அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 47, 48, இல் இவ்வாறு எழுதியுள்ளார்.
காதியானிகள், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்துள்ளதை மறுத்து வருவதை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களின் (மிஹ்ராஜ்) விண்வெளிப் பயணத்தையும், ஆதம் (அலை) அவர்கள் சுவர்கத்திலிருந்து பூமிக்கு பூத உடலுடன் இறங்கியதையும் மறுத்து வருகிறார்கள். இதற்க்குக் காரணம் இந்த இரண்டு நிகழ்சிகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வரும் என்ற தப்பான எண்ணமேயாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது கனவில் கனவில் இடம் பெற்ற நிகழ்ச்சியே என்று அவர்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் குர்ஆனில் இஸ்ரா என்ற
நிகழ்ச்சியை குறிப்பிடும் போது,
நிகழ்ச்சியை குறிப்பிடும் போது,
அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்: அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர் இரவில் அழைத்துச் சென்றான் (17:1) என்று குறிப்பிடுகின்றான். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களை அடியார் (அப்து) என்ற பதத்தையே குறிப்பிடுகின்றான். இதிலிருந்து தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விழித்த நிலையில் உடலுடன் மிஹ்ராஜ் சென்றதைக் குறிக்கும்.
கனவில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்திருக்குமேயானால் குறைஷிக் காபிர்கள் அதனை மறுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. காரணம் கனவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சி சம்பவிப்பது சாத்தியமானது என்பதை விழித்த நிலையில் உடலுடன் சென்று வந்த நிகழ்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாலேயே குறைஷிகள் அதனை மறுத்தனர். எனவே மிஹ்ராஜ் காதியானிகள் சொல்வது போன்று கனவில் இடம் பெற்ற சாதாரண நிகழ்ச்சி அல்ல. விழித்த நிலையில் உடலுடன் இடம் பெற்ற ஒரு மகா அற்புதமான நிகழ்ச்சியே மிஹ்ராஜ் ஆகும்.
நம் பதில்:
அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரு இரவில் அழைத்து சென்றான் (17:2)
இதில் நபி (ஸல்) அவர்களை அடியார் (அப்து) என்று குறிப்பிடுகிறான். எனவே உடலுடன் விழித்த நிலையில் மிஹ்ராஜ் சென்றதைக் குறிக்கும் என எழுதுகிறார். அப்து அடியார் என்று சொல்லப்பட்டிருப்பதால், உண்மை நிகழ்ச்சி கனவு இல்லை என்பதற்கு திருக்குர்ஆன் நபிமொழி சான்று எதையும் அவர் தராததினால் இது ஒரு தவறான வாதமாகும்.
குறைந்த அளவு அந்த நிகழ்ச்சி கனவு நிகழ்ச்சியாக இருக்கும் என்றால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்றாவது திருக்குர்ஆன் நபி மொழி சான்றுகளின் அடிப்படையில் இவர் சொல்லியிருக்க வேண்டும்.
இவர் குறிப்பிடும் 17:2 வசனம் இஸ்ரா என்னும் இரவுப் பயணமாகும். இந்த இஸ்ராவும் மிஹ்ராஜும் இரு வெவ்வேறு நிகழ்வுகளாகும் அதனால்தான் இமாம் புகாரி அவர்கள் தனது நபி மொழித்தொகுப்பில் இஸ்ரா, மிஹ்ராஜ் இரண்டையும் இரு பாடங்களாகப் பிரித்து தனித்தனியே கூறியுள்ளார்கள்.
இது கனவுக் காட்சியே என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நாம் உமக்கு காட்டிய கனவுக் காட்சிகளையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மக்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம் திருக்குர்ஆன் (17:61) இந்த வசனத்தில் ருஹ்யா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு கனவுக் காட்சி என்ற பொருளை தவிர வேறு அர்த்தம் இல்லை 12:44, 37:106,48:28, 12:6, 12:101 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களில் இந்தச் சொல் கனவுக் காட்சி என்ற அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.
17:2 ம் வசனத்தில் கூறப்பட்ட இஸ்ரா நிகழ்ச்சியை குறித்தே 17:61இல் கனவுக் காட்சி எனக் கூறப்பட்டுள்ளதாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் (புகாரி - என் 4716)
எனவே 17:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி வெளிப்படையாக நடந்ததன்று மாறாக அது ஒரு ஆன்மீகக் காட்சியே என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியதிருக்கிறது.
