அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இஸ்ரேலிய தீர்க்கதரிசி ஏசுநாதர்


இயேசு முழு உலகிற்காகவும் வந்தாரென்ற ஒரு பொய்க் கூற்றைத் தாங்கள் நம்புவதுடன், பிறரையும் நம்ப செய்யவேண்டும் என்ற ஒரு பகீரதப்பிரயத்தனத்தில் நீண்ட காலமாக கிறிஸ்தவப் பிரசாரகர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சிறிதளவு கூட உண்மையற்ற இக்கூற்றிற்கு பைபிள் ஆதாரம் இல்லையென்பதுடன், அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும் இது அறவே ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது தெளிவாகிவிடும்.

வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்ற சட்டமும், உலகம் தட்டையானது என்ற வாதமும், எல்லாக்காலங்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருத்தமானது என்று எந்த புத்தியுள்ள மனிதனாவது ஏற்றுக் கொள்ளமுடியுமா? இது மட்டுமின்றி, இன்னும் ஏராளமான முன்னுக்குப்பின்
முரண்பட்ட, பொருத்தமற்றவைகளை எல்லாம் பைபிளில் சுமந்தது கொண்டு, விழுங்கவும் முடியாமல், கக்கவும் முடியாமல் கிருஸ்தவ பிரச்சாரகர்கள். திண்டாடிக்கொண்டிருகின்றனர்.

பகுத்தறிவு கொண்டு, ஆராயும் கண்களுடன் சிறிது பைபிளில் புதிய ஏற்பாட்டை நோக்கினால், இன்று கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இயேசு போதித்த மார்க்கமல்ல: இயேசு பாலஸ்தீனத்தில் இருந்த காலமெல்லாம் அவருக்கும், அவருடைய சீடர்களுக்கும் பரம விரோதியாயிருந்து, அவர் அங்கிருந்து சென்ற பின் அவரை விசுவாசிப்பதாகக் கூறிய "பவுல்" என்பவர் போதித்த மார்க்கமே என்பதை தெளிவாகக் கண்டு கொள்ளலாம். விருத்த சேதனம் புறக்கணிக்கப்பட்டதும், பன்றி மாமிசம் போன்றவை அனுமத்திக்கப்பட்டதும் இந்த "பவுல்" உடைய கைங்கரியமே. முடிவாக இயேசு அறியாத, அவர் போதிக்காத ஒரு புதிய மார்க்கமே பவுல் என்பவரால் உண்டாக்கப்பட்டு, அதுவே இன்று இயேசுவின் மார்க்கமாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

யூதரல்லாத மற்றவர்களுக்கு உபதேசிக்கப்படுவது பற்றி இயேசு, "காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடியல்ல", என்று கூறியதாக மத்தேயு 15:24 இல் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இன்னும் கடுமையான முறையில், 'பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குப் போடுவது நல்லதல்ல." என்றும் கூறியிருக்கிறார். (மத்தேயு 15:26) 

அதுமட்டுமின்றி தன்னுடைய சீடர்கள் பன்னிருவரையும் இயேசு பிரச்சாரத்திற்கு அனுப்பும் போது, "நீங்கள் புற ஜாதியினர் நாடுகளுக்கு போகாமலும், சமேரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போங்கள்." என்று கட்டளையிட்டு அனுப்பியதாக மத்தேயு 10:5,6 வசனங்களில் தெளிவாகவே கூறப்பட்டிருப்பதால், இதற்க்கு விளக்கமே தேவையில்லை.

இயேசு பிறப்பதற்கு முன்பு, யோசேப்பின் கனவில் தோன்றிய தேவ தூதன், "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனெனில் அவர், தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். என்றான்." என்று மத்தேயு 1:21 இல் வருகிறது. இதில் அவர் வந்து உலக மக்களின் பாவத்தை நீக்குவார் என்றோ, உலக மக்களை இரட்சிப்பார் என்றோ கூறாமல், தமது ஜனங்களை என்றே கூறப்படுகிறது.

இயேசு பிறந்த உடன், அவர் பிறந்து விட்டார் என அறிந்த யூதவேத சாஸ்திரிகள், "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டதாக மத்தேயு 2:2 இல் வருகிறது. மேலும் யூத மத அறிஞ்சர்களிடம் அக்கால மன்னன் இயேசுவின் பிறப்பைப்பற்றி வினவிய போது, அவர்கள், யூதேய தேசத்தில் உள்ள பெத்லகேமே, யூதேயாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல. என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் உறைக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். என மத்தேயு இரண்டாவது அதிகாரம் ஆறாம் வசனத்தில் இஸ்ரவேலை ஆளும் பிரபு என்று கூறப்படுகிறதேயொழிய உலகத்தை ஆளும் பிரபு என்றதல்ல.

இயேசு தேசாதிபதி விசாரணை செய்த சமயம், ............ தேசாதிபதி அவரை நோக்கி, நீ யூதருடைய ராஜாவா என்று எழுதப்பட்டுள்ளது. (மத்தேயு 27:11) இது விசாரணையின் போது அவரே கூறிய பதிலாகும்.

அவருடைய எதிரிகள் அவரை, "........... யூதருடைய ராஜாவே வாழ்க என்று பரியாசம் பண்ணி .......... (மத்தேயு 27:29) என்றும், "........ அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்திரத்தைக் கண்டிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி அவர் சிரசுக்கு மேல் வைத்தார்கள்" அன்றும் (மத்தேயு 27:37) யூதருக்கு வந்தவராகவே வரிசையாக பைபிளில் வருகிறது. முடிவாக யூதர்கள், "இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ள திராணி இல்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும். அப்பொழுது அவனை விசுவாசிப்போம்." என்று கூறினார்கள் என்று வருகிறது.

மேற்கண்ட வசனங்கள் பைபிள் புதிய ஏற்பாட்டில் உள்ள சில எடுத்துக்காட்டுகள். இயேசு யூதர்களுக்கு மட்டும் வந்தவர் என்பதற்கு போதுமானதாகும்.

மேலும் அவர் வாழ்ந்த நாளெல்லாம். சகல சட்டங்களையும் கடைப்பிடித்து ஒரு பரிசுத்தவானாகவே வாழ்ந்தார். ஆனால் அவர் பெயரால் புதிய மார்க்கத்தை சிருஷ்டித்து விட்ட பவுல், 'சட்டம் ஒரு சாபக்கேடு' என்றே கூறிவிட்டார்.