அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும்
இறையருட்களைப் பெற்றவர்கள் என்பதையும் விளக்கிக் கூறிவிட்டது. அதாவது நபி, சித்தீக், ஷஹீது, ஸாலிஹ் ஆகியோர். சூரா பாத்திகாவில் எத்தகைய மேலான அருட்கொடைகளை வேண்டுமாறு முகம்மதியா உம்மத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளதோ மார்க்க அளவில் அதன் கருத்து, உயர்ந்த ஆன்மீகப் பதவிகளாகும். அவைகளனைத்தும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது. 

சிலர் இந்தத் திருவசனத்திற்குப் பொருள் கூறும்போது ‘அவர்கள் (அல்லாஹ்வையும், திருத்தூதரையும் பின்பற்றுபவர்கள்) அருள் பெற்றவர்களோடு இருப்பார்கள்; அருள் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். என்று கூறுகின்றனர். அல்லாஹ்வையும், பெருமானார் (ஸல்) அவர்களையும் முழுமையாகவும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அல்லாஹ்வின் இந்த அறிவிப்பு சாதாரணமான ஒன்றல்ல. இதற்கு முன்னர் அல்லாஹ்வையும் ஹஸ்ரத் மூஸா (அலை) அல்லது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லது ஹஸ்ரத் தாவூத் (அலை) போன்ற நபிமார்களையும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. ஆனால் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களிடம் இறைவன் ‘நீங்கள் எவ்வாறு செய்தாலும் உங்களுக்கு இறையருள் கிடைக்காது. மாறாக இறையருள் பெற்றவர்களோடு இருப்பதற்குரிய தகுதியை மட்டும்தான் பெறுவீர்கள்! என்று அல்லாஹ் கூறியதுண்டா? இல்லையே? அவ்வாறிருக்கும்போது இந்த ஆயத்திற்கு மட்டும் ஏன் இப்படிப் பொருள் கொள்கிறீர்கள்? எப்படிப்பட்ட அநியாயமான பொருள் கொடுக்கப்படுகிறது. இது பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும். இது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கௌரவத்திற்கு ஏற்படுத்தும் களங்கமாகும். 

எல்லா நபிமார்களை விடச் சிறந்தவரும், மகத்துவமிக்கவரும், எல்லா அருட்களின் உரைவிடமுமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றினாலும், அவர்கள் இறைவனுடைய அருள் பெற்றவர்களாக ஆகமாட்டார்கள்; அவர்கள் அருள் பெற்றவர்களோடு வைக்கப்படுவார்கள் என்று விளக்கம் கூறுவது எந்த அளவுக்குப் பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமான ஒரு கருத்தாகும். இங்கு பயன் படுத்தப்பட்டிருக்கும் மஅ என்ற சொல்லுக்குத்தான் இப்படி தவறான பொருள் கொடுக்கப்படுகிறது. இதனை திருக்குர்ஆன் கண்டிக்கிறது. 

திருக்குர்ஆனில் ஓரிடத்தில் ‘வதவப்பன மஅல் அப்றார்’ ‘இறைவா! எங்களை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்வாயாக!’ என வந்துள்ளது. இதற்கு ‘நல்லடியார்கள் மரணிக்கும் பொழுது அவர்களோடு சேர்த்து எங்களையும் மரணிக்க செய்வாயாக என்றா பொருள் கொள்ள முடியும்? எப்படியெல்லாம் நீங்கள் முகம்மதிய உம்மத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு, எங்களை நல்லடியார்களாக – நல்லடியார்களைச் சேர்ந்தவர்களாக மரணிக்கச் செய்வாயாக!’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயொழிய நல்லடியார்களுடன் சேர்த்து எங்களையும் மரணமடையச் செய் என்று பொருள் கொள்ளக் கூடாது.

‘மஅ’ என்ற சொல்லைப் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும் பொதுவாக, ‘மின்’ என்ற பொருள்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களோடு ‘கூட’, ‘உடன்’ என்ற பொருள்வரும். உதாரணமாக, 

‘இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன்’ 

‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ இங்கு அல்லாஹ்வும் மனிதனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத காரணத்தினால், ‘அல்லாஹ் பொறுமையுள்ளவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறான்’ என்று பொருள் கொள்ளமுடியாது. ‘கழுதை சமுதாயத்துடன் வந்தது’ என்று கூறினால் கழுதை சமுதாயத்தை சேர்ந்தது என்று பொருளில்லை. ஏனென்றால் இரண்டும் தனித்தனி இனங்களாக இருக்கின்றன. 

ஆனால், ‘ஸைத் என்பவர் நல்லவர்களோடு இருக்கிறார்; ‘என்மீது நேசம் கொண்டவர்களுடன் நான் இருக்கிறேன்’ என்றால், ‘நான் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்’ என்றுதான் பொருள் இப்படிப்பட்ட இடங்களில் வரும் சொல்லுக்கு ‘மின்’ என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். 

திருக்குர்ஆனே இங்கு ‘மஅல்லதீன அன் அமல்லாஹு அலைஹிம்’ (அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களுடன்) என்று கூறியதற்குப் பிறகு அதற்க்கு விளக்கமாக, ‘மினன்னபியீன் ‘(நபிமார்களைச் சேர்ந்தவர்) என்று கூறியிருக்கிறது. இங்கு ஏன் ‘மா அன் நபிய்யீன்’ என்று கூறப்படவில்லை? எனவே ‘மஅ’ என்ற சொல்லுக்கு இங்கே ‘மின்’ என்றே பொருள் கொள்ள முடியும். 

இப்போது மஅ என்பதற்கு உடன் இருத்தல் என்ற பொருள் மட்டும்தானே தவிர அப்பிரிவினர்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் என்பதல்ல என்றால், இந்த விளக்கத்தின் படி, முஸ்லிம்கள் நபியாக மாட்டார்கள், நபிமார்களுடன் இருப்பார்கள். சித்தீக்குகள் (உண்மையாளர்கள்) ஆக மாட்டார்கள். உண்மையாளர்களுடன் இருப்பார்கள். அவ்வாறே ஷஹீது (உயிர்த் தியாகிகள்) ஆக இருக்கமாட்டார்கள். ஆனால் உயிர் தியாகிகளுடன் இருப்பார்கள். மேலும் ஸாலிஹீன் (நல்லடியார்கள்) ஆக மாட்டார்கள். நல்லடியார்களுடன் இருப்பார்கள் என்று இந்த வசனத்திற்குப் பொருளாகிவிடும். இதை விட பெரும் தவறான பொருள் என்ன இருக்க முடியும்? இந்த உம்மத்தில் நபி போகட்டும், சித்தீக் (உண்மையாளர்)கள், ஷஹீது (உயிர்த் தியாஹி)கள், ஸாலிஹ் (நல்லடியார்)கள் கூட தோன்றமாட்டார்கள் என்பதைவிட முகம்மதியா உம்மத்திற்கு வேறு என்ன அவமானம் இருக்கமுடியும்?