அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அல்லாஹ் பெரிய சதிகாரனா? அபூஅப்தில்லாஹ்விற்கு பதில்


இன்னும் (ஈஸாவைக் கொல்ல) அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் (3:54) (அபூ அப்தில்லாஹ் நூல் பக்கம் 18)

யூதர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றுவிட எண்ணினர். இது யூதர்கள் செய்த சதி, அல்லாஹ்வோ ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் பிடிக்க விடாது தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றி விட்டான். யூதர்கள் வேறொரு யூதனைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர். இவ்வாறு யூதர்களின் சதியை அல்லாஹ் முறியடித்துவிட்டான். எனவே அல்லாஹ் சதிகாரர்களுக்கு எல்லாம் மிகப் பெரிய சதிகாரன். (அபூ அப்தில்லாஹ் எழுதிய நூல் : பக்கம் 18-20)

 
நம் பதில்:

1. யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொல்ல எண்ணினர். இதுவே யூதர்கள் செய்ய நினைத்த சதி, அல்லாஹ்வோ திட்டமிடுபவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய திட்டமிடுபவன். எனவே யூதர்களின் தீய திட்டத்தை முறியடித்து ஈஸா (அலை) அவர்களை சிலுவையிலிருந்து காப்பாற்றி காணாமல் போன பத்து கோத்திரமாகிய இஸ்ரவேலர்களைத் தேடிச் சென்று அவர்களை நேர்வழிப்படுத்த ஹிஜ்ரத் செய்ய வைத்தான். இறுதியாக இந்தியா வந்து அங்கு காஷ்மீரில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு தப்லீக் செய்து அவர்களுடன் வாழ்ந்து இயற்கை மரணத்தை அடையச் செய்தான். இது அல்லாஹ்வின் திட்டமாகும். இவ்வாறு யூதர்களின் சதி தோல்வி கண்டது. அல்லாஹ்வின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

2. அபூஅப்தில்லாஹ் திருக்குர்ஆன் 3:54 வசனத்திற்கு தந்திருக்கும் பொருளில் அல்லாஹ்வை மிகப்பெரும் சதிகாரன் ஆக்கி விட்டார். (நவூதுபில்லாஹ்) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டுமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ்வை அழகிய பயர்களால் அழைக்குமாறு திருக்குர்ஆன் கூறுகிறது. இப்படி இருக்க அப்தில்லாஹ் அல்லாஹ்வுக்கு வழங்கியுள்ள பெயரைப் பார்க்கும் போது அவரே தன் நூலில் பக்கம் 19 இல் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் உணராத ஈனர்களின் சிந்தையே அல்லாமல் ஈமான் உடையவர்களின் சிந்தை இத்தரம் இழிவுடையதாக இருக்க முடியுமா? அன்று எழுதிய வசனம் அவருக்கே (அபூ அப்தில்லாஹ்வுக்கே) சரியாக பொருந்துவதனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வசனத்தில் ம(க்)கர் எனும் அரபிச் சொல் வந்துள்ளது. இதற்கு சதி, சூழ்ச்சி என்ற பொருளும் திட்டம் என்ற பொருளும் உண்டு. திட்டம் நல்ல திட்டம், தீய திட்டம் என இரு வகைப்படும். யூதர்கள் இறைவனுக்கும் அவனது நபிக்கும் எதிராகச் செயல்பட்டனர். எனவே அதனைச் சதி, சூழ்ச்சி என்று கூறலாம். ஆனால் அல்லாஹ்வோ இஸ்ரவேலர் சமுதாயத்தின் நலனுக்காக ஒரு நபியை அனுப்பியுள்ளான். அதனை சதி என்று கூற, அபூ அப்தில்லாஹ்வுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் சதி செய்தான் என்று எழுதும் இவர்கள் எந்த அளவுக்கு ஞன சூனியங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு சொல் அல்லாஹ்வுக்கு வரும்போது அவன் தகுதிக்கேற்ப ஒரு பொருளும், அச்சொல் நபிக்கும் வருபோது அவர்கள் தகுதிக்கேற்ப பொருளும் பிறருக்கு வரும் போது அவர்கள் தகுதிக்கு ஏற்ப பொருளும் கொள்ளவேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை!

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூருகின்றானாம். ஆல இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், "அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் " என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." 

மேலும் இன்னொரு கோணத்தில் அவ்வசனத்திற்கு யூதர்கள் சதி செய்தனர். அல்லாஹ் அந்த சதிக்குரிய தண்டனையைக் கொடுத்தான் என்று எழுதியிருந்தால் கூட அதனை ஒப்புக் கொள்ளலாம். அவ்வாறு கூறாமல் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அல்லாஹ்வை மிகப்பெரிய சதிகாரனாக்கியதிளிருந்து அபூ அப்தில்லாஹ்வுக்கு அரபி மொழி வழக்கோ, மொழி அறிவோ இல்லை என்பது புலனாகிறது.