அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே
அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்:

36:77; 76:2; 80:19; ஆகிய இறைவசனங்களில் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படியாயின், ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்? இவ்வசனங்களிலெல்லாம் ஆதத்தை தவிர மற்றவர்களை என்றல்லவா கூறி இருக்கவேண்டும். என்று நாஸ்திகர் ஒருவர் கேட்பதற்கும் இந்த காதியானிகள் 3:144 வசனம் பற்றி கேட்பதற்கும் வேறுபாடு உள்ளதாக நமக்குப் புலப்படவில்லை.


நம் பதில்:

திருக்குரான் 3:145 வசனத்தில் முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னால் வந்த தூதர்கள் எல்லாம் சென்று விட்டனர் என்று எடுத்துக் காட்டி, நூலாசிரியர் மிர்ஸா தாஹிர் (ரஹீ) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஈசா நபி (அலை) உட்பட அனைத்து தூதர்களும் இறந்து விட்டனர் என்று இந்த வசனம் தெரிவிக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி இல்லை என்றால், ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஈஸாவைத் தவிர என்று 3:145 வசனத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்கள். அக்கருத்தினை அபூ அப்தில்லாஹ் கற்பனை நாத்திகர் மூலம் மறுக்கிறார். அவர் எடுத்துக் காட்டும் திருக்குரானின் மூன்று வசனங்களும், மனிதனை விந்தினால் படைத்ததாக மட்டும் கூறுகிறது. எப்படி அந்த வசனங்கள் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மனிதர்களேயன்றி வேறில்லை. உங்களுக்கு முன்னர் தோன்றிய மனிதர்கள் எல்லோரும் விந்திலிருந்து படைக்கப்பட்டனர் என்று இருந்தால். கற்பனை நாத்திகரின் வாதம் சரி எனலாம். அப்படி இல்லாததனால் அவரது வாதம் தவறாகும். அதாவது 3:145 வசனத்தில், அவருக்கு முன்னர் தோன்றிய மனிதர்கள் எல்லோரும் என்ற சொற்றொடர் அவர் காட்டிய மூன்று வசனங்களிலும் இல்லாததினால் அபூஅப்தில்லாஹ்வின் வாதம் தவறானதாகும்.

ஆதம் நபி (அலை) அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டது போல், பிற மனிதர்களும் மண்ணால் படைக்கப்பட்டனர் என்ற கருத்து திருக்குரானில் 18:38, 22:6, 23:13, 35:12, 40:68, 37:12, 30:21 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளதால் ஆதம் (அலை) அவர்களைத் தவிர பிற மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்று சொல்லத் தேவை இல்லை.

நான் மேலே காட்டிய ஏழு வசனங்களில் முதல் ஐந்து வசனங்களில் மனிதன் முதலில் மண்ணாலும் பின்னர் இந்திரியத்தாலும் படைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே மனித இனப் படைப்பில் மண்ணும் இந்திரியமும் இரத்தக்கட்டியும் அமைந்துள்ளன.

கற்பனை – நாத்திகர் அபூஅப்தில்லாஹ் எடுத்துக் காட்டியுள்ள மூன்று வசனங்களிலும் மனிதப் படைப்பினைப் பற்றி மட்டும் கூறவில்லை மாறாக, இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்துள்ளதாகக் கூறுவதுடன். அவற்றில் வேறு சில கருத்துக்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதையும் காண்போம்.

36:78 வசனத்தில் அற்பத் துளியிலிருந்து படைக்கப்பட்டவன் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனை எதிர்த்து வாதம் செய்கிறானா? என்ற கருத்தும்,

76:3 வசனத்தில் விந்து என்று வராமல் கலப்பு விந்து என்ற சொல் வந்து, அதிலிருந்து படைத்து அவனை சோதிப்பதற்கு எனவும்,

80:20 வசனத்தில் விந்திலிருந்து படைத்து ( முன்னேற்றத்திகானவற்றை ) அவனுக்கு நிர்ணயித்து, அதற்குரிய வழியை எளிதாக்கினான் என்றும் வருகிறது.

மேலே எழுதிய திருக்குரானில் 3 வசனங்களிலும் மனிதன் விந்தினால் படைக்கப்பட்டதன் காரணத்தை அல்லாஹ் கூறி 1) இறைவனை எதிர்த்து வாதம் செய்யக்கூடாது. 2) மனிதன் சோதிக்கப்பட இருக்கிறான். 3)மனிதனின் எதிர்கால வாழ்வின் வழி நிர்ணயிக்கப்பட்டிருப்பதனையும் சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறியுள்ளான்.

மொத்தத்தில் கற்பனை நாத்திகரின் வாதம் பொருளற்றதாகும்.