ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளை தம்வசப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் கிருஸ்தவ மார்க்கம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் இந்தியாவை ஒரு கிருஸ்தவ நாடாக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிருஸ்தவ பிரசாரகர்கள் பெருவாரியாக இங்கு வந்திருந்தனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கிருஸ்தவ மார்க்கத்தை இந்தியாவெங்கும் பரப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். கிருஸ்தவ மார்க்கத்தை பரவச்செய்வதில் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பெரும் ஒத்துழைப்பு தந்ததோடு அதற்க்கான எல்லா உதவிகளையும் அளித்திருந்தனர்.
"பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் பலப்படுத்த வேண்டுமானால் கிருஸ்தவ மார்க்கத்தை இங்கு பரவ செய்வதே ஒரே வழியாகும்." (லாரன்ஸ் லைப் பக்கம் 312)
அக்காலத்தில் இங்கிலாந்தில் பிரதமராக இருந்த லார்ட் பாமர்ஸ்டன் என்பவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்:-
"கிருஸ்தவ பிரசாரத்தை பலப்படுத்துவதில்தான் நமக்கு நன்மை இருக்கிறது. ஆகையால் இந்தியாவின் எல்லா மூளை முடுக்குகளிலும் கிருஸ்தவ மார்க்கத்தை பிரச்சாரம் செய்யுங்கள் ( தி மிஷன்)
சுருக்கமாக கூறுவதென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிகுந்த பலத்துடனும் விளங்கியபோது இந்தியாவிலும் முழு உலகிலும் கிருஸ்தவ மார்க்கம் மிகுந்த வேகத்துடன் பரவத் தொடங்கியிருந்தது. முழு உலகிலும் கிருஸ்தவ மார்க்கத்தை தழுவிவிடும் என்று கிருஸ்தவ பிரசாரகர்கள் நம்பியிருந்தனர்.
அக்காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த வில்லியம் ஹென்றி பெரோஸ் என்ற பாதிரி கீழ்வருமாறு கூறியிருந்தார்.
முஸ்லிம்களின் நாட்டில் என் இயக்கத்தை நான் பரப்பியே தீருவேன் லெபனானிலே, பாரசீக மலைகளிலே சிலுவையின் ஒளிக்கதிர்கள் பட்டுவிட்டன. கெய்ரோவும், டமாஸ்கசும், தெஹ்ரானும் இயேசுவின் சேவர்களாக மாறும் நாள் நெருங்கிவிட்டது. என்பதை இது அறிவுருத்துகிறது. அரபு நாடுகளில் ஒற்றுமை உடைக்கப்பட்டு இயேசு வானவர் தமது அடியார்களின் உருவத்தில் மக்காவின் கஹ்பாவில் நுழைவார். அப்போது, "உம்மை உண்மையான கர்த்தர் என்றும் இயேசு உம்மால் அனுப்பப்பட்டவர் என்றும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று அங்கு பேசப்படும். (பெரோஸ் சொற்பொழிவு 1896-97)
கிருஸ்தவர்கள் தமது மார்க்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் நிலையோ மிக மோசமானதாக இருந்திருந்தது. கிறிஸ்தவர்களின் பிரசாரத்தை தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாக அக்கால முஸ்லிம்கள் வாழ்ந்திருந்தனர். இதை குறித்து மதமாறிய ஒரு முஸ்லிம்-பாதிரி இமானுத்தீன் என்பவர் கூறியிருப்பதை பாருங்கள்:-
"இப்போது முகம்மதிய மார்க்கத்தின் உருவம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதற்க்கு உயிர் இல்லை. அது மரணித்து விட்ட ஒருமார்க்கமாக தற்போது இருக்கிறது. ஒரு மனிதனால் மிகச் சிரமத்துடன் உருவாக்கப்பட்டு ஆனால் உயிர் கொடுக்கமுடியாத ஓர் உருவம் போன்று இஸ்லாம் ஆகிவிட்டது." (தஹ்லீமே முகம்மதி பக்கம்: 35 1880 )
ஒரு பக்கம் கிருஸ்தவ மார்க்கம் மிகுந்த பலத்துடன் பரவல் செய்யப்படுகிறது. மறுபக்கத்தில் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார்கள். இத்தகைய ஒரு மோசமான காலத்திலேதான் இமாம் மஹ்தியும் வாக்களிக்கப்பட்ட மசீஹுமான ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் தோன்றினார்கள். இரு முக்கிய பணிகளை அவர்கள் தமது வாழ்க்கையின் இலட்சியாங்களாக கொண்டிருந்தார்கள். ஒன்று முஸ்லிம்களை சீர்திருத்துவது. மற்றது, சிலுவையை முறிப்பது கிறிஸ்தவர்களின் தீவிர பிரசாரத்தை தர்க்கரீதியிலான தமது பிரச்சாரத்தால் முறியடிப்பது. ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகை காலத்தின் பெரும்தேவையை பூர்த்தி செய்தது என்றே கூறவேண்டும்.
