அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

காலத்தால் மாறாதது இஸ்லாம்!


முஸ்லிம் சட்டத்தை மாற்றவேண்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய மதத்தைக் கடைபிடிக்க அதன் படி வழிபாடுகள் நிகழ்த்த, அதனை பிரச்சாரம் செய்ய இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக ஒருவன் தன் மதம் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது, பொதுவானதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித உரிமைகளை மறுப்பதாகும். 

இஸ்லாம் பலதார மணத்திற்கு அனுமதியளித்துள்ளதை சாடி அது தொடர்பாகவும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது பலதார மணம் செய்வதற்க்காகவே பலர் மதம் மாறுகிறார்கள் என்றும் அதற்கு காரணங்களை கூறுகிறார்கள்.

ஒரு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமானால் அதற்காக அந்த சட்டத்தை நீக்க வேண்டுமா! இந்தியன் பீனல் கோட் சட்டத்தை ஒருவன் துஷ்பிரயோகம் செய்தால் அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று இவர்கள் கோருவார்களா!

தன் மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் ஒருவன் வழி கெட்டுப்போவதை எந்த மதமும் சரியென்று சொல்லாது. சட்டவிரோதமாக வைத்திருப்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வமாக இன்னொரு மனைவியை வைத்திருப்பது நல்லதல்லவா!

இஸ்லாம் பலதார மணத்திற்கு ஒரு அனுமதியைதான் வழங்கி இருக்கிறதே தவிர முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்யவேண்டும் என்று கூறவில்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக, அதாவது மனைவி நிரந்தர நோயாளியாக இருந்தால், அல்லது பிள்ளைபேறு இல்லாமலிருந்தால், சமுதாயத்தில் பெண்கள் அதிகப்படும் சூழ்நிலை இருந்தால், அனாதைகளை ஆதாரிக்க ஆள் இல்லாதிருந்தால் ஒருவன் இன்னொரு திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்க்கேற்றவாறு முஸ்லிம் சட்டமும் அமைந்திருக்கிறது.

வேறு மதச் சட்டப்படி பார்த்தால் ஒருவனுடைய மனைவி நிரந்தர நோயாளியாகவோ பிள்ளைப் பேறு அற்றவராகவோ இருந்தால் அவளை விவாகரத்து செய்த பிறகே மறுமணம் செய்ய இயலும். இஸ்லாம் இத்தகையப் பிரச்சினை எழும்போதே அதற்க்கு மனிதாபிமான முறையில் தீர்வு காணுகிறது. முதல் மனைவியை மேற்கண்ட காரணங்களுக்காக துரத்தி விடாது அவளையும் தனது பராமரிப்பிலேயே வைத்துக் கொண்டு இன்னொரு மணம் செய்ய இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. அதுமட்டுமல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை மணமுடிக்கும்போது மனைவிமார்களுக்கிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது என்ற நிபந்தனையையும் இஸ்லாம் விதித்துள்ளது.
பலதாரமணம் முதல் மனைவியின் உரிமைகளை இல்லாமல் ஆக்க கணவனுக்கு தரப்பட்ட அனுமதி சீட்டு அல்ல. மாறாக அவ்வாறு செய்கின்ற கணவன் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவான் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

ஒருவனுக்கு பலதார மணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டால் அவன் இன்னொருவளை மணமுடித்த பிறகு முதல் மனைவியை மோசமாக நடத்துவான் என்பது இவர்களின் வாதம். இன்னொரு மணம் முடிக்காமலேயே மனைவியை மோசமாக நடத்துவதை நாம் அன்றாடம் பத்திரிகையில் படிக்கிறோம். சீதனத்திற்காகவும், சீர்வரிசைக்காகவும் மனைவியை கொடுமைப்படுத்துபவர்களை நாம் பார்க்கவில்லையா! கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு சட்டப்பூர்வமான மனைவியை அடிமைபோல் நடத்துவதைத்தான் நாம் பார்க்கவில்லையா! இத்தகைய சமுதாய நோய்களை ஒழிக்க மக்கள் மனதில் இறையச்சத்தை ஏற்ப்படுத்த வேண்டுமேயொழிய இறைவன் தந்த சட்டத்தை மாற்றுவதற்கு முயலக்கூடாது.

சூழ்நிலைக்கு தக்கவாறு சட்டத்தை மாற்றவேண்டும் என்றால் மக்களின் மனப்போக்கிற்கு ஏற்றவாறெல்லாம் சட்டத்தில் மாறுதல் செய்யவேண்டும் என்றாகிவிடும். இதற்கு முடிவே கிடையாது.

மனிதன் தான்தோன்றித்தனமாக வாழாது இறைகட்டளைகளுக்கு இசைய வாழ வேண்டுமென்றே இஸ்லாம் கூறுகிறது மனிதன் தன் மனம்போன போக்கில் வாழ்ந்தால் அது அவனது நாசத்திற்கே வழிகோலும் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

கால மாற்றத்திற்கேற்றவாறு மாறுதல் செய்யவேண்டும் என்கிறார்கள். காலத்திற்கேற்றவாறு மாற்ற வேண்டிய சட்டங்கள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. ஏனெனில் அவை முக்காலத்தையும். உணர்ந்த இறைவனால் வகுக்கப்பட்டவை. காலத்தால் மாறாதது இஸ்லாம்! மாறாக காலத்தையே மாற்றக் கூடியதுதான் இஸ்லாம். இதற்கு கடந்த கால வரலாறுகளே சான்று.