அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

திருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில்லாஹ் தரும் தவறான விளக்கம்


அபூ அப்தில்லாஹ் ஆதாரம் எண் 3, 4

அபூ அப்தில்லாஹ் தன் நூலின் பக்கம் 22 முதல் 25 வரை, ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; இனிமேல் மரணிப்பார் என்பதற்கு ஆதாரமாக 5:75, 3:144 வசனங்களை விளக்கியுள்ளார். 

“முஹம்மது தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா?” (திருக்குர்ஆன் 3:144) மேலும் மர்யம் உடைய குமாரர் மஸீஹ் இறைத் தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்பும் தூதர் பலர் சென்று விட்டார்கள். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர்.” (திருக்குர்ஆன் 5:75) 


அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 25இல் கடைசி பத்தியில் அப்படியாயின் அதன் பொருள் என்ன? 5:75 வசனம் இறங்கும் போது ஈஸா(அலை) மரணமடைந்துவிடவில்லை, பின்னர் மரணமெய்துபவர்களாக இருக்கிறார்கள். 3:144 வசனம் இறங்கி சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்களின் வபாத் சம்பவித்தது போல், 5:75 வசனம் இறங்கி, இதுவரை மரணமடையாத நிலையில் இருக்கும் ஈஸா(அலை) அவர்கள், உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து, வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

மேற்சொன்ன 2 வசனங்களுக்கும் அபூ அப்தில்லாஹ் தவறாகப் பொருள் கூறியுள்ளார். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் அன்னார் மரணிக்கவில்லை என ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களும், நபித்தோழர்களுள் ஒரு பகுதியினரும் நம்பினார். அச்சமயம் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து திருக்குர்ஆனின் 3:145 வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இதில் முஹம்மது ஒரு தூதர் என்று கூறி, முஹம்மது நபி இறந்துவிட்டார் என்று கூறப்படவில்லை. மாறாக அன்னாருக்கு முன்னர் தோன்றிய தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று எடுத்துக் காட்ட, ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது ஒரு தூதரே. அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நிரூபித்தார். அன்னார் இறக்கவில்லை. என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த உமர்(ரலி) அவர்களும் பிற நபித்தோழர்களும், அன்னார் இறந்துவிட்டார்கள் என்றும் ஏற்றுக் கொண்டனர். 

அதாவது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அந்த வசனத்தில் கூறப்படவில்லை. மாறாக அன்னார் ஒரு தூதர் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு முன்னர் வந்த தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக கூறாத இந்த வசனம் (3:145) அன்னார் இறந்துவிட்டார்கள் என்று பொருள் தந்து நபித்தோழர்களுக்கிடையே ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டு வந்துவிட்டது. இந்த அளவுகோலை நாம் 5:75 ஆம் வசனமாகிய ஈஸா(அலை) ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்பதற்கும் பொருத்தினால் நமக்கிடையே நிலவும் கருத்துவேறுபாடும் நீங்கும். 3:145 வசனத்திற்கு நபித்தோழர்கள் எல்லோரும் அன்று பொருள் கொண்டதுபோல், 5:75 வசனத்திற்கும் பொருள் கொண்டால், ஈஸா நபி (அலை) அவர்களும் இறந்துவிட்டார் என்பது தெளிவாகும். 

மேலும் 5:76, 3:145 ஆகிய வசனங்களில் அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்றுவிட்டனர் என்று பொருள் கொள்ளவேண்டுமேயொழிய அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவருக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்று விட்டனர் என்று பொருள் கொண்டால்தான் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கும் மரணம் உண்டு என்பது உறுதியாகும். மாறாக அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டனர் என்று பொருள் கொடுத்தால், முன்னர் உள்ள தூதர்களில் சிலர் செல்லவில்லை என்று பொருள் கொள்ளவேண்டியதுவரும். அப்படியாயின் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஈஸா(அலை) ஆகியோர் மரணிக்கவும் மரணிக்காமல் இருக்கவும் (அதாவது இனிமேலும் மரணிக்காமல் இருக்கவும்) வாய்ப்பு ஏற்படுகிறது. 

