அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

நஜாத் ஆசிரியரின் கேள்வி.


ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக கூறுகிறீர்கள். அவரது காலத்திலேயே பவுல் என்பவன் கிறிஸ்தவ உலகில் திரியேகத்துவத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் பற்றி ஈஸா (அலை) அவர்களுக்குத் தெரியாமல் போனதா? திரியேகத்துவக் கொள்கை ஆரம்பமாகும் போது ஈஸா (அலை) அவர்கள் எங்கிருந்தார்கள்? (அபூ அப்தில்லாஹ் – கிறிஸ்டியானி நகரம் 

நம் பதில்: 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக அஹ்மதிகள் கூறவில்லை. ‘நிச்சயமாக ஈசப்னு மர்யம் 120 வது வரை வாழ்ந்தார்கள்’ என்று
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஹாகிம்; ஹஜ்ஜுல் கிராமா பக்கம் 428; மவாஹிபுல் லதுன்யா பாகம் 1 பக்கம் 42; பதுஹுல் பயான் அடிக்குறிப்பு தொகுதி 2, பக்கம் 246 ஆகியவை காண்க) 

திருக்குர்ஆன் வசனத்திற்கு இணக்கமான இக்கூற்றை அஹ்மதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்வதில் திருக்குர்ஆனின் எந்த வசனமும் தடையாக இல்லை. 

‘நீ எனக்கு கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தைத் தந்த பின்னர் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய். என்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலம் திருக்குர்ஆனில் (5:118 இல்) உள்ளது. 

இங்கு ‘நான் அவர்களுடன் இருந்த காலம் வரை.’ என்ற வார்த்தை கவனிக்கத்ததக்கது. ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கிறிஸ்தவர்களுடன் இருக்கும் காலத்தில் அவர்களிடம் ‘ஷிர்க்’ உருவாகவில்லை என்பதையும், கிறிஸ்தவர்களிடம் ‘ஷிர்க்’ உருவான காலத்தில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கிறிஸ்தவக் கூட்டத்தில் இருந்ததில்லை என்பதையும் இனி இந்த வாக்குமூலம் கொடுக்கின்ற மறுமை நாள்வரை இணை வைக்கும் அவர்களை அவர் சந்தித்ததில்லை என்பதையும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக உணர்த்துகிறது. 

திருக்குர்ஆனின் இந்தத் தெளிவான தகவலுக்குப் பிறகு, பவுல் அவரது காலத்திலேயே திரித்துவத்தை உண்டாக்கியதாகக் கூறப்படும் கூற்றை நம்மால் ஏற்க முடியாது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும். நான் ‘அவர்களுடன்’ இருந்த காலம் வரை, அவர்களிடத்தில் இணைவைத்தல் உருவாகவில்லை. என்ற கருத்தைத் தெரிவிக்கும் திருக்குர்ஆனின்மேற்கண்ட கூற்றுக்கு முரண்படாத வகையில் நாம் பொருள் கொள்ளவேண்டும். 

அதாவது ஹஸ்ரத் ஈஸா(அலை) எந்த மக்கள் மத்தியில் இருந்து வந்தார்களோ, அவர்களில் எவரும் அவரது காலத்தில் இணை வைக்கவில்லை. அதற்கு ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களே சாட்சியாக இருந்தார்கள். ஆனால் அவர்களை தம் மற்ற கோத்திரத்தாரையும் தேடித் தூதுச் செய்தியை எட்ட வைப்பதற்காக வேறு நாடுகளுக்கு வெகுதூரம் சென்றுவிட்ட பிறகு அன்னாரைவிட்டு தொலைவிலிருந்த மற்ற மக்கள் சீர்கெட்டு போயிருக்கலாம். அவ்வாறு சீர்கெட்டு போனது பற்றி ஈஸா(அலை) அவர்களுக்கு தம் மரணம்வரை தெரியாமலிருந்திருக்கலாம். மேலும் அன்னார், அவர்களுடன் இல்லாதபோது தடம்புரண்டு போன அந்த மக்களை அவர் மறுமைநாள் வரை இனி சந்திக்கப் போவதில்லை என்ற நுட்பமான கருத்தைத்தான் மேற்காணும் இறைவசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. 

எனவே ஹஸ்ரத், ஈஸா(அலை) அவர்கள் உயிருடன் இன்றுவரை இருக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கையை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அவர் மறுமைநாள் வரை இவ்வுலகிற்குத் திரும்பி வரமுடியாது. ஏனெனில், அவர் அப்படி திரும்பிவந்தால் அன்னாரையே வணங்கும் கிறிஸ்தவர்களைக் கண்கூடாக காண்பார். பிறகு நான் ‘அவர்களுடன்’ இருந்த காலம் வரை நான் சாட்சியாக இருக்கிறேன் என்ற திருவசனம் பொய் என்றாகிவிடும். (அல்லாஹ் காப்பானாக) ஆகவே, அதே ஈசா(அலை) இனி ஒருகாலமும் திரும்பி வரப்போவதில்லை.