தற்கால கிருஸ்தவ மார்க்கக் கொள்கை ஒரு அடித்தள மற்ற கட்டிடத்திற்கு ஒப்பானது. இயேசு மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் மரணித்தார் என்ற அவர்களின் கூற்று ஒன்றே கிருஸ்தவ மார்க்கத்தின் உயிராகும். எப்போது இயேசு சிலுலவ்யில் மரணமடையவில்லை அவர் மரணித்து உயிர்தெழவுமில்லை என்று நிரூபிக்கப்படுமோ அப்போது கிருஸ்தவ மதம் ஒரு உயிரற்ற சடலமாகிவிடும்.
இதனை நன்கு உணர்ந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி கீழ்வருமாறு கூறி இருந்தார்கள்.:-
"என் இனிய நண்பர்களே! ஒரு இரகசியத்தை கூறுகிறேன் கேளுங்கள். இது எனது இறுதி போதனையாகும். இதனை நீங்கள் மனதில் வையுங்கள். கிறிஸ்தவர்களோடு நீங்கள் நடத்தும் விவாதங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இயேசு என்றோ மரணித்துவிட்டார் என்பதை நிலைநாட்டுங்கள். அப்போதுதான் அவர்களோடு நீங்கள் நடத்தும் விவாதங்களில் உங்களால் வெற்றிபெற முடியும். மஸீஹ இப்னு மர்யம் (ஈசா (அலை) அவர்கள்) இன்னும் வானத்தில் உயிரோடு வாழ்கிறார் என்ற உங்களின் நம்பிக்கையே அவர்களின் மார்க்கத்தின் தூணாக இருக்கிறது. இந்த தூணை நீங்கள் தகர்த்துவிடுங்கள் பிறகு கிருஸ்தவ மார்க்கம் உலகில் எங்கு இருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த தூண் உடைக்கப்பட்டு தவ்ஹீதின் தென்றல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் வீசவேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான். அதற்காகவே என்னை அனுப்பியுள்ளான். (இசாலே ஔகாம். பக்கம் 233)
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாம் மஹ்தியைப் பற்றி குறிப்பிடும் போது அவர் சிலுவையை முறிப்பார் என்று கூறி இருந்தார்கள். இதன் பொருள் வெளிப்படையில் சிலுவைகளை உடைப்பதல்ல, மாறாக சிலுவையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவர்களின் கொள்கையை தவறானதென்று நிரூபிப்பதாகும். ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் சிலுவையை முறிப்பதற்காக கிருஸ்தவ பிரசாரத்தை முறியடிப்பதற்காக தமது வாழ்க்கையை அற்பணித்திருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இன்றைய உலகில் கிருஸ்தவ பிரச்சாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகவும் இஸ்லாத்திற்கு ஒரு அரணாகவும் இலங்குவது ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா இயக்கமே. அஹ்மதியா இயக்கம் கிருஸ்தவ கோட்டையை தகர்க்கும் பீரங்கி படையாக அகில உலகத்திலும் செயல் பட்டு வருகிறது. இதனைக் குறித்து பல்வேறு நாட்டு பத்திரிகைகள் கூறுவதைப் பாருங்கள்!
"கிருஸ்தவ மதம் மிக விரைவாக அடிவாரத்தை நோக்கி செல்கிறது" தங்கனீக்க ஸ்டாண்டர்ட் 23-9-61)
"அஹ்மதியா இயக்கம் பெரும் பெரும் வெற்றியை அடைந்து வருகிறது. கானா விரைவில் முஸ்லிம் நாடாகி விடும் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. இங்கு கிருஸ்தவ மார்க்கம் அபாயகரமான நிலையில் உள்ளது. படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அஹ்மதியா இயக்கத்தால் கவரப்பட்டு வருகின்றனர். கிருஸ்தவ மதத்திற்கு இது ஒரு சவால் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்றைய ஆப்ரிக்காவை ஆளப்போவது சிலுவையா, இளம்பிறையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. (டெய்லி கிராபிக் கானா 7-12-57)
"நைஜீரியாவெங்கும் குறிப்பாக லாகோஸில் இஸ்லாம் மார்க்கம் பெரும் வாய்ப்பை பெற்றிருக்கின்றது என்று லாகோசின் பிரதம பிஷப் எழுதுகின்றார்." (நைஜீரியா ஹெரால்ட் 19-8-55)
அவர்கள் (ஆப்பிரிக்க முஸ்லிம்கள்) 30 வருடங்களுக்கு முன்னதாக தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து வந்தனர். எப்போது அஹ்மதிகள் தங்களுடைய பிரச்சாரத்தை இங்கு ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அவர்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. (டெய்லி டைம்ஸ் நைஜீரியா 23-2-55)
இன்றைய , உலகில் ஒரு பக்கம் கிருஸ்தவ மார்க்கம் வீழ்ச்சி அடைகிறது. மறு பக்கம் இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று? ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு இவைகளெல்லாம் இருந்தும் இன்று கிருஸ்தவர்கள் உலக நாடுகளில் வீழ்ச்சி அடைகிறார்கள் எவ்வித உலகாய சக்தியுமற்ற அஹ்மதியா இயக்கத்தின் மூலமாக இஸ்லாம் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருகிறது. இது அஹ்மதியா இயக்கம் இறைவனால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதற்கும் அதன் ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஒரு சத்திய வாதி என்பதற்கும் மறுக்க முடியாத சான்றுஆகும்.