அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தியாகத் திருநாளின் அடிப்படையும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்


கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமற்றது: உண்மையில் ஆபிரகாம் தீர்க்கதரிசியால் பலியிட அழைத்துச்செல்லப்பட்டது ஈசாக்கே தவிர இஸ்மவேல் அல்ல என்று கூறுகின்றனர்.

இவர்களின் இக்கூற்று வரலாற்றிக்கு அப்பாற்ப்பட்டதும் அவர்கள் போற்றும் பைபிளுக்கு முரண்பட்டதுமாகும்.

ஆபிரகாம் தீர்க்கதரிசியின் குமாரர்களான இஸ்மவேல் (இஸ்மாயீல் நபி) ஈசாக்கு (இஸ்ஹாக் நபி) ஆகியோரின் சந்ததியினரே
இஸ்மாவேலர்களும்(அராபியர்கள்) இஸ்ரவேலர்களும் (யூதர்களும்) ஆவார்கள். இதில் ஈசாக்கின் சந்ததியில் மோசே, தாவீது, சாலமன், யோவான், இயேசு, ஆகிய தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள்.

"உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் (இஸ்ரவேலர்களின்) சகோதரர்களிலிருந்து(இஸ்மவேல் வம்சத்திலிருந்து) எழுப்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்" (உபாகமம் 18:18)

என்ற மோசே தீர்க்கதரிசிக்கு இறைவன் அளித்த முன்னறிவிப்பின்படியும்,
ஆகையால் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்க்கேற்றக் கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்(மத்தேயு 21:43)

என்ற இயேசுநாதரின் தீர்க்கதரிசனத்தின் படியும் இஸ்மவேல் சந்ததியில் நபி(ஸல்) அவர்கள் தோன்றினார்கள்.
ஆபிரகாம் தீர்க்கதரிசி செய்த மகத்தான தியாகத்திற்கு பரிசாக இறைவன் அன்னவருடன் செய்த உடன்படிக்கை மூலமாக தேவனின் ராஜ்யத்தை தாங்கள் பெற்றதை நினைவு கூறவே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஆண்டுக்கொருமுறை புனித மக்காவில் மிருகங்களை பலியிட்டு ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றுவது இதன் அடிப்படியிலேயேயாகும்
இயேசு தோன்றிய பரம்பரையை சிறப்பித்துக் கூறவேண்டும் என்ற பேரவாக் காரணமாக கிருஸ்தவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க இவ்வுன்னத தியாகத்திற்கு ஆளானவராக ஈசாக்கை குறிப்பிட்டார்கள். இவர்களுக்கு ஆதரவாக பைபிளின் வாசகங்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். தற்கால பைபிளில் நாம் காண்பதெல்லாம்.

"தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கெ ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி கட்டைகள் அடுக்கி தன குமாரனாகிய ஈசாக்கை கட்டி அந்த பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்" - என்ற வாசகங்களைத்தான்.

என்றாலும் பலியிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டது ஈசாக்கை அல்ல, இஸ்மவேலே என்ற நமது வாதத்திற்கு சாதகமான பல ஆதாரங்களை பைபிள் தராமலில்லை.

"அப்போது அவர் (கர்த்தர்) பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியால் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்போது அறிந்திருக்கிறேன் என்றார்". (ஆதியாகமம் 22:12)

இந்த பைபிள் வாக்கியத்தில் காணப்படும் ஏக சுதன் என்ற சொல் ஆபிராம் தீர்க்கதரிசி தமக்கு அப்போதிருந்த ஒரே மகனை பலிகொடுக்க முனைந்தார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒரே மகன் யார்? ஈசாக் அபிரகாம் தீர்க்கதரிசிக்கு மகனாகப் பிறப்பதற்கு முன்னே பிறந்த இஸ்மாவேலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

இஸ்மவேலின் பிறப்பைப் பற்றி பைபிள் இவ்வாறு காணப்படுகிறது.

"ஆகார் ஆபிரகாமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது ஆபிரகாம் எண்பத்தாறு வயதாயிருந்தான்" (ஆதியாகமம்16:16)

(ஆதியாகமம் 17:24, 25) ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. அப்போது ஆபிரகாமின் மகன் இஸ்மவேலுக்கு 13 வயது. 

(ஆதியாகமம் 17:26) ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

"நான் அவளை (சாராளை) ஆசிர்வதித்து அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன் அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும் அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசிர்வதிப்பேன் என்றார்.

அப்போது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறு வயதானவனுக்கு பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டு இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிறப்பானாக: - என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்ன். (ஆதியாகமம் 17;16-18)

எனவே ஈசாக்கு பிறப்பதற்கு கிட்ட தட்ட பதினான்கு ஆண்டுகள் இஸ்மவேலே ஆபிரகாமின் ஏக புத்திரராய் இருந்திருக்கிறார்.

ஆகையால் ஆபிரகாம் தீர்க்கதரிசியால் பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மவேல் தவிர ஈசாக்கல்ல. கிருஸ்தவர்கள் இதைப் புரிந்துகொள்வார்களாக.