இதனைப் புரிந்து கொள்வதற்காக ஓர் உதாரணத்தை இங்கே காட்ட விரும்புகிறேன். முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் ஆண்களாக இருந்ததனர். இவ்வாறு திருக்குரானில் இல்லைஎன்றாலும் இதை ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் சில பெண்களும் தூதர்களாக இருந்தனர் என்றுதான் பொருள் கொள்ளமுடியும். ஆனால் முகம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர், அவருக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் ஆண்களாக இருந்தனர் என்று வந்தால் மட்டுமே, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் ஆண்கள்தான் என்று பொருள் கொள்ள முடியும். 

திருக்குர்ஆன் 5:76 வசனத்திற்கு அபூ அப்தில்லாஹ்வின் கற்பனை விளக்கத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் இவ்வசனத்தில் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கு முன்னால் உள்ள வசனங்கள் அமைந்துள்ளன. 

திருக்குரானில் 5:73 இல், நிச்சயமாக மர்யமின் மகன் அல்லாஹ்தான் எனக் கூறுகிறவர்கள் திட்டவட்டமாக நிராகரிப்பவர்கள் ஆவர். மேலும் திருக்குர்ஆன் 5:74 இல் நிச்சயமாக, அல்லாஹ் மூவருள் ஒருவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர். 

இவ்விரு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் என்றும் அல்லாஹ்வின் மகன் (சுதன்) என்றும் மக்கள் கூறியதை குப்ர் என்று அல்லாஹ் கண்டிக்கின்றான். 

மேலும் இவ்விருவசனங்களையும் தொடர்ந்து 5:76 இல் “மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னாலுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர். அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்” என அல்லாஹ் கூறுகின்றான். 

முதலில் 5:73, 74 வசனங்களில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் மக்கள் நம்புவதை மறுத்து, அதாவது அவர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ இல்லை என்று நிரூபிக்க அதற்கான நான்கு காரணங்களை 5:76 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அதாவது, 

அவர் ஒரு தூதர் மட்டுமே. எனவே அவர் கடவுள் இல்லை. 

அவருக்கு முன்னர் வந்த தூதர்களைப் போல் ஈஸாவும் இறந்துவிட்டார். இறந்தவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளுக்கு இறப்பு இல்லை. எனவே அவர் கடவுள் இல்லை.

அவர் மர்யத்தின் மகனாவார். எனவே அவர் கடவுள் குமாரர் அல்ல. மேலும் கடவுளுக்குப் பிறப்பு இல்லை. ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் கடவுளும் இல்லை. 

ஈஸா (அலை) அவர்களும் அவரின் தாயாரும் உணவு உண்டனர். எனவே அவர் கடவுள் இல்லை. காரணம் கடவுளுக்கு உணவு தேவை இல்லை. உணவின் தேவைக்கு உட்பட்டவர் கடவுளும் இல்லை. 
இவ்வாறு 5:76 வசனத்தில் ஈஸா(அலை) கடவுள் இல்லை என்பதை விளக்குவதற்கு நான்கு கருத்துக்களைக் கூறிய இறைவன் அதில் ஒன்றாக் ஈஸாவின் மரணத்தையும் குறிப்பிடுகின்றான். 

இவ்வாறு ஒவ்வொன்றையும் காரண காரியத்துடன் கூறும் திருக்குரானுடைய அழகையும் ஆழிய ஞானத்தையும் சிந்தித்துப் பார்க்காமல் முல்லாக்களைப் பின்பற்றி வெறும் கற்பனை கிஸ்ஸாக்களை ஈஸா நபியின் பெயரில் அவிழ்த்துவிட்டுள்ளார் அபூ அப்தில்லாஹ். பரிதாபம்!

5:76 வசனத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கருத்துக்களில் இரண்டாவது கருத்தாகிய, எல்லா தூதர்களையும் போல ஈஸாவும் மரணித்துவிட்டார் என்று தெளிவாகக் கூறியிருந்தும், அபூ அப்தில்லாஹ் அவர்கள் இனிமேல் தான் ஈஸா நபி (அலை) மரணிப்பார் என்று எழுதியிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாகும். 

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் நிலவி வந்த இதுபோன்ற தவறான கருத்துக்களை திருக்குர்ஆன் மறுத்து உண்மையை நிலைநாட்டி உள்ளது. கிறித்தவர்கள் மர்யத்தின் மகனான ஈஸா(அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் கூறி வந்தனர். இதனை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் மறுக்கிறது. ஈஸா(அலை) இனிமேல்தான் மரணிப்பார் என்றால், அவர் கடவுள் இல்லை என்ற வாதம் எடுபடாது. ஈஸா நபி (அலை) மரணித்த பிறகே இந்த வாதம் முழுமையாகும். தௌஹீதுவாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அபூ அப்தில்லாஹ் தௌஹீதை வலியுறுத்தும் இந்த இறைவாக்கை மறுக்கின்றார். 

திருக்குர்ஆன் தோன்றும் போது ஏறக்குறைய 600 ஆண்டுகளும், இன்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஒரு மனித தூதர் 2000 ஆண்டுகளாக இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் அவர் கடவுள்தான் ஏனென்றல் “ நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் மிக நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லை. நீர் இறந்து அவர்கள் உயிரோடு இருப்பதா” (21:35) என்ற வசனத்தின்படி எந்த மனிதருக்கும் நீண்ட ஆயுள் இல்லை என்பதும் ஈஸா(அலை) ஒரு மனிதர். எனவே அவரும் நபி (ஸல்) காலத்தில் உயிரோடு இல்லை என்பதும் தெளிவாகிறது.

அபூ அப்தில்லாஹ் தனது நூலில் 24 வது பக்கத்தில் 5:76 இறை வசனம் மூலம் ஈஸா(அலை) அவர்களின் மரணம் குறித்து அன்றும் மக்களிடையே சந்தேகம் நிலவியது, ஈஸா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூல உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவரா? மரணமற்றவராயின் அல்லாஹ்வுக்கு இணையாகுமே என காதியானிகள் இன்று கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம் என்று எழுதியுள்ளார். (பக்கம் 24), மேலும் (3:144) இந்த இறைவசனம் இறங்கியவுடன் குறைஷி குப்பார்கள், இன்று காதியானிகள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று 5:75 வசனத்திற்கு பொருள் கொள்வது போல் 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கவே, அவர்கள் உஹது யுத்தக்களத்தில் மாண்டு விட்டார்கள் என்ற வதந்தியைப் பரப்பினார்கள், ஆனால் பின்னர் குறைஷிக் காபிர்களும் தெள்ளத் தெளிவாக 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடவில்லை, இனிதான் இறப்பார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.... (பக்கம் 25) மேலும் 5:75 வசனம் இறங்கி இதுவரை மரணமடையாத நிலையிலிருக்கும் ஈஸா(அலை) அவர்கள் உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடைக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது, அதன் பின்னரும் ஈஸா (அலை) அவர்கள் மீது கொண்ட பாசம், பற்று காரணமாக தம் நிலைமாறி மக்கள் ஈஸா(அலை) அவர்கள் மரிக்கவில்லை என்றும், முன்பு போல் திரும்பவும் வருவார்கள் என்றும் கூறத் தலைப்படுவார்கள், அத்தருணத்தில் இந்த வசனம் ஓதிக்காட்டப்படும்; ஈஸா(அலை) அவர்களின் மரணம் உறுதி செய்யப்படும், பக்கம் (25, 26)

நம் பதில்: 

கடந்தகால, எதிர்கால ஞானம் அபூ அப்தில்லாஹ்வுக்கு எப்படி கிடைத்தது? மேலே சொல்லப்பட்ட கற்பனை நயம் செறிந்த கதைகளுக்கு ஹதீது சான்றுகள் இருப்பின் தருமாறு அபூ அப்தில்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்வது வழிகேடேயன்றி வேறில்லை. 

