அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எதிரிகளின் கூற்று.


நூற் முஹம்மது மௌலான நக்ஸபந்தி தில்லி சாஹிப் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது மூலமாக கிறிஸ்தவத்திற்கு எதிரான பலப்பரீட்சையில் இஸ்லாத்திற்கு கிடைத்த இந்த மகத்தான வெற்றியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

.... இதே காலகட்டத்தில் பாதிரியார் லேப் ராய், பாதிரியார்களின் ஒரு மிகப் பெரிய கூட்டத்துடன், சிறிது காலத்திற்குள் முழு இந்தியாவையும் கிறித்துவ மதமாக்கிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து புறப்பட்டார். ஆங்கிலேயர்களின் தலைமையகத்திலிருந்து பெரும் பெரும் பண உதவி மற்றும் பிற்காலத்தில் செய்யப்படும் தொடர் உதவிகளின் வாக்குறுதியோடு இந்தியாவில் நுழைந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். ஹஸ்ரத் ஈஸா
(அலை) அவர்கள் பூத உடலுடன் வானில் இருப்பது, மற்ற நபிமார்களின் பூமியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது போன்ற தாக்குதல்கள் பாமர மக்களிடம் வேலை செய்தது. அப்போது மௌலவி குலாம் அஹ்மது காதியானி எழுந்து நின்று பாதிரிகளின் கூட்டத்தைப் நோக்கி, எந்த ஈஸாவைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ அவர் மற்ற மனிதர்களைப் போல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டார். எந்த ஈஸா வருவதைப் பற்றி கூறப்பட்டுள்ளதோ அது நான்தான். எனவே நீங்கள் நற்பேறு பெற்றவர்களாயின் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த முறையால் அவர் லேப்ராயை எந்த அளவுக்கு திணறடித்தார் என்றால் இதிலிருந்து தப்பித்து வெளியே வருவது அவருக்கு கஷ்டமாகி விட்டது. இந்த முறையால் அவர் இந்தியா முதல் தலைமையகம் வரையுள்ள பாதிரிகளை தோற்கடித்துவிட்டார்.” ( திபாச்சா குர்ஆன், பக்கம் 130 – ஹாபிஸ் நூற் முஹம்மது நக்ஸபந்தி சிஷ்தி – தில்லி)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முழு வாழ்க்கையும் கிறிஸ்தவத்திற்கு போட்டியாக இஸ்லாத்தை பாதுகாப்பதில்தான் கழிந்தது. இந்த குறிக்கோளுக்காகவே அவர்கள் முழு வாழ்நாளும் போராடினார்கள். அன்னாரின் போராட்டத்தை அன்னாரை ஏற்காதவர்கள் கூட ஆமோதித்து மாபெரும் சாதனையாக முன் வைத்துள்ளனர்.

தில்லியிலிருந்து வெளிவரும் கர்ஸன் கஜட் பத்திரிக்கை ஆசிரியர், மிர்ஸா ஹைரத் தெஹ்லவி ஸாஹிப் எழுதுகிறார்:

“மறைந்த அன்னாரால் ஆரிய மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாத்திற்கு ஆற்றப்பட்ட சேவைகள் உண்மையிலேயே மிகுந்த பாராட்டுதலுக்குரியவை. அவர் முனாஸிராவின் (விவாதத்தின்) நிலையையே மாற்றிவிட்டார். இந்தியாவில் ஒரு புதிய பிரசார முறையையே உருவாக்கிவிட்டார். நாம் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மட்டுமின்றி ஒரு ஆராய்ச்சியாளர் என்ற நிலையிலும் பெரும் பெரிய ஆரியர்கள் மற்றும் பாதிரிகளுக்கு கூட மறைந்த அன்னாருக்கு எதிராக வாய் திறக்க துணிவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.”