ஏனெனின் திருக்குர்ஆன் அதனை உறுதிசெய்துள்ளது.
இஸ்ராவின் போது நபி (ஸல்) அவர்கள் ஜெருசலேம் சென்று அங்கிருந்த பள்ளியில் இமாமாக நின்று தொழுதார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முழு உலகிற்கும் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் அங்கு வந்து சேர, அத்தனை நபிமார்களும் நின்று தொழும் அளவுக்கு அங்கு இடவசதி கொண்ட பள்ளி இருந்ததா? இன்றாவது அங்கு இவ்வளவு பெரிய இடம் இருக்கிறதா?
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் கிலாபத்தில் தான் ஜெருசலேம் முஸ்லிம்களின் கைக்கு வந்தது. மேலும் அத்தனை நபிமார்களும் புராக் போன்ற வாகனத்தில் மண்ணுக்கு வந்து விண்ணுக்கு சென்றார்களா? அத்தனை வாகனங்களை கட்டுவதற்கு அங்கு இடவசதி இருந்ததா? இல்லையென்றால் இஸ்ரா சம்பவம் உடலோடு நடந்தது அன்று என்றும், ஒரு கனவுக் காட்சி என்றும் விளங்கவில்லையா?
எனவே அல்லாஹ் தன அடியாராகிய ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து அக்ஸா மஸ்ஜிதிறகு - பூமியிலுள்ள நம் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தான் அழைத்துச் சென்றதாக கூறுவதால், இது எதிர்காலத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்படப் போகும் ஹிஜ்ரத் பற்றியும், அவர் அனைத்து சமுதாய மக்களுக்கும் இமாமாக நபியாக விளங்குவார் என்றும் உலகில் எல்லா சமுதாய மக்களும் அவரைப் பின்பற்றி நடப்பார் என்றும் எடுத்துக் கட்டும் ஒரு கனவுக் காட்சி என்று விளங்குகிறது
திருக்குரானில் 53ம் அத்தியாயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் அவரது உள்ளம் தான் கண்டதைப் பற்றி பொய்யுரைக்கவில்லை (53:12) என்றும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார். மிகத் தொலைவிலுள்ள இலந்தை மரத்திற்குப் பக்கத்தில் (53:14,15) என்றும் திருக்குரானில் காணப்படுகிறது. மேலும் ஹதீஸில் மிஹ்ராஜ் பற்றிய பாடத்தில் இலந்தை மரணத்தின் பக்கத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டது அல்லாஹ்வை என்றும் தெளிவாக விளங்குகிறோம். இதிலிருந்து சித்ரத்துல் முன்தஹா ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தன் உள்ளத்தாலே கண்டார்கள் என்பது புலனாகிறது.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தன் ஆத்மாவினால் கண்டார்கள் என்று ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் (முஸ்லிம் பக்கம் 1 )
அல்லாஹ் ஒளியாக விளங்குகிறான் அவனை புறக் கண்ணால் பார்க்க முடியாது அவ்வாறுக் கண்டதாகக் கூறுவது அவன் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவதாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை ஆன்மீகக் கண்ணால் கண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதையே அபூதர் (ரலி) அவர்களும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒளியை (அல்லாஹ்வைக் ) கண்டதாகக் கூறுகிறார்கள் (முஸ்லிம் பாகம் 1 ஈமான் பாடம் )
மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனிதப் பள்ளியில் விழித்து எழுந்தார்கள் (புகாரி எண் 7517) என்றும் ஹதீஸில் காணப்படுகிறது.
எனவே மிஹ்ராஜ் பயணம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தின்போது புறப்பட்டு சென்றதையும் பயணம் முடிந்தவுடன் தூக்கத்திலிருந்து விழித்ததையும் தெளிவாகக் குறிப்பிடுவதால் இது ஆன்மீகக் காட்சி என்று விளங்குகிறது.
