அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆங்கிலத்தில் வஹி


எந்த நபிக்கும் அவரது தாய் மொழியிலேயே வஹி வந்திருக்கிறது. ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹிவந்திருக்கிறது. இது குறித்து ஒரு மௌலவி எள்ளி நகையாடியுள்ளார். 

நம் பதில்: 

ஏளனம் செய்யப்படாத எந்த நபியும் மக்களிடத்தில் வரவில்லை. என்கிறது திருக்குர்ஆன். நிராகரிப்போர் எள்ளி நகையாடுவது இயல்பு அது அவர்களின் ஆணவத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது. 

நபிமார்களுக்கு அவர்களுடைய தாய் மொழியில் ‘வஹி’ வந்ததாக
திருக்குர்ஆனில் எங்கும் காணப்படவில்லை. திருக்குர்ஆன் இவ்வாறே கூறுகிறது:- 

ஒவ்வொரு தூதரையும் (மக்களுக்கு) தெளிவு படுத்துவதற்கு அவர்களுடைய சமுதாயத்தின் மொழியிலேயே நாம் அனுப்பி வைத்தோம்! (14:5) 

இந்த திருவசனத்திற்கு, திருக்குர்ஆன் விளக்கவுரைகளில் கீழ்வருமாறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளது. 

எந்த சமுதாயத்திடமும் ஒரு நபியை அல்லாஹ் அனுப்புகிரானோ அந்த சமுதாயத்தின் மொழியில்தான் அந்த நபி போதனை செய்வார். 
(தப்ஸீர் ரூஹுல் மஆனி பாகம் 4, பக்கம் 209) 

நபிமார்கள், அவர்களுடைய சமுதாயங்களின் மொழியிலேயே பேசுவர். (தப்ஸீர் காஸின் பாகம் 3, பக்கம் 82, தப்ஸீர் மதாரிகுத் தன்ஸில்) 

நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழியில் மட்டுமே ‘வஹி’ வரும் என்பதற்கு இந்த வசனத்தில் எந்தச் சான்றும் இல்லை. ‘அவ் ஹைனா’ என்றோ ‘அல்ஹம்னா’ என்றோ அதாவது ‘வஹி’ இறக்கினோம். ‘இல்ஹாம்’ இறக்கினோம் என்று இவ்வசனத்தில் இல்லை. 

அடுத்து இந்த வசனம் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய நபிமார்களைப் பற்றியதாகும். ‘அர்ஸல்னா’ (நாம் அனுப்பி வைத்தோம்) என்ற சொல் கடந்த காலத்தையே குறிக்கும். அந்த நபிமார்கள் அனைவருமே ஒவ்வொரு சமுதாயங்களுக்காக மட்டும் வந்தவர்களாவர். அனவே இந்த வசனம் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கோ அவர்களைப் பின்பற்றித் தோன்றும் நபிமார்களுக்கோ பொருந்தாது. 

இக்கருத்து சரியாது என கீழ்வரும் அறிவிப்பு உறுதி செய்கின்றது. ஹஸரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்;- 

“ஒவ்வொரு நபியையும் நாம் அவருடைய சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பியிருந்தோம் என்று அல்லாஹ் கூறியுள்ளான். ஆனால் நமது ரஸுல் (ஸல்) அவர்களைப்பற்றி ‘வமா அர்ஸல்னாக இல்லா காபத்தன் லின்னாஸி” – நாம் உம்மை முழு மனித சமுதாயத்திற்காக அனுப்பியிருக்கின்றோம். என்று இறைவன் கூறியிருக்கிறார்.” ( மிஷ்காத் கிதாபுல் பிதன் பீ பளாயில் நபியினா (ஸல்) )

அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள், உலக சமுதாயங்கள் அனைத்திற்கும் இறைத்தூதராகத் தோன்றினார்கள் எனவே, அவர்கள் ‘உம்முல் குரா”வில் அதாவது அனைத்து நாடுகளின் தாய் எனத்திருமறை கூறும் மக்காவில் தோன்றி “உம்முல் அல்ஸினா” வில் அதாவது அனைத்து மொழிகளின் தாயாகிய அரபி மொழியில் போதனை செய்தார்கள். 

அந்த மாநபியைப் பின்பற்றி அவர்களின் பிரதிநிதியாகத் தோன்றிய ஹஸரத் அஹ்மது (அலை) அவர்கள் பல்வேறு மொழிகளில் அந்த மாநபியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அரபியிலும், உருதுவிலும், பஞ்சாபியிலும் அவர்கள் 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள். 

ஹஸரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹி வந்தது குறித்து ஆச்சர்யப்படுவதற்கோ ஏளனம் செய்வதற்கோ எந்தக் காரணமுமில்லை. ஏனெனில் அனைத்து மொழிகளும் அரபி மொழியில் இருந்து தோன்றியவையாகும். இதற்க்கான சான்றுகளை ஹஸரத் அஹமது (அலை) அவர்களே தமது “மினனுர் ரஹ்மான்” எனும் நூலில் தந்துள்ளார்கள். 

ஆங்கிலத்தில் வஹி வந்தது குறித்து எள்ளி நகையாடியுள்ள ஆலிம்சா, “ஆங்கிலம் காபிர் மொழி” என்ற பத்தாம் பசலிக் கொள்கையுடையவராக இருப்பார் போலிருக்கிறது! ஹஸரத் ஸுலைமான் நபி (அலை) அவர்கள் தமக்கு பட்சிகளின் மொழி கற்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள் என திருக்குரானில் (27:17) காணப்படுகிறது. இது குறித்து இந்த ஆலிம்சா எள்ளி நகையாடுவாரா? இன்று உலகில் பொது மொழியாகிய ஆங்கிலத்தில் “I shall give you a large party of Islam” என்ற நற்செய்தி தாங்கிய வஹி வந்தது பொருத்தமானதே.