ஸியாசத் பத்திரிக்கை ஆசிரியர் மௌலானா செய்யது ஹபீப் ஸாஹிப் இவ்வாறு எழுதுகிறார்:

“ அந்த நேரத்தில் ஆரிய மற்றும் கிருஸ்தவ பிரசாரகர்கள் இஸ்லாம் மீது பாதுகாப்பில்லாத தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மார்கத்தார் உண்மையான ஷரியத்தை பாதுகாப்பதில் தீவிரமாக இருந்தார்கள். இருந்தாலும் அதில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அந்நேரம் மிர்ஸா குலாம் அஹ்மது ஸாஹிப் களத்தில் இரங்கி கிறித்துவ பாதிரியாளர்கள் மற்றும் ஆரிய பண்டிதர்களுக்கு எதிராக இஸ்லாம் சார்பாக நெஞ்சை நிமிர்த்தியவாறு தொடர்ந்து போராடினார். மிர்ஸா சாஹிப் எதிரிகளின் பல் நொறுங்கி விடும் அளவிற்கு இந்த கடமையை சீரும் சிறப்புமாக நிறைவேற்றினார் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. (தஹ்ரீகே பக்கம் 208)

இந்தியாவின் இமாம் என்றழைக்கப்பட்ட மௌலான அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் இமாம் மஹதியைப் பற்றி கூறுகின்றார்.

“ அந்த மனிதர் மிகப் பெரும் மனிதராவார். அவரது பேனா மந்திரக்கோலாக இருந்தது. நாவிலும் மந்திரம் இருந்தது. மூளையால் நிகழ்கின்ற வியக்கத்தக்க அற்புதங்களின் வடிவமாக அவர் திகழ்ந்தார். அவரது பார்வை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும், குரல் அனைவரையும் ஒன்று திரட்டக்கூடியதாகவும் இருந்தது. அவரது விரல்களில் புரட்சியின் கம்பிகள் பின்னிப் பிணைந்திருந்தன. மேலும் அவரது இரு மனிக்கட்டுகளும் இரண்டு மின்சாரக் சங்கிலியாக இருந்தன. அந்த மனிதர் மார்க்க உலகில் முப்பது வருடங்கள் வரை பூகம்பமாகவும் புயலாகவும் இருந்தார். அவர் மறுமை நாளின் எக்காளமாக மாறி கனவுலகில் உறங்கிக் கொண்டிருதவர்களுக்கு விழிப்பூட்டி கொண்டே இருந்தார்.... மிர்ஸா குலாம் அஹ்மது சாஹிப் காதியானி அவர்களின் மரணம் நாம் படிப்பினை பெராமாயில் இருக்கக்கூடிய ஒன்றல்ல. அந்த இழப்பை அளித்துவிடுவதற்காக அதனை ஓடிக் கொண்டிருக்கும் காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு நாம் பொறுமையுடன் இருக்க முடியாது. மார்க்க உலகில் அல்லது அறிவுலகில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மனிதர்கள் எப்போதும் உலகில் வர மாட்டார்கள். வரலாற்று ஏடுகளில் இடம் பெரும் இத்தகையோர் மிகவும் குறைவாகத்தான் உலகில் புரட்சியை உருவாக்கி காட்டிவிட்டு செல்கின்றனர். (அமிர்தசரசிலிருந்து வெளியான வக்கீல் பத்திரிகையில் வந்த செய்தி இது)

1894 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற பாதிரிமார்களின் உலக மாநாட்டில் லாட் பிஷப் ஆப் கிளோஸிஸ்டர் (Lord Bishop of Cloucester, the Right Reverend Charles John Ellicot) எனும் பாதிரியார் மிகுந்த கவலையுடனும் வருத்ததுடனும் முழு கிறித்துவ உலகிற்கும் இவ்வாறு அறிக்கை விடுத்தார்:

“I learn from those who are experienced in these things that there is now a new kind of Mohammadanism showing itself in many part of our empire in India, and even in our islan here at home, Mohammadanism speaks

with reverence of our blessed Lord and Master, but is not the less more intensely monotheistic than ever. It discards many of these usages which have made Mohammadanism hateful in our eyes, but the False prophet holds his place no less pre-eminently than before. Changes are plainly to be recognized; but Mohammadanism is not the less aggressive. and alas to some minds among us (God grant that they be not many) even additionally attractive.” (THE OFFICIAL REPORT OF THE MISSIONARY CONFERENCE OF THE ANGLICAN COMMUNION, 1984, PAGE:64)

“இஸ்லாத்தின் ஒரு புதிய பரிமாணம் இப்போது வெளிப்பட்டுள்ளது. எனக்கு சில அனுபவசாலிகள் கூறிய கூற்றிலிருந்து இந்தியாவின் பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு புது வகையான இஸ்லாம் நமக்கு முன் வந்து கொண்டிருக்கின்றது..... இந்த புதிய இஸ்லாத்தின் காரணமாக முகம்மதிற்கு (ஸல்) முந்தைய அதே மகத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த புதிய மாற்றத்தை மிக எளிதாக அடையாளம் காணமுடியும். அது மட்டுமின்றி இந்த புதிய இஸ்லாம் தன்னைப் பொறுத்தவரை தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுப்பதில்லை. மாறாக தாக்குதல்களையும் கைக்கொள்கின்றது. நம்மில் சிலரது உள்ளமும் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாகும்.”

இங்கிலாந்தின் பாதிரிகள் கூறுவதைப் பாருங்கள். மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் செயலால் இஸ்லாம் மற்றும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைந்த அதே மகத்துவம் மீண்டும் கிடைத்துள்ளது என்று கூறுகிறார்களா? அல்லது இஸ்லாம் அழிவை சந்தித்தது என்று கூறுகிறார்களா? என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 

தர்ஜுமானுல் குர்ஆனில் ஜமாத்தே இஸ்லாமி நிறுவனர் மௌதூதி சாஹிப் குறிபிடுகிறார் :-

"மிர்ஸா குலாம் அஹ்மதின் இயக்கத்திற்கு இவ்வளவு மாபெரும் வெற்றிகள் ஏன் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து நான் சிந்தனை செய்வதுண்டு மிர்ஸா சாஹிபின் எதிரிகளுக்கு தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருவதையும் காண முடிகிறது.

இப்படி ஏன் நடைபெறுகிறது? ஒருவர் அல்லாஹ்வுக்கும் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கும் எதிராக நின்று கொண்டு (?)நீங்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டாலும் எனது இயக்கத்தை தோல்வியடையச் செய்ய இயலாது என்று சவால் விடுகின்றார். தனக்கு கிடைத்து வரும் இறையுதவிகளும் தனது எதிரிகள் பெற்றுவரும் தோல்விகளும் தனது உண்மைதன்மைக்கு ஆதாரம் என்று இவர் கூறுகிறார். அவ்வாறே நடைபெற்று வருவதையும் நாம் காண்கிறோம்.

காதியானிகளுடைய பாதுகாப்பிற்கு மறைமுகமான ஏற்பாடுகள் உள்ளன. இதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு கூற வேண்டுமாயின் "மார்ஷல் ல"வைக் கூறலாம். எவ்வளவு சக்தியுடன் 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்'துவங்கப்பட்டது. அது எப்படி முடிவடைந்தது என்பதைப் பாருங்கள்.(தர்ஜுமானுல் குர் ஆன், ஆகஸ்ட்1954)

எங்களின் மதிப்பிற்குரிய உலமாப் பெருமக்கள் காதியானிகளை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் அவர்கள் முன்னைவிட மேலோங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது. மிர்ஸா சாஹிபுக்கு எதிராக செய்யத் நதீர் ஹுஸைன், மௌலான அன்வர்ஷா, மௌலானா சையத் ஸுலைமான் மன்ஸூர் பூரி, மௌலான முஹம்மது ஹுஸைன் பட்டாலவி, மௌலவி அப்துல் ஜப்பார் கஸ்னவி, மௌலவி ஸனாவுல்லாஹ் அமிர்தஸரி, ஆகிய பெரும் உலமாக்கள் தீவிரமாக காதியானிகளை எதிர்த்திருந்தார்கள். ஆனால் காதியானிகளோ வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்துகொண்டிருந்தார்கள் என்ற உண்மையை மறுக்க இயலாது. (“அல் மின்பர்” 23-05-1956)

இது “நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் விரோதிகள் மீது வெற்றிகொள்ள உதவி புரிந்தோம். இதனால் அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்” என்ற இறைவன் வகுத்த நியதியின் நிறைவேறுதலாகும்