உபகாமம் 34:6 இல் “ இந்நாள் வரைக்கும் அவன் பிரேதக்குழியை அறியான்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மோசேயின் வாழ்க்கை முடிவு, இயேசுவின் வாழ்க்கை முடிவைப்போல் கட்டுக்கதைகள் நிறைந்தது.
“மோசே மக்களை விட்டுப் பிரிந்து சென்ற பின்னர் நீபோ மலையுச்சியில் எலிசேரையும் யோசுவாவையும் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மேகம் அவர் மீது வந்து நின்றது. அவர் மறைந்துவிட்டார்.” உண்மை இவ்வாறிருக்கையில் அவரது அதி உன்னத நற்குணங்கள் காரணமாக அவர் ஒரு இறைவனாக மாறிவிட்டார் என்று மக்கள் சொல்லலாம் என்ற பயத்தினால் தாம் மரணித்துவிட்டதாக வேதாகமத்தில் அவர் எழுதி வைத்துச் சென்றார். (Ant. iv..8 and 48)
பிற்காலத்தில் மோசே மரிக்கவில்லை என்றும், எலியாவைப் போல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் ஒரு நம்பிக்கை பரவிவிட்டது” அவர் அடக்கப்பட்ட இடம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, ‘அவரைப் போன்றவர்’ அதாவது திருத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அதனைக் கண்டுபிடிக்கும் வரை யாருக்கும் தெரியாமலே இருந்தது. ‘மரணம் நெருங்கி வருவதையறிந்த மோசே, வாக்களிக்கப்பட்ட புனித நிலத்திலிருந்து கல்லெறி தூரத்திற்குள் உள்ள ஓர் இடத்திற்குச் செல்ல தன்னை அனுமதிக்குமாறு இறைவனிடம் வேண்டினார். அங்கு சென்று அவர் மரணமடைந்தார்” என்று அவர்கள் அருளினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் அபூஹுரைரா கூறுகிறார்கள்: “ நான் அங்கு இருந்திருந்தால் வீதிக்குப் பக்கத்தில் பழுப்புநிற மணல்மேட்டின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள அவருடைய கல்லறையை உங்களுக்குக் காட்டியிருப்பேன் என்று திருநபியவர்கள் கூறினார்கள்.
பாலஸ்தீனத்திலுள்ள குறிப்பிட்ட இக்கல்லறை ‘கப்ர் நபி மூஸா’ (அதாவது மோசே தீர்க்கதரிசியின் கல்லறை) என்ற பெயரில் முஸ்லிம்களுக்குத் தெரிந்திருக்கிறது.
“டாக்டர் பிலிப் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “மோசேயின் கல்லறை சாக்கடலுக்கும் மார்ஸபாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நபி மூஸாவின் கல்லறை என்று அடையாளமிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் நாட்களின் போது முஸ்லிம் யாத்திரிகர்கள் இங்கு கூடுகின்றனர். ஜெருசலேமிலுள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கேட்-டிலிருந்து கேத்ரான் பள்ளத்தாக்கு வழியாக நபி மூஸாவின் கல்லறைக்கு ஊர்வலமாக மக்கள் செல்கின்ற அற்புத காட்சியை நான் கண்டேன்.”
இதே போன்று இயேசுவின் கல்லறையும் அதே காலமான இரண்டாயிரம் வருடங்களாக உலகத்தாருக்குத் தெரியாமலே இருந்தது. “இயேசுவைப் போன்றவரான” (மேசியா) அஹ்மது (அலை) அவர்களாலேயே இயேசுவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மக்களால் இக்கல்லறை ‘கப்ர் நபி ஈஸா” அதாவது தீர்க்கதரிசி இயேசுவின் கல்லறை என்று கூறப்படுகிறது. இது இறைவனுடைய செயலாக, நம்முடையே கண்களுக்கு ஈடு இணையற்றதாக இருக்கிறது. இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ‘மஸீஹ் இந்துஸ்தான் மெயின்’ (இந்தியாவில் இயேசு) என்ற தமது நூலில் இவ்விசயம் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்கள்.