அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

சுவர்கதிற்குரிய 73 வது பிரிவு அஹ்மதிய்யா ஜமாஅத்தே - முல்லாக்களின் ஏகோபித்த கருத்து.


மௌலவி ஸபர் அலி என்பவர் கீழ்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருந்தார்; அவர் கூறுகிறார்:

"இந்த செயற்குழு (அதாவது 1974 செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை காஃபிராக்கியது அந்த செயற்குழு) கடந்த 1400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக "இஜ்மாயே உம்மதிற்கான" (சமுதாயத்தில் ஏகோபித்த கருத்தை அறிகின்ற) வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காதியானிகளுக்கு எதிராக 72 பிரிவுகள் (இங்கு கவனிக்க வேண்டியது) ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஷியா, சுண்ணி, அஹ்லே ஹதீஸ், வஹ்ஹாபி, தேவ்பந்தி, பரேல்வி, ஆகிய
பிரிவுகளைச் சார்ந்தவர்களும் மற்றும் ஏனைய எல்லா பிரிவினார்கள், பீர்முர்ஷத்கலும் எல்லா சூஃபி மார்களும் காதியானிகள் காஃபிர்கள் என்றும் இஸ்லாத்திலிருந்து விலகியவர்கள் என்றும் ஏக மனதாக கூறி உள்ளனர்." (ஸமீந்தார் 5-11-1974 பக்கம் 2)

அடுத்து "நவாயே வக்த்" எனும் ஏட்டில் "72 பிரிவினரின் இஜ்மா" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை பாருங்கள்:

......................."இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு முன்னர் ஒரு முக்கிய பிரச்சனையை குறித்து சமுதாயத்தின் ஏகோபித்த கருத்து இருந்ததாக தகவல் இல்லை. இந்த ஏகோபித்த கருத்தை நாடெங்குமுள்ள எல்லா உலமாக்களும் , அரசியல் தலைவர்களும் சூஃபிகளும் ஒன்று பட்டு தெரிவித்துள்ளார்கள். முஸ்லிம்களிலுள்ள 72 பிரிவுகளும் இவ்விஷயத்தில் ஒன்று பட்டிருப்பது மகிழ்ச்கிக்குரியதாகும்." (நவாயே வக்த் 6-10-1974)

என்னவோரு தீர்ப்பு....! இந்த முல்லாக்கள் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் "அந்த 72 கூட்டத்தினர் நரகவாசிகளாக இருப்பர்" என்ற தீர்ப்பை மறந்து நபி (ஸல்) அவர்களின் அந்த தீர்ப்புக்குரியவர்கள் நாங்களே என்பதை "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப தங்களது வாயினால் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.....! இங்கு நடுநிலை வாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்...

இப்போது சொல்லுங்கள் சகோதரர்களே அந்த 73 வது கூட்டம் யார்....? எந்த விஷயத்தை குறித்து இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் தெரியுமா? 72 பிரிவானதில் நாம் ஒன்று சேர்ந்திருப்பதில் இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அல்லாஹ்வின் நியதி எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பாருங்கள்! நாங்கள் 72 பிரிவார் ஒரு புறம் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் ஜமாஅத் அதாவது 73 வது பிரிவு தனியாக மறுபுறம் என இவர்களே கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணை! நீங்களே அந்த 72 பிரிவுகள். நாங்கள் 73 வது பிரிவு அதாவது தனித்து விடப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரே ஜமாஅத். இந்நிலையில் உங்களின் "ஃபத்வா" வெறும் செல்லாக் காசுகள். அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் தீர்ப்பே விலை போகும். அந்த மனிதப் புனிதரின் தீர்ப்பு தவறானது என நிரூபித்து காட்டக்கூடிய ஒருவனை எந்த தாயும் பெற்றெடுக்கவில்லை. இனி பெற்றெடுக்கவும் மாட்டாள்..

1974 செப்டம்பர் 6 ஆம் நாள் உங்களுக்கு இருள் நிறைந்த நாளாக பிறந்திருக்கிறது. அன்றைய தினம் எங்களுக்கு ஓர் ஒளி மயமான நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் அண்ணல் மாநபியின் முன்னறிவிப்பு நிறைவேறியுள்ளதை நீங்களே உறுதி செய்து விட்டீர்கள். நபி பெருமானாரின் அந்த மகத்தான முன்னறிவிப்பை பொய்யாக்க முனைந்து நீங்கள் தோற்றுப் போனீர்கள். அதுவோ மிகப்பிரகாசமாக நிறைவேறி விட்டது. நீங்கள் 72 பிரிவாரும் ஒன்று பட்டு எங்களை தனியாக ஒதுக்கியதின் மூலம் நீங்கள் அத்தனை பிரிவாரும் பொய்யான ஜமாத்துக்கள் என உங்களுக்கு எதிராகவே தீர்பளித்து கொண்டிருக்கிறீர்கள்.

அண்ணல் மாநபி முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடலாம் என்று எண்ணியிருந்தீர்கள். ஆனால் உங்களின் தீர்ப்பின் மூலம் அந்த மாநபியோடுள்ள எங்களின் பிணைப்பு மிக இருக்கமானது என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

உங்களால் விரிக்கப்பட்ட வலையில் நீங்களே விழுந்து விட்டீர்கள். உங்களுடைய உலமாக்களும் பெரியவர்களும் முன்பு கூறியிருந்த ஃபத்வா க்களை நீங்களே செல்லாக் காசுகளாக்கி எங்களுக்கு எதிராக அணி திரண்டீர்கள். அண்ணல் மாநபி சொன்ன அந்த ஒரு ஜமாஅத் அஹ்மதிகளாகிய நாங்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். இதன் மூலம் எல்லாம் வல்ல இறைவன் வெற்றியின் வாயிலை எங்களுக்கு திறந்து தந்துள்ளான். இது குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருக்கின்றோம். அல்ஹ்மதுலில்லாஹ்............!!