திருக்குர்ஆன் 3:145 வசனம் பற்றிய விளக்கம்: 

முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்துவிட்டனர். எனவே அவர் மரணமடைந்துவிட்டாலோ கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா? (3:145) 

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்திருந்தால் மட்டுமே இந்த வசனத்தில் இவ்வாறு கூற முடியும். அவ்வாறு அனைவரும் மரணித்திருந்தால் தான் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணமும் உறுதி என்று பொருள் கொள்ளமுடியும். மேலும் இவ்வசனத்தில் வரும் அவர் மரணித்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா என்ற பகுதி அன்னார் போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி பரவியதன் காரணமாக பலர் நிலைகுலைந்து மனம் தடுமாறி விட்டனர் என்பதையும், திரும்பிச் செல்லத் தொடங்கினர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறக்கமாட்டார்கள் என்று எண்ணியிருந்தனர். என்பதனையும் தெளிவாக்குகிறது. எனவே எல்லாம் அறிந்த அல்லாஹ் திருக்குர்ஆன் 3:145 வசனத்தை இறக்கினான். 

இந்த வசனத்தின் மூலம் முஹம்மது ஒரு மனிதர் ஆவார். அவர் இறக்காமல் இருக்க கடவுள் அல்லர். முஹம்மதுக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் இறந்துவிட்டனர். அவர்களுள் யாராவது ஒருவர் இறக்காமல் இன்று உயிரோடு இருந்தால்தானே இவரும் இறக்காமல் இருக்க முடியும். முஹம்மதுக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் இறந்ததுபோல் இவரும் இறப்பார் என்ற கருத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு இந்த வசனம் ஈஸா நபி (அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்துவிடுகிறது. 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வசனம் இறங்கி 9 வருடங்களுக்குப் பின் மரணம் அடைகிறார்கள். அப்போது அன்னார் மரணிக்கவில்லை என்று சிலர் கருதினர். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும் அன்னார் மூஸா(அலை) அவர்கள் 40 நாள்கள் தமது சமுதாயத்தைப் பிரிந்து இறைவனைக் காண்பதற்குச் சென்றதைப் போன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தற்காலிகமாக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் வந்து அன்னார் இறந்துவிட்டதாகக் கூறிய முனாபிக்குகளைத் தண்டிப்பார் என்றும் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

இதிலிருந்து நபித்தோழர்கள் மத்தியில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இறக்காமல் இறைவன் அளவில் உயர்த்தப்பட்டார்கள் என்ற தவறான நம்பிக்கை இருக்கவில்லை என்று தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பற்றிதான் கூறியிருப்பார்கள். அவ்வாறு ஈஸா(அலை) அவர்களைப் பற்றி கூறாமல் மூஸா(அலை) அவர்களின் சம்பவத்தைக் கூறி இருப்பதனால் நபித்தோழர்கள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார்கள் என்று உறுதியாகிறது. 

பின்னர் ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் வந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்து முத்தமிட்டு 3:145 வசனத்தை ஓதினார்கள். இங்கே ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்து விட்டனர் என்ற வசனத்தை ஓதி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்தார்கள். 

மேலும் யார் முகம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்; அந்த முஹம்மது இறந்துவிட்டார் என்றும் ஹஸ்ரத் அபூபக்கர் (ரயில்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, எண். 4454) இதிலிருந்து இறந்துபோன முஹம்மது (ஸல்) அவர்களை இறக்கவில்லை என்று கருதினாலோ, அல்லது அபூ அப்தில்லாஹ்வின் கற்பனையைப் போன்று இனிமேல்தான் இறப்பார் என்று கருதினாலோ அது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவதற்கு ஒப்பாகும் என்றுதான் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதன்படி ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா(அலை) அவர்களை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.