இவ்வுலக வாழ்வில் மனிதன் இரண்டு விதமான தீமைகளிலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்றான். ஒன்று ஆன்மீகரீதியான பாவச் செயல்கள். வெளிப்படையான விதத்தில் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கிடைக்கிறது. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்யப்படும் பாவங்களுக்கும், ஷரியத்தின் கட்டளைகளுக்கு எதிராக செய்யப்படும் தீமைகளுக்கும் இறைவனே தண்டனை கொடுக்கிறான்.
இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா அரசாங்கங்களிலும், அவற்றின் சட்டங்களிலும் பல்வேறு குற்றங்களுக்கேற்ற விதத்தில் தண்டனை முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுவான நன்மைகளையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுமே இந்தத் தண்டனைகள்
விதிக்கப்பட்டிருக்கின்றன. 1400 ஆண்டுககளுக்கு முன்னர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் குற்றத்திற்கான தண்டனைகள் என்பது மட்டுமல்லாது, அவற்றைக் களையும் சிகிச்சையாகவும் திகழ்கின்றன. குற்றத்தையும் பாவச் செயல்களையும் ஒரு நோயாகக் கருதி அவற்றைப் போக்கும் சிகிச்சையாக தண்டனை அமைந்துள்ளது.
விதிக்கப்பட்டிருக்கின்றன. 1400 ஆண்டுககளுக்கு முன்னர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் குற்றத்திற்கான தண்டனைகள் என்பது மட்டுமல்லாது, அவற்றைக் களையும் சிகிச்சையாகவும் திகழ்கின்றன. குற்றத்தையும் பாவச் செயல்களையும் ஒரு நோயாகக் கருதி அவற்றைப் போக்கும் சிகிச்சையாக தண்டனை அமைந்துள்ளது.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரவேலர்களின் நிலையை அனுசரித்து, அவர்களுடைய கடின மனப்பான்மையை கருத்திற்கொண்டு ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தௌராத் நியாயப் பிரமாணத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், காதுக்குக் காது என்பன போன்ற கடுமையான தண்டனை முறைகள் அதில் அடங்கி இருந்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மக்கள் முதிர்ச்சி அடைந்து, எல்லாத் துறைகளிலும் முன்னேறியபோது இறுதி காலம் வரையுள்ள நிரந்தரமான ஒரு ஷரியத்தை எம்பெருமானார் (ஸல்)அவர்கள் கொண்டுவந்தார்கள்.
“நிச்சயமாக நாம் தௌராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும், பிரகாசமும் இருந்தது. இறைத்தூதர்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள். ....(தௌராத்தில்) உயிருக்குப் பகரமாக உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குகாது, பல்லுக்குப்பல் என்றும் காயங்களுக்கு அவற்றிக்கு தகுந்த பழிவாங்குதல்களும் விதிக்கப்பட்டிருந்தன.” (5:45-46)
ஆனால் திருக்குர்ஆன் சட்டம் இதற்கு மாறுபட்டதாக விளங்கியது. இஸ்லாம் போதிக்கும் தண்டனையின் நோக்கம் குற்றவாளியின் சீர்திருத்தமே ஆகும். பாவமோ குற்றமோ புரிந்த ஒருவருக்கு மன்னிப்பு வழங்கினால் அவர் திருந்திவிடுவாரென்றால், அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும். ஆனால் தண்டனை தந்தால் மட்டுமே திருந்துவாரென்றால், அவருக்குத் தண்டனை வழங்கவேண்டும். அதாவது எல்லாநேரங்களிலும் மன்னிப்போ, அதே போன்று எல்லா நேரங்களிலும் தண்டனையோ வழங்குவதை இஸ்லாமியச் சட்டம் ஆதரிக்கவில்லை. இந்தச் சட்டம் எல்லாக்காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக அமையப் பெற்றிருக்கிறது.
இஸ்லாம் கட்டளையிடும் சில தண்டனை முறைகளையும், அவற்றின் நோக்கங்களையும் நன்கரியாத காரணத்தால், இன்று சில இஸ்லாமிய அரசாங்கங்கள் தவறான முறையில் தண்டனைகளை நிறைவேற்றி அதன் மூலம் இஸ்லாத்தின் எதிரிகளின் ஏளனத்திற்கும், எதிர்ப்புக்கும். இஸ்லாத்தை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக திருட்டுக் குற்றத்திற்கு கைகளை வெட்டும் தண்டனையும் இஸ்லாமிய ஷரியத் ஏற்படுத்தியிருக்க வேண்டிய சில நிபந்தனைகளையும் அது குறிப்பிட்டுள்ளது. வாழ்க்கையின் முதன் முதலில் சந்தர்ப்பவசத்தால் ஒருவன் திருடி விடுகிறான் என்றால் உடனே அவனைப் பிடித்து அவனது கைகளை வெட்டவேண்டும் என்பது அச்சட்டத்தின் பொருளல்ல: மாறாக எப்போதும் கொள்ளையிலும் கொலையