அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இக்திதார்

 
அல்லாஹ்வுடைய வல்லமைமிக்க அடையாளம் என்பதன் பொருள், அவனுடைய பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும், மாறுபட்ட நிகழ்ச்சியாகும். இதற்க்கு இக்திதார் என்று பெயர். ‘இக்திதார்’ மூலமாக நிகழும் அடையாளம், விரோதிகளை அழிப்பதற்கு மட்டுமின்றி, இறைநேசர்களுக்கும், அவனுடைய நல்லடியார்களுக்கும் உதவிபுரிவதற்க்காகவும் காட்டப்படுகிறது. சில சமயம் ஒரே வேளையில் இரு வகையான அடையாளங்களை ஒன்றாக சேர்த்துக் காட்டுகின்றான்.

ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும் மழையும் உண்டாயிற்று. அப்போது நான் அமர்ந்திருந்த அறையில் மின்னல் தாக்கி, அறைமுழுவதும் கந்தக வாடை வீசியது அதனால் எனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்ப்படவில்லை. ஆனால் அதே சமயம் அம்மின்னல் தேஜா சிங் என்பவரின் கோவிலுக்குள்ளும் சென்றது. இக்கோவிலை சுற்றிலும் – ஹிந்து ஆசாரப்படி வலம் வருவதற்காக வளைந்து செல்லும் சுவர் கட்டப்பட்டிருந்தது. அங்கு வந்த மின்னல் வளைந்து செல்லும் கோணலான சுவரின் வளைவுகளை எல்லாம் தாண்டி, அக்கோயிலுக்குள் இருந்த தேஜாசிங் என்பவரை எரித்து கரிகட்டையாகிற்று, அதே மின்னல் என்னை ஒன்றும் செய்யவில்லை. இறைவன் என்னை காப்பாற்றினான், இறைவனின் பொதுவான விதிக்கும், சட்டத்திற்கும் மாறுபட்டதாகும்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட அடையாளங்கள் அல்லாஹ்வுடைய கருணையையும், அன்பையும் வெளிப்படுத்தக் கூடியதாகும்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகிறார்கள் சில சமயம் மனிதனுடைய தகுதிக்கப்பாற்பட்ட சில அடையாளங்களை அல்லாஹ் சில மனிதர்கள் மூலமாக வெளிப்படுத்துகின்றான். அவ்வடையாளங்கள் அல்லாஹ்வின் தனிப்பட்ட சக்தியினால் வெளிப்படுத்தப்படுபவையாகும். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் பதர் யுத்தத்தில் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி எதிரிகளின் பக்கம் வீசினார்கள். அந்த ஒரு கைப்பிடி மண் எவ்வித பிராத்தனையின் பலனாகவுமின்றி, தனது ஆத்மீக சக்தி கொண்டு மட்டுமே நபியவர்களால் வீசப்பட்டது. ஆனால் இந்த ஒரு பிடி மண்ணில் தனது சக்தியைப் பிரகடனப்படுத்தியதன் காரணமாக, அற்புதமான வகையில் எதிரிகளின் அனைவரது கண்களிலும் அம்மண் போய் விழுந்தது. அதனால் அவர்களனைவரும் குருடர்கள் போலாகி, திக்பிரமையடைந்து இங்கும் அங்கும் ஓடத்தலைப்பட்டனர்.
மேற்கண்ட, ‘இக்திதாரி’ யான அடையாளத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆன் இல் கூறும்போது “நீர் எறிந்த பொது நீர் எறியவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். இக்கருத்து அச்சமயம் செயல்பட்டது அல்லாஹ்வின் வல்லமையாகும்.

ஆனால், எதிரிகளால் இதை ஓர் அற்புதமாக இறைவனுடைய இயற்கை சட்டத்திற்கு மாறுபட்ட ஒரு அடையாளமாக காண முடியவில்லை. மூமின்களாகிய விசுவாசிகளுக்கு உதவிபுரிவதற்காக இறைவன் இவ்வற்புத அடையாளத்தை நிகழ்த்திக் காட்டினான். இதைக் கண்டு மூமின்கள் மகிழ்ந்தனர். ஆனால் எதிரிகளோ அச்சமயம் ஒரு சுழற் காற்று வீசியதாக எண்ணி அந்நிகழ்ச்சியின் காரணமாக எதிரிகளின் கண்களில் தூசியும், மண்ணும் விழுந்து அவர்கள் குருடர்கள் போலாக்கி போரிட முடியாத ஒரு நிலை ஏற்ப்பட்டது.

இவ்வாறான அற்புதங்களாகிய இறை அடையாளங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளில் ஏராளமாக நடந்துள்ளன. ஆனால் அவற்றால் மகிழ்ச்சியுற்றவர்கள் மூமின்களான விசுவாசிகள் மட்டுமே.

மேலும் மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் “குறைந்த அளவே இருந்த தண்ணீரில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைவிரல்களை முக்கி அதன் மூலம் சிறிதளவே இருந்த தண்ணீர் ஒரு படையிலிருக்கும் ஏராளமானவர்களும், ஒட்டகங்களும், குதிரைகளும் அருந்துவதற்கு போதுமானதாக ஆனது. இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் நிகழ்ந்துள்ளன.

