அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.


உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான். நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான். உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது. தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு காசு காணாமற் போனால் அதற்காக அழுது புலம்புவானா? அதற்காக தன்னை
மாய்த்துக் கொள்ள துணிவானா? உங்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஒரு பெரும் பொக்கிஷமான இறைவனைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்குமாயின் உலகப் பொருட்களிலே நீங்கள் ஏன் பெரும் பற்றுக் கொள்ள போகின்றீர்கள்? இறைவன் கிடைப்பதர்க்கரிய பெரும் பொக்கிஷமாக இருக்கின்றான். அதன் உண்மையான மதிப்பை உணருங்கள். நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் அவன் உங்களுக்கு உதவிபுரிகின்றவனாகவே இருக்கின்றான் அவனில்லாமல் நீங்கள் ஒரு பொருளுமல்ல? உங்களுடைய பொருள்களும் திட்டங்களும் உங்களுக்கு உதவாது, உலகப் பொருட்களின் மீது முழுக்க முழுக்க சார்ந்துள்ள ஏனைய சமுதாயங்களைப் பின்பற்றாதீர்கள். பாம்பு மண்ணைத் திண்பதுபோல் அவர்கள் உலகின் அற்பப் பொருட்களின் மீது பெரிதும் சார்ந்து நிற்கின்றார்கள். கழுகுகளும் நாய்களும் பிணங்களை விரும்பி திண்பதுபோல் இவர்கள் உலக இச்சையிலே மூழ்கிக்கிடக்கின்றார்கள். இவர்கள் இறைவனிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டவர்கள். இவர்கள் மனிதனை கடவுளாக வணங்குகின்றவர்கள். பன்றியைத் தின்று மதுவைத் தண்ணீரைப் போல் அருந்துகின்றார்கள். இவர்கள் உலகப் பொருட்களிலே எல்லையற்ற நம்பிக்கை வைத்து இறைவனிடம் எதற்கும் உதவி தேடாத காரணத்தினால் என்றோ மரணித்துப் போய்விட்டார்கள். ஒரு புறா தனது கூட்டிலிருந்து பறந்து செல்வதைப் போல் ஆன்மீக ஆவி இவர்களிடமிருந்து பறந்து போய்விட்டது. உலக செல்வங்களை வணங்குகின்ற குஷ்டரோகம் இவர்களைப் பீடித்திருக்கின்ற காரணத்தால் இவர்களுடைய ஆன்மீக அவயங்கள் செல்லரித்துப் போய்விட்டன. நீங்கள் இந்த குஷ்டரோகத்திற்கு அஞ்சுங்கள். ஒரு வரம்பிற்குள் நின்றுகொண்டு பொருளைத் தேடுவதையும், அதைச் செலவிடுவதையும் நான் தடுக்கவில்லை ஆனால் ஏனைய சமுதாயத்தைப் போன்று உலகப் பொருட்களுக்கு அடிமையாகி விடுவதைத்தான் நான் தடுக்கின்றேன். இந்தப் பொருட்களையெல்லாம் தந்த இறைவனை மறந்து விடுவதைத்தான் நான் தடை செய்கின்றேன். (கிஷ்தி நூஹ்)