அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.


4. வானத்தளவில் மனிதர்கள் உயர்த்தப்படுவதை அவர்களின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆகாய விமானத்தில், விண்கலங்களில், ராக்கெட்டில் மனிதன் விண்ணில் பறப்பதை தெரிந்துள்ள காதியானிகள், மனிதன் பூத உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்படுவது பகுத்தறிவுக்கு எட்டாது என்று சொல்வது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

5. அல்லாஹ் கையாளாகாதவனாக இந்த காதியானிகள் கருதுகிறார்கள் போலும், குறிப்பாக மனிதனால் சாதித்துக் காட்ட முடிந்ததை அல்லாஹ்வினால் சாதிக்க முடியாது என்று காதியானிகள் விதண்டாவாதம் செய்வது விந்தையாக உள்ளது. (பக்கம் 44)

என்றெல்லாம் எழுதிக் கொண்டு போகிறார்.

நம் பதில்:

மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) அவர்கள் எழுதிய ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் என்னும் நூலில் ரபஅ என்பதன் பொருள் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும், திருக்குர்ஆன், ஹதீஸில் இருந்து காட்டிய சான்றுகளுக்கும் அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பதில் தரவேயில்லை. மாறாக ரபஅ என்ற அரபிச் சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்துப் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. என்பதை நான் மறுக்கவில்லை என்று மட்டும் கூறி நழுவி இருக்கிறார். திருக்குர்ஆனில் ரபஅ எனும் சொல் மனிதர்களுடன் தொடர்புடையதாக ஏறக்குறைய 9 இடங்களில் (40:16, 2:254, 43:33, 6:84, 56:4, 58:12, 19:58, 12:101) வருகிறது. அந்த எல்லா இடங்களிலும் பதவி உயர்வு எனும் பொருளைத்தான் கொண்டுள்ளது. உடல் உயர்வு பற்றி எங்கும் வரவில்லை.

மிர்ஸா தாஹிர் (ரஹ்) அவர்கள் தமது நூலில் ‘திருக்குர்ஆனின் ஏனைய இடங்களிலும் ஹதீஸ்களிலும் ரபஅ என்ற சொல் ஆன்மீக உயர்வு என்று பொருள்படும் வண்ணமே கையாளப்பட்டு இருக்கிறது. ஆலிம்கள் கூறுவது போன்று வானத்திற்கு உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இச்சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. (ஆதாரம்: ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் பக்கம் 34) என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ரபஆ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் தரக்கூடிய ஒரேயொரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ், அரபி மொழி இலக்கியச் சான்றுகளிலிருந்து காட்டாதவரை (தனது நூலில் அபூ அப்தில்லாஹ் இதற்க்கு பதில் தரவில்லை) ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று கூறும் உரிமையோ, தகுதியோ, அவருக்கு இல்லை.

திருக்குர்ஆனில் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களைக் குறிப்பிட்டு அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் (19:58) என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்திலும் ஈஸா (அலை) அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே ரபஅ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அபூ அப்தில்லாஹ் இத்ரீஸ் (அலை) அவர்களுடன் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று ஒப்புக் கொள்வாரா?

ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்றால், அபூ அப்தில்லாஹ் கருத்துப்படி அல்லாஹ்வின் வல்லமையை குறைத்துக் கணிப்பது ஆகாதா? இருவருக்கும் ஒரே சொல் பயன்படுத்தப்பட்டிருக்க ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும் உடலோடு உயர்த்தப்பட்டதாக பொருள் கூற முடியுமா? (4:158) வது வசனத்தில் ரபஅ என்பதற்கு ஈஸாவை உடலோடு உயர்த்தி உள்ளான். எனவேதான் அல்லாஹ் வல்லமைமிக்கவனும் ஞானமிக்கவனுமாக இருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் வல்லமைமிக்கவன் என்று மட்டும் கூறவில்லை. ஞானமிக்கவன் என்றும் சேர்த்துக் கூறியுள்ளது. இவ்வாறு எங்கெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது அபூ அப்தில்லாஹ்வின் கருத்து பொருத்தமற்றதாகவே தெரியவரும். திருக்குர்ஆன் 39:43 இல் அல்லாஹ் உயிர்களை மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான் என்று கூறுகிறான். இதில் உயிர்கள்தான் கைப்பற்றப்படுவதாக இறைவன் கூறுகிறான். உடல்கள் அன்று. எனவே எது கைப்பற்றப்படுகிறதோ அதுதான் உயர்த்தப்படும்.

மேலும் ரபஅ என்ற சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ் ஒரு மனிதருடன் தொடர்புப்படுத்திக் கூறும் இடங்களில் எல்லாம் ஆன்மீக உயர்வு – பதவி உயர்வு என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர உடலை உயர்த்துதல் என்று எங்கும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஒரே ஒரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் காட்டட்டும். எனவே திருக்குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் மாற்றமாக உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் கொடுப்பது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் செய்கின்ற அவமதிப்பாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் எனபதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் மற்றொரு காரணம் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை; கொல்லவுமில்லை என்றால் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினா எழும்? அப்படியாயின், ரபஅஹுல்லாஹ் இலைஹி(4:158). ஆனால், அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலைப் பற்றியதாகத்தான் அல்லாமல் நிச்சயமாக அவரது ஆன்மாவைப் பற்றியதாகவோ ஆன்மீகப் பதவியைப் பற்றியதாகவோ இருக்க முடியாது என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார். (பக்கம் 15,16)

ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைச் சிலுவையில் அறையவும் இல்லை; கொல்லவுமில்லை என்று அல்லாஹ் கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுகிறார் போலும். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிகிறது. உலகில் எல்லா மனிதர்களுக்கும் இறப்பு என்பது சிலுவையில் அறையப்படுவதன் மூலமோ அல்லது கொல்லப்படுவதன் மூலமோ மட்டும் ஏற்படுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இந்த இரண்டு வழிகளில் இறக்காததினால், அவர் மரணமடையவில்லை என்று கருதலாம். அப்படியில்லாமல் இறப்பது என்பது இயற்கையாகவும் வேறு வழிகளிலும் வருகிறது. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கொல்லப்பட்டோ சிலுவையில் அறையப்பட்டோ இறக்கவில்லையே தவிர பிற வழிகளில் அதாவது இயற்கையாகவோ அல்லது வேறு வழிகளிலோ மரணித்திருக்கலாம் அல்லாவா?

அப்படியென்றால் அல்லாஹ் ஏன் அவ்வாறு சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ இறக்கவில்லை (வமா கத்தலூஹு வமா சலபூஹு) என்று கூறினான். திருக்குர்ஆனில் வசனங்களை விளங்குவதற்கு சில அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருக்குர்ஆன் தன் காலத்திற்கு முன்னர் உலகில் நிலவி வந்த தவறான கருத்துகளில் அல்லாஹ், நபிமார்கள் போன்றவர்களோடு சம்பந்தப்பட்ட அவசியமான கருத்துகளை மறுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 5:73-76இல்“நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் அல்லாஹ்தான் என்று கூறுபவர்கள் திட்டமாக நிராகரிப்பவர்களாவர்..... அல்லாஹ் மூவருள் ஒருவன் என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர்.....

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார்.”