நான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தபோது நுண்ணறிவினாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத்தட்டு ஓன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. என் நெஞ்சம் காறை எலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு சம்சம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது பிறகு (என் இதயம்) நுண்ணறிவினாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது (புகாரி பாடம் (படைப்பின் ஆரம்பம்) புஹாரி எண் 3207)
இங்கு தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை என்பது கஷ்பின் நிலையாகும். தங்கத்தட்டு இவ்வுலகில் முஹ்மினுக்கு விலக்கப்பட்ட ஒன்று. எனவே இது கனவுக் காட்சி என்று தெரிகிறது. நுண்ணறிவும், இறை நம்பிக்கையும் புறக்கண்ணால் காணக்கூடிய பொருள் அல்ல. இதிலிருந்து இங்கு விவரிக்கப்பட்டது ஆன்மீகப் பயணமே என்பது புலனாகும்.
பார்வைகள் அவனை அடையமுடியாது அவன் பார்வைகளை அடைகின்றான் ( 6:104) இவ்வசனம் புறக்கண்ணால் அல்லாஹ்வை காண முடியாது அவன் தான் நாடுபவர்களுக்கு கனவு கஷ்ப் மூலம் காட்சி தருகிறான் என்று கூறுகிறது. இத்தகைய இறை சந்திப்பு இவ்வுலகில் நடைபெறுகிறது இதனை 18:111, 84:7, 29:70 ஆகிய வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 22:47 வசனம் மனிதனுக்குள் புறக்கண், அகக் கண் பற்றிக் கூறுவதைக் காணலாம்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்களும் இறைவனை இவ்வுலகில் கண்டனர். திருக்குர்ஆன் 20:85, 20:11 ஆகிய வசனங்கள் ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனைக் சந்தித்ததை எடுத்துக் கூறுகிறது.
மிஹ்ராஜ் என்ற அரபிச் சொல் அரஜ என்ற மூலச் சொல்லிலிருந்து வந்ததாகும். இந்தச் சொல்லுக்கு உடலுடன் வானம் செல்லுதான் என்ற பொருள் திருக்குரானிலோ ஹதீஸ்களிலோ கொடுக்கப்படவில்லை. எனவே மிஹ்ராஜ் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்களே அது உடலுடன் செய்யப்பட்ட வானுலகப் பயணம் என்று கூறுவார்.
இந்த நிகழ்வு ஆன்மீகப் பயணம் என்றால் குரைசிக் காபிர்கள் அதனை ஏன் மறுத்தார்கள்?
ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் மக்காவில் இருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற இஸ்ரா பயணம் பற்றிக் கேள்விப்பட்ட குரைசிக் காபிர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சென்று, உங்கள் தோழர் பைத்துல் முகத்தஸ் சென்று திரும்பியதனை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டனர். அதற்க்கு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், நான் அன்னாருக்கு வானிலிருந்து வஹி வருகிறது என்று (இதனைவிடப் பெரியதை) நம்புகிறேன் என்று கூறினார்கள்.
இச்சம்பவம் நபி (ஸல்) அவர்கள், மக்கவிலிருந்து மிஹ்ராஜ் சென்றது வேறு என்பதையும், மக்கவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்றது வேறு என்பதனையும் அன்னார் உடலோடு அந்த இரு பயணங்களையும் செய்யவில்லை என்பதனையும் தெளிவாக்குகிறது.
அபூபக்கர் (ரலி) அவர்கள் வானிலிருந்து வஹி வருவதையே மிகப் பெரியதாகக் கருதி அதனை நம்புவதாகக் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உடலுடன் அப்பயணங்களை செய்திருப்பார்கள் என்றால், அன்னார் உடலோடு வானிற்கு சென்று வந்ததை நம்புகிறேன் என்றுதான் கூறியிருப்பார்கள். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அவ்வாறு கூராததிலிருந்து அவை ஆன்மீகப் பயணங்களே என்றே தெளிவாகின்றது.
மேலும் அக்காபிர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பொய் நபியென்றும், வஹி பொய் என்றும் மட்டும் நம்பவில்லை. மாறாக, காணாத ஒரு புதிய இடத்தை கனவில் காணமுடியாது, எனவே நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டதை மறுத்து அக்கேள்வியை குரைஷிகள் கேட்டனர். எனவே மிஹ்ராஜும் , இஸ்ராவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஆன்மீகக் பயணமே என்பது தெளிவாகிறது.