்ஆன் 20:88-90) என்று எழுதியுள்ளார். 

1) படைக்கும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் பி.ஜே அந்த சக்தி சாமிரிக்கு இருந்தது என்று நம்புகிறார். இது தவறாகும். 

2) திருக்குர்ஆனில் காளைக்கன்று என்றுதான் வருகிறது பி.ஜே காளைக் கன்றை மாடாக மாற்றிவிட்டார். 

தங்கத்தால் உருக்கப்பட்ட ஒரு சிற்பம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. உலோக சிற்பத்தை சதையும், இரத்தமும் கொண்டதாக பி.ஜே மாற்றிவிட்டார். 

4) அதிலிருந்து ஒரு சப்தம் வந்தது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதனால் உயிர் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இரத்தமும் சதையும் அக்கன்றுக்கு பி.ஜே வைத்துவிட்டாரா? இன்றைய நாகரிக உலகில் பிளாஸ்டிக், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் அந்தந்த உருவங்களின் சப்தத்தை வெளியிடுவதால், அதற்கு உடலும், உயிரும், இரத்தமும், சதையும் இருக்கிறது என்று பி.ஜே ஒப்புக் கொள்வாரா?

5) இன்றைய நவீன கட்டட கலைஞர்களும் வியக்கவும் திகைக்கவும் செய்யுமளவுக்கு பிரமிடுகளைப் படைத்து பிரமிக்க வைத்த எகிப்தியர்களுடன் வாழ்ந்த சாமிரி ஒரு காளைக்கன்றின் உலோக சிற்பத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கொண்டு வர முடியாதா?

மொத்தத்தில் சாமிரிக்கு படைக்கும் ஆற்றல் வழங்கி அவனை அல்லாஹ்வின் தகுதிக்கு உயர்த்தி விட்டார்கள். இவர்கள் தங்களைத் தவ்ஹீது வாதி என்று தம்பட்டம் அடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் ஈடிணையில்லா ஜோக். 

6) 20:96 - இல் அந்தக் கன்றுக் குட்டி அவர்களுடன் எவ்விசயத்திற்கும் பதிலளிக்கவில்லை என்பதையும், மேலும் அவர்களுக்கு எந்தத் தீமையோ நன்மையோ செய்ய அதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர்கள் காணவில்லையா? என்று இறைவன் கேட்கிறான். இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், கடவுள் என்றால், அவர் பேச வேண்டும்; தீமையோ நன்மையோ செய்ய வேண்டும். இந்த கன்றின் சிலை பேசாது. தீமையோ நன்மையோ செய்யாது. எனவே இது கடவுள் இல்லை. சிலை என்பதாகும். 

பி.ஜே யும் அவரைப் போன்றோரும், அல்லாஹ் வஹி அனுப்புவதை நிறுத்தி விட்டான். அதாவது பேசுவதை நிறுத்தி விட்டான் என்று நம்புகின்றனர். அப்படி என்றால், அல்லாஹ்வை சிலையாகிய பொய்த் தெய்வம் என்று நம்புவதாகும். (நவூதுபில்லாஹ்) என்பது விளங்கவில்லையா? 

41:31-32 எங்கள் இறைவன் அல்லாஹ் எனக்கூறி, அதில் நிலைத்திருப்பவர்களிடம் நீங்கள் அஞ்ச வேண்டாம்; கவலைப்படவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (மேலும் அவர்கள்) நாங்கள் இவ்வுல வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் நண்பர்கள் என்றும் கூறுவார். வஹி வரும் என்பதை இவ்வசனங்கள் காட்டவில்லையா?