இந்த வசனங்கள் இறைவனைப் பற்றியும் ஒரு நபியைப் பற்றியும் நபியின் தாயாரைப் பற்றியும் யூத, கிறிஸ்தவ மக்கள் கொண்டிருந்த தவறான கருத்துகளை எடுத்துக்காட்டி அதனை மறுக்கக்கூடிய வசனங்களாகும். அதாவது ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஆண் தொடர்பின்றி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றதால் மக்கள் அவர்களை (நவூதுபில்லாஹ்) விபச்சாரி என்றும், ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை (நவூத்பில்லாஹ்) விபச்சார புத்திரன் என்றும் கடுமையான அவதூறு கூறினார். எனவே அல்லாஹ் மக்களின் அவதூறை மறுக்கும் விதமாகத்தான் ஹஸ்ரத் ஈஸா(அலை) மற்றும் அவரது தாயாரைப் பற்றி மேற்சொன்ன வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அதேபோன்று ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்ததாகவும் மற்றும் பிற வகையில் கொன்று விட்டதாகவும் யூதர்கள் நம்பியிருந்ததால் அவர்களுடைய அந்த தவறான நம்பிக்கையை மறுக்கும் விதமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதனாலோ பிற வகையிலோ கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் வசனம் 4:158 இல் குறிப்பிடுகின்றான். சிலுவையில் அறைந்து கொல்லுதலை தவ்ராத் வேதம் சபிக்கப்பட்டமரணமாகக் கூறுவதனால் ஈஸா நபி (அலை) அவர்கள் அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாகவில்லை என்றும், அன்னாரது ருஹ் இறைவனளவில் உயர்த்தப்படும் அளவுக்கு புனிதமானது என்றும் காட்டுவதற்குத்தான். ரபஅ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவ்வாறு அவர் கொல்லப்படவில்லை என்று கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை. உயிரோடு இருக்கிறார் என்று கருதுவது தவறாகும். எப்படியென்றால் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஒரு நேர்மையான பெண்ணாக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறியிருப்பதனால், மற்ற நபிமார்களின் தாய்மார்கள் அவ்வாறு நேர்மையான பெண்களாக இருக்கவில்லை என்று கருதலாமா? இந்த இடத்தில் நான் முன்பு கூறியபடி யூதர்கள் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களை விபச்சாரி (நவூதுபில்லாஹ்) என்று கூறியதனால் அதை மறுக்கும் விதத்தில் திருக்குர்ஆன் அவரை ஒரு நேர்மையான பெண் என்று கூறுகிறது. இவ்விடத்தில் யூதர்களின் குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் அவருடைய நேர்மையை எடுத்துக் காட்டப்படுகிறதே தவிர அதனால் மற்ற நபிமார்களின் தாய்மார்கள் நேர்மையான பெண்கள் இல்லை என்று குறைத்து மதிப்பிடுவதாக பொருளாகாது. அதுபோன்று ஒரு அவதூறு பிற நபிமார்களின் தாய்மார்கள் மீது சுமத்தப்படவில்லை என்பதாலும், ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாலும் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறே யூதர்கள் ஈஸா (அலை) அவர்களுடைய மரணம் பற்றி தவறாகக் கூறிய கருத்துகளை மறுக்கும் விதத்தில் தான் சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ அவர் இறக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர அவர் இறக்கவில்லை என்ற பொருளில் அல்ல.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உட்பட எந்த நபியும் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை என்பதனால் அவர்கள் இறக்கவில்லை என்றோ உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்றோ சொல்ல முடியாது. ஏன் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை. அப்படியிருக்க அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் என்று இறைவன் கூறியதனால் அவர் உடலோடு உயர்த்தப்பட்டு உயிரோடு இருக்கிறார் என்று அபூ அப்தில்லாஹ் ஒப்புக் கொள்வாரா?

எல்லாவற்றிற்கும் மேலாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்துக் காபிர்கள் சில செயல்களைச் செய்து காட்டுமாறு கேட்டார்கள். அவற்றுள் ஒன்று நீர் இந்த உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது நாங்கள் வாசிக்கத்தக்க ஒரு நூலைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதற்கு அல்லாஹ் தன் தூதரிடம் பதில் கூறுமாறு கூறிய வசனங்கள் சிந்தனைக்குரியவையாகும்

“என் இறைவன் தூயவன்; நான் ஒரு மனித ரேஸுலேயன்றி வேறில்லை.”(17:94)

திருக்குர்ஆன் இந்த வசனத்திலிருந்து உடலோடு ஒரு மனித ரெஸுல் வானத்திற்கு ஏறிச் செல்வது அல்லாஹ்வின் தூய்மைக்கு மாறானதும், ஒரு மனித ரெஸுல் அவ்வாறு வானத்திற்கு ஏறிச் செல்லமுடியாது என்பதும் தெளிவாக விளங்குகிறது. இந்த வசனத்திற்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று நம்புவது அல்லாஹ்வின் பரிசுத்த தன்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு உடலுடன் சென்று விட்டார் என நம்பினால் இந்த வசனத்தின்படி அவர் மனிதனோ, ரஸுலோ இல்லை. மாறாக கிருஸ்தவர்கள் நம்புவது போல் அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ ஆவார் என நம்புவதாகிவிடும். மாறாக, வசனம் 17:94 இல் தர்கா என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் தர்கா என்ற சொல் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைக் குறித்து திருக்குரானில் பயன்படுத்தப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுடன் பயன்படுத்தப்பட்ட ரபஅ என்ற சொல் உடலோடு உயர்த்தப்படுதல் எனும் பொருளை தராது. எனவே அவர் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று விளங்கிக் கொள்ளலாம்.

அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று நாம் கூறுவது அல்லாஹ்வின் வல்லமையை மறுப்பது எனவும் அல்லாஹ்வை கையாளாகாதவன் என்று கருதுவதாகவும் தம் நூலில் எழுதியுள்ளார்.

அல்லாஹ், எல்லாம் வல்லவன் என்ற பண்பின் மீதும் அவனுடைய பிற பண்புகள் எல்லாவற்றின் மீதும், அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளோம் என்பதை அல்லாஹ்வின் படைப்பினங்கள் எத்தனை உண்டோ அத்தனை முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

அல்லாஹ்வுக்கு எல்லாம் வல்லவன் என்ற ஒரு பண்பு இருப்பது போல் அவர் பரிசுத்தமானவன் என்ற பண்பும் உள்ளது. எனவே ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு இன்னொன்றை மறுப்பது ஒரு வகை குப்ர் ஆகும். அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உடலோடு உயர்த்துவதற்கு சர்வ வல்லமையுள்ள இறைவனால் முடியுமென்றாலும் அவ்வாறு செய்வது அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம் என்று (17:94) இறைவன் கூறியுள்ளான்.

எப்படியென்றால் ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களை அவருடைய எஜமானி என்னருகே வா என்று தவறான செயலுக்கு அழைத்த போது அவர் பயந்து ஓடுகிறார். அந்தப் பெண் அவரை விரட்டுகிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு யூசுப் (அலை) அவர்கள் ஆண்மை இல்லாதவர் என்று கருத முடியுமா? அந்த இடத்தில் இறை அச்சமும் பாவத்தைப் பற்றிய அருவருப்பும் அவருடைய நேர்மையும் அச்செயலில் ஈடுபடாதவாறு அவரை தடுத்தது. ஒரு நபி அத்தகைய செயலைச் செய்யமாட்டார். எனவே ஒருவரால் செய்ய முடியும் என்பது வேறு. செய்யமாட்டார் என்பது வேறு என்பதை அபூ அப்தில்லாஹ் போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரை உடலோடு உயர்த்த அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவனுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம், களங்கம் என்பதால் இறைவன் அவ்வாறு செய்யமாட்டான்; செய்யவில்லை.

இவ்வாறு அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவதால் அல்லாஹ்வின் வல்லமையை நாங்கள் மறுத்ததாகி விடும் என்று கூறுவதாக இருந்தால் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறோம்.

1. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களையும் அவரது தாயாரையும் இரு கடவுள்களாகப் படைக்க அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டா? இல்லையா?

2. இறைவன் தனக்கென சந்ததிகளை உருவாக்க வல்லமை உண்டா? இல்லையா?

3. அல்லாஹ் மலக்குகளை பெண் மக்களாக படைக்க வல்லமை உண்டா? இல்லையா?

இதற்கு அபூ அப்தில்லாஹ் என்ன பதில் கூறுவார்?

இவை போன்ற இடங்களில் திருக்குர்ஆன் கூறுவது போல் அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கும் தவ்ஹீதுக்கும் மாற்றம் என்பதால் இறைவன் செய்யவில்லை என்று விளங்குகிறது. அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும் என்பது வேறு; செய்யமாட்டான் என்பது வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. ஒன்று, அல்லாஹ்வுடைய வல்லமை. மற்றொன்று அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மை.

மேலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் தம் நூலில் (இரண்டாம் பதிப்பில்) பக்கம் 27 இல் கேட்டுள்ள வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் அவர்கள் பதில் தரவில்லை. எனவே அவ்வினாக்களை சுருக்கமாக இங்கே மீண்டும் எழுப்புகிறோம்.

“ஓர் அடியான் இறைவனுக்காக தாழ்மைக் குணத்தை மேற்கொண்டால் இறைவன் அவரை 7 ஆம் வானத்திற்கு உயர்த்திவிடுவான்.” (கன்ஸுல் உம்மால்)

இந்த நபிமொழியில் வரும் ரபஅ என்னும் சொல்லைக் காரணம் காட்டி தழ்மைக்குணம் உள்ளவனை இறைவன் உடலோடு வானத்திற்கு உயர்த்துவான் என்று பொருள் கூறுவாரா? அவ்வாறு யாரும் கூற மாட்டார்கள். இப்படி பொருள் கூறுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் மட்டும் என்ன? எல்லா நபிமார்களும், வலிமார்களும், தழ்மைக்குணம் கொண்ட அத்தனை நல்லடியார்களும் உடலோடு வானிற்கு உயர்த்தப்பட்டு அங்கு வாசம் செய்வதாக நம்ப வேண்டும்.

ஐவேளைத் தொழுகையை கடைபிடிக்கிறவர்கள் தொழுகையின் போது ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் வர்பஹ்னி (இறைவா) என்னை உயர்த்துவாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். உடலுடன் வானிற்கு உயர்த்துவது இதற்குப் பொருள் என்றால் வாழ்நாள் எல்லாம் தொழுது வந்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் இவ்வாறு செய்து வந்த பிராத்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றல்லவா கூற வேண்டி வரும்? ஏனென்றால் இவ்வாறு பிராத்தனை செய்த எவரும் உடலுடன் வானிற்கு உயர்த்தப்படவில்லையே. எனவே இந்தப் பிராத்தனையின் பொருள் என்னுடைய நிலையை உயர்த்துவாயாக என்பதே தவிர வேறொன்றும் இல்லை.

இந்த வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் எங்கும் பதில் தரவில்லை. ஒருவேளை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு வந்தது போன்ற ஒரு சூழ்நிலை வேறு யாருக்கும் வரவில்லை. வந்திருந்தால் அவர்களும் இறைவன் அளவில் உடலோடு உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி பதில் தரவில்லையோ அல்லது பதில் தர முடியாத நிலையோ? அல்லாஹ் அறிவான்.

அப்படி ஒரு காரணமும் அவர் காட்ட முடியாது. ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கோ அவர்களின் தலைக்கு 100 ஒட்டகம் விலை வைக்கப்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களை உடலோடு உயர்த்தி தன்னளவிலோ, ஏழாவது வானத்திலோ, குறைந்தபட்சம் மதீனாவிலோ கொண்டு வைக்கவில்லையே! அல்லாஹ் கையாளாகாதவன் (நவூதுபில்லாஹ்) என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? அல்லது அல்லாஹ் பாரபட்சமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒருவிதமாகவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருவிதமாகவும் செய்துவிட்டான் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா?

அல்லாஹ்வின் நடைமுரையில் ஒருபோதும் மாற்றமில்லை (குர்ஆன் 33:63) மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சூரா பாத்திகாவில் செய்த “ இறைவா நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை) நடத்துவாயாக” என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை ஹிஜ்ரத் செய்த வேளையில் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் வல்லமையாகும்; நடைமுறையுமாகும். அதாவது தவ்ர் குகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றி மதீனா கொண்டு சேர்த்தான். அவர்கள் குகையில் இருக்கும் போது, எதிரிகள் பலர் குகைக்கு வெளியே நின்று கொண்டிருக்க ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் இருவர் தானே இருக்கிறோம். எதிரிகள் பலர் இருக்கின்றனரே! என்று கேட்க அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான். என்று பதில் கூறினார்கள்.

அந்தக் குகையில் அல்லாஹ் அவர்களுடன் இருந்தான். அல்லாஹ் அவர்களை உடலுடன் தன்னளவில் உயர்த்திக் கொள்ள வில்லை. மாறாக அவன் அந்த மாநபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வும் இருந்தான். இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாகும்.

இவ்வாறுதான் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். இதிலிருந்து திருக்குர்ஆன் நபி மொழிகளின் அடிப்படையில் அல்லாஹ்வின் வல்லமையை சரியாக மதிப்பிட்டு யார் நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.