இந்த சம்பவங்களையெல்லாம் அஹ்மதிய்யா ஜமாஅத்தை சார்ந்தவர்களாகிய நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சில சமயங்களில் ஜமாஅத் சகோதரர்கள் எல்லா சம்பவங்களையுமே பகுத்தறிவின் அடிப்படையில் எண்ணி அதற்கேற்றவாறு விளக்கம் கொடுக்க முயல்கின்றனர். ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நமக்குத் தந்துள்ள விளக்கத்திற்குப் பின், நாம் புதிதாக எந்தவிதமான விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே நம்முடைய அரிவால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்ப்பட்டாலும். மேற்கூறப்பட்ட ‘இக்திகாரி’ யான அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுவதாவது, “இரண்டு அல்லது நான்கு ரொட்டித் துண்டுகளை மட்டுமே கொண்டு, ஆயிரக்கணக்கான பசியுள்ளவர்களின் வயிறுகளை நிறையச் செய்த பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இன்னும் சில சமயங்களில் ஒரு சிறு பாத்திரத்தில் பாலைக் கொண்டு ஏராளமானவர்களை அருந்தி திருப்தியுறச் செய்துள்ளார்கள். இன்னும் கிணற்றிலுள்ள உப்புநீரை, தமது உமிழ் நீரை அதில் உமிழ்வதன் மூலம் நல்ல தண்ணீராக மாற்றியுள்ளார்கள். யுத்த சமயத்தில் அடிப்பட்டதன் காரணமாக சிலரின் கண்கள் பிதுங்கி வெளிவந்த போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருக்கரத்தால் தடவி சுகம் ஏற்ப்படச் செய்தார்கள். இவ்வாறான பல அற்புதங்கள் நபி (ஸல்) அவர்கள் மூலமாக வெளியாயிற்று. அச்சமயங்களில் இறைவனுடைய வெளிப்படுத்தப்படாத ஒரு சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கைபர் யுத்தத்தின் ஒரு சமயம் இஸ்லாமியக் கொடியை கொடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி ரலி அவர்களை அழைத்தார்கள். அப்போது ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் கண் நோயினால் அவதிப்பட்டு கொண்டிருப்பதாகக் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலியின் கண்களில் தங்களின் உமில்நீரைத் தடவி ஊதினார்கள். கண்கள் இரண்டும் குணமடைந்துவிட்டன. அவர்களின் கண் நோயின் அவதி நீங்கி குணம் ஏற்ப்பட்டது.

இவைகள் எல்லாம் கடந்தகால நிகழ்ச்சிகளானபடியால், இவைகளெல்லாம் உண்மையாகவே நடைபெற்றன என்பதற்கு ஆதாரமில்லை என விரோதிகள் கூறலாம். எனவே இக்காலத்திலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியின் மூலமாக பல அடையாளங்களைக் காட்டி இருக்கின்றான். அதுவும் கடந்த காலத்தில் இறைவன் எவ்வாறு அற்புத அடையாளங்களைக் காட்டினானோ அவ்வாறே இக்காலத்திலும் அடையாளங்களைக் காட்டி இருக்கின்றான். மேலும் வருங்காலத்திலும் இப்படிப்பட்ட அடையாளங்களைக் காட்டுவான்.

இப்படிப்பட்ட இறையடையாளங்களைக் குறித்து இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். பிளேக் நோய் கடுமையான முறையில் பரவிக் கொண்டிருந்த போது காதியானிலும் பிளேக் நோய் பரவியது அப்போது மௌலவி முஹம்மது அலி M.A (திருக்குரானை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தவராவார்) அவர்களுக்கு கடுமையான ஜுரம் ஏற்ப்பட்டது. அவர்கள் தனக்கு பிளேக் நோய் வந்துவிட்டதற்க்கான அடையாளம் என்று உறுதியாக நம்பினார்கள். அவர் என்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் தங்கி இருந்தார். என்னுடைய இந்த வீட்டைப் பற்றி ஏற்கனவே அல்லாஹ் 'உமது வீட்டிலுள்ள அனைவரையும் நான் காப்பாற்றுவேன்' என்று வாக்குறுதி அளித்துள்ளான். நான் அவரைக் காண சென்ற பொழுது அவருடைய பயத்தையும் கவலையையும் கண்ட போது "உண்மையாகவே உங்களுக்கு பிளேக் நோய் ஏற்பட்டிருந்தால் நான் பொய்வாதி ஆவேன்" எனது இல்காமைப் பற்றிய வாதம் பொய்யானதாக இருக்கும் என்றும் கூறினேன். இவ்வாறு கூறி அவரது கை நாடியின் மீது கை வைத்தேன். நான் கை வைத்த உடன் அவருடைய ஜுரத்தின் அடையாளம் கூட இல்லாத முறையில் குணமடைந்துவிட்டார்.

இப்படிப்பட்ட இன்னுமொரு அடையாளம். சிவப்பு மைத்துளி விழுந்த அடையாளமாகும். ஒரு நாள் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் கனவில் இறைவனை மனித உருவத்தில் கண்டார்கள் இறைவன் சிவப்பு மையில் தனது பேனாவை முக்கி, அதில் மை அதிகமாக இருந்ததால் அதனை உதறினான் அப்பொழுது அந்த மை வெளிப்படையான முறையில், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களது உடலிலும், அருகில் அமர்ந்திருந்த ஹஸ்ரத் அப்துல்லாஹ் ஸனோரி அவர்கள் மீதும் பட்டது. இது பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதற்க்கு "இக்திகாரி" அடையாளம் என்று கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் “நான் என் இறைவனை ஒரு இளைஞனின் வடிவத்தில் பார்த்தேன். அவனுக்கு நீண்ட முடியும், அவனது கால்களில் தங்க காலணிகளும் இருந்தன (அல்யவாகீது வல் ஜாவாஹிரு பாகம் 1 பக்கம் 71, திப்ராணி மற்றும் மௌஸுஆதே கபீர்)