அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு


அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த ஒப்பற்ற,மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)

'முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை) விளங்குகின்றார்கள்.' (33:40)


காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர் என்று தவறாகப் பொருள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அது திருமறையில் காணப்படும் போதனைகளுக்கும் அரபு அகராதிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும்.

காத்தம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் இறுதியானவர் (கடைசியானவர்) என்ற பொருளே இல்லை. அதாவது 'காதம்'என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வரும்போது அதாவது ஒரு கூட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம், அந்தக் கூட்டத்தில் சிறந்தவர், அந்தக் கூட்டத்தில் பரிபூரணத் தன்மையைப் பெற்றவர் என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது. இதனைப் பற்றி இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கின்றேன்.

இந்தச் சொல் நபிகள் நாயகத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்க்காகத்தான் கூறப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இறுதியாகவும், கடைசியாகவும் வருவதால் அவருக்கு எந்தவிதமான சிறப்பும் கிடைப்பதில்லை. ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் கலீபாக்களில் இறுதியானவர் என்று கூறினால் அதனால் அவருக்கு எந்தவிதச் சிறப்பும் கிடைப்பதில்லை. அதைப் போன்றே இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்களில் கடைசியானவர் என்பதால் பஹதூர் ஷாஹ் சபருக்கும் எந்தச் சிறப்பையும் வரலாறு கொடுப்பதில்லை. ஒருவருடைய சந்ததிகளில் கடைசியானவர் என்ற காரணத்தால் எந்த ஒரு மகனுக்கும் சிறப்பு கிடைப்பதில்லை. அதைப் போன்றே ரஹ்மத் துன் லில் ஆலமீன் ஆகத் தோன்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுபுவ்வத் என்ற ரஹ்மத்தை நிறுத்துவதற்க்காக நபிமார்களில் இறுதியாகத் தோன்றியவராவார்கள் என்று கூறினால் நபிகள் நாயகத்திற்கு அதனால் எந்த ஒரு சிறப்பும் கிடைக்கப்போவதில்லை என்பதோடு மட்டுமல்ல, ஓர் இறையருளை நிறுத்துவதற்காகத் தோன்றிய ஒருவராகத்தான் அவர்கள் கணிக்கப்படுவார்கள். (நவூதுபில்லாஹ்)

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் சிறப்புமிக்கவர்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டுவதற்கு திருக்குரானில் 'காத்தமுன் நபிய்யீன்'என்ற சொல்லைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்க காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லுக்கு நபிமார்களில் இறுதியானவர் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்கில் சிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டும் எந்த சொல்லையும் திருக்குர் ஆனில் நாம் காண முடியாது. மேலும் நாம் பொதுவாக அன்றாடம் பயன்படுத்திவரும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சொல்லுக்கும் திருக்குரானில் காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லைத் தவிர வேறொரு சொல்லையும் காணமுடியாது.

திருக்குர் ஆனில் ஏராளமான இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்கள் தோன்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (3:180, 22:76, 7:36, 16:3, 40:16, 6:89, 17:16, 4:70-71,57:17-18) ஆகிய திருவசனங்கள் இதற்குச் சான்றாக திகழ்கின்றன. அவ்வாறு தோன்றும் இறைத்தூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஷரியத்தின் கீழ் தாம் தோன்றுவார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்றால், மேற்கூறப்பட்ட திருவசனங்கள் இதற்க்கு முரண்பட்டவையாக அமைந்துவிடும். (நவூதுபில்லாஹ்)

'காத்தமுன்னபியீன்' என்ற சொல்லுக்கு இறுதி நபியென்று பொருள் கொடுக்கப்பட்டால், இந்தத் திருவசனத்தின் சிறப்புத் தன்மையே சிதறிவிடும். இந்த வசனத்தில் கூறப்பட்ட விளக்கம் இதுவேயாகும்.

அதாவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உங்களில் எந்த ஆண் மகனுக்கும் தந்தையல்ல என்று கூறப்பட்டிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பௌதீகமான முறையில் எந்த ஆண்மகனுக்கும் தந்தையல்லாதது போன்று ஆன்மீகமான முறையிலும் அவர்கள் எவருக்கும் தந்தை அல்ல என்ற சந்தேகம் எழுப்பப்படலாம். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்காகவே அல்லாஹ், 'வலாகின் ரசூலுல்லாஹி - ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்'என்று கூறியதன் மூலம் அன்னாரை ஏற்றுக்கொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்கள் ஆத்மீகத் தந்தையாக விளங்குகிறார்கள். எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் தோன்றிய எல்லா நபிமார்களுடைய உண்மைக்கும் சாட்சியாக விளங்குகிறார்களோ அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாட்சி முத்திரை இல்லாமல் இனிமேல் எந்த ஒரு நபியும் வர இயலாது என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆத்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டு அன்னாருடைய ஷரியத்திற்க்குப் பூரணமாகக் கீழ்ப் படிந்து அன்னாரின் சீடராக இல்லாத எவருமே நபித்துவம் என்ற அருளைப் பெற முடியாது.

திருக்குரானின் இந்த உண்மை விளக்கத்திற்கு மாறுபட்ட முறையில்,திருக்குரானுக்கும், நபிமொழிகளுக்கும் முரணான வகையில்,அஹ்மதியா ஜமாத்தின் கொடும் எதிரிகள் தவறான முறையில் விளக்கம் கொடுத்து, சமுதாயத்தில் பல குழப்பங்கள் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இலங்கையில் மௌலவி அப்துல் வதூது என்பவரும் ஒருவர்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை அஹ்மதியா ஜமாத்திற்கும் அங்குள்ள பஹாயி இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற விவாதத்தின் போது குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த அப்துல் வதூது மௌலவியும் அவருடைய கூட்டத்தினரும் அரங்கத்தினுள் புகுந்து, அஹ்மதிகளாகிய நாங்கள் விவாதம் செய்யவேண்டும் என்று அடம் பிடித்தனர். காத்தமுன்னுபுவத்தை தவிர வேறு எந்த ஒரு விஷயத்தையும் பற்றியும் விவாதிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே இந்தத் தலைப்பிலேயே விவாதம் நடைபெற்றது. காத்தமுன்னுபுவ்வத் என்ற சொல்லுக்கு அஹ்மதிகள் கொடுத்த விளக்கத்திற்க்கோ நபிகள் நாயகத்திற்குப் பிறகு நபி வரலாம் என்ற வாதத்திற்க்குள்ள சான்றுகளுக்கோ பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வதூது மௌலவி தமது சீடர்களுடன் பலவகையிலும் குழப்பம் விளைவிக்க முயன்றார்.

அவர் அல் ஜன்னத் என்னும் மாத ஏட்டில் மேற்குறிப்பிட்ட விவாதத்தைப் பற்றி முற்றிலும் பொய்யான ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். வானத்தின் கீழ் மிகவும் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட முல்லாக்களில் ஒருவராகிய இவர் சிறிதும் இறையச்சமில்லாமல் மேற் கூறப்பட்ட விவாதத்தைப்பற்றி பொய்யும் புரட்டும்தான் எழுதியிருக்கிறார். இதற்க்கு முதல் பதில் 'லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்' - பொய்யர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்' என்பதே.

அந்த விவாதத்தின் ஒலி நாடாக்கள் அஹ்மதியா ஜாமாத்திடம் இருக்கின்றன. அதனை இலங்கை அஹ்மதியா ஜமாத்தினர் தங்களுடைய பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்த மக்கள் உண்மையை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார்கள். மௌலவி அப்துல் வதூது, அந்த ஒலி நாடாக்களை (கேசட்டுகளை) அப்படியே எழுத்து வடிவமாக மாற்றி அல் ஜன்னத்திலோ தமது வான்சுடரிலோ வெளியிடத் தயாரா? என்று நாங்கள் கேட்கிறோம். அப்போதுதான் அல் ஜன்னத் மற்றும் வான்சுடர் வாசகர்களுக்கு உண்மையை புரிய இயலும்.

மேற்கூறப்பட்ட அல்ஜன்னத் ஏட்டில் அந்த மௌலவி பின்வருமாறு எழுதியுள்ளார்:

"நபியவர்கள் அலி (ரலி) அவர்களை நோக்கி "அலியே! நான் நபிமார்களுக்கு காத்தம் ஆவேன். நீர் அவுலியாக்களுக்கு காதமாக இருக்கின்றீர்" என்று நபியவர்கள் கூறியதாக ஹதீத் என்ற பெயரில் பொய்யொன்றை முன்வைத்த முஹம்மது உமர், காதம் என்ற சொல்லுக்கு இறுதி என்று அர்த்தம் இல்லை. சிறப்பு என்பதே அர்த்தமாகும். அவ்வாறு இறுதி என்று அதற்க்கு அர்த்தம் கொடுக்கப்படுமானால் அலி(ரலி) அவர்களுக்குப் பின்னால் அவுலியாக்கள் எவருமே இல்லை எனபதா என்றொரு பீடிகையைப் போட்டார்"- அதாவது மேற்கூறப்பட்ட பொய்யானது என்றும் சஹீஹானதாக (நமபத்தகுந்ததாக) இல்லை என்றும் அவர் அந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.

மேற்கூறப்பட்ட விவாதம் முழுவதையும் கேட்பவர்களுக்கு உண்மையைப் புரிய முடியும் என்றாலும் இதற்க்கு மட்டும் சிறு விளக்கமளிகக் விரும்புகிறேன்.

இந்த ஹதீத் தஹ்தீபுத் தஹ்தீபில் ஹஸ்ரத் இப்னு ஹைஜர் (ரலி) அவர்கள் சரிபார்த்ததாகும். இந்த ஹதீதிலுள்ள எல்லா ராவிகளும் (அறிவிப்பாளர்களும்) முஹம்மதிப்னு சவ்வாரிலிருந்து அனஸ்வரை உறுதிவாய்ந்தவர்களாவார்கள்.

மேலும் 'தப்சீர் ஸாஃபி' என்னும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் காத்தமுன்னபிய்யீன் என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கையிலும், 'குனூசுல் ஹகாயிக்' என்னும் நூலிலும் 'அல் மனாகிப்' என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. தப்சீருல் பயான் என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹாளிப்னு அப்துல்லாஹ் என்பவரிலிருந்து முஹம்மது பின் சவ்வார், மாலிகிப்னு தீனார், அல்ஹசனுல் பஸரீ, அனஸ் வரையுள்ள ராவிகள் இந்த ஹதீஸை ரிவாயத் செய்துள்ளனர்.

நாங்கள் தரும் விளக்கம், காதம் என்ற சொல் ஒரு கூட்டத்துடன் (பன்மையாக) வரும் போது அதற்க்குச் சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த ஹதீஸை நாங்கள் எடுத்துக் காட்டியுள்ளோம். இந்த ஹதீஸைப் பற்றி அது சஹீஹானதல்ல என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதனால் காதம் என்ற சொல்லுக்குச் சிறந்தது என்று அர்த்தமல்ல: இறுதியானது என்ற அர்த்தம் மட்டும் தான் இருக்கிறது என்று எவராலும் நிரூபித்துக் காட்ட இயலாது.

மேலும் சில சான்றுகளை இங்குத் தருகிறோம்.

அபூ தம்மாம் தாயீ என்னும் கவிஞ்சர் மரணமடைந்த போது ஹசன் பின் வஹ்ஹாப் என்ற கவிஞ்சர் எழுதிய ஒரு கவிதையில் அபூ தம்மாம் தாயீயை 'காத்தமுஷ்ஷூ அராயி கவிஞ்சர்களில் காத்தம் அதாவது சிறந்தவர் என்று வர்ணித்துள்ளார்கள். (வபாயத்துள் அய்யான்)

தேவ்பந்து அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்லாமா முஹம்மத் காசிம் அவர்கள், ஷாஹ் அப்துல்லாஹ் அஸீயைப் பற்றி "ஹாத்தமுல் முஹத்திசீன் வல் முபஸ்ஸீரி (ஹத்யத்துஷ்ஷியா) என்றும்

சைஹுள் ஹிந்து மௌலானா மக்மூதுல் ஹசன், தமது 'மர்சிய்யா'என்னும் நூலில் மௌலானா ரஷீது அஹ்மத் அவர்களைப் பற்றி'ஹாத்தமுல் அவ்லியா வல் முஹத்திசீன்' என்றும்

ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ்வைப் பற்றி ஷாஹ் அப்துல் அசீஸ் அவர்கள், தமது 'உஜாலா நாபியா' என்னும் நூலில் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்

மகாமத்தே ஹரீரி என்னும் நூலில் அதன் ஆசிரியர், அல்காசிம் பின் அலியை, 'காத்தமுல் புல்கா' என்றும்

'முஅத்தா' ஹதீஸ் நூலில் ஷரஹில் அல்லாமா முஹம்மது சர்க்கானியை காத்தமுல் முஹக்கிகீன்' என்றும்

'இத்கான்' என்னும் நூலின் ஆசிரியர் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தியை 'காத்தமுல் முஹக்கிகீன்' என்றும் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்

'புதுஹாத்தே மக்கிய்யா' என்னும் நூலின் 'ஷேக் முஹியித்தீனிப்னு அரபியை 'காத்தமுல் அவ்லியா' என்றும்

பத்ஹுல் முயீன் என்னும் நூலில், அல்லாமா இப்னு ஹஜரில் ஹைதமியை, 'காத்தி மத்துல் முஹக்கிகீன்' என்றும்

மின்ஹாஜூ சுன்னத்' என்னும் நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தீமிய்யா வை 'காத்திமத்துல் முஜ்தஹிதீன்' என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே மௌலவி அப்துல் வதூது எப்படிக் கூச்சல் போட்டாலும் எங்களுடைய வாதம் என்னவென்றால் காதம் என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வந்தால், அந்தச் சொல்லுக்கு சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் வரும். இறுதியானது, கடைசியானது என்று பொருள் வராது என்பதாகும். இதனை மறுக்க அப்துல் வதூது மௌலவியாலும் முடியாது. வேறு எந்த மௌலவியாலும் முடியாது.

ஆகவே காதம் என்ற சொல், அந்நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லுடன் வந்தால் அதற்க்கு நபிமார்களில் சிறந்தவர் பூரணத் தன்மையைப் பெற்றவர் என்பது மட்டும்தான் பொருள். விவாதத்திற்க்குரிய மேற் குறிப்பிட்ட ஹதீஸ், தப்ஸீர் ஸாபியைத் தவிர ஹதீஸ் விளக்க நூல்'உம்தத்துல் பயான்' என்னும் நூலிலும் மௌலவி மக்பூல் அஹ்மத் எழுதிய தர்ஜுமத்துல் குரான் என்னும் திருக்குர்ஆன் விளக்க நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. காத்தமுன்னபிய்யீன் என்ற தொடரின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள இறைவன் நம் எல்லோருக்கும் வாய்ப்பளிப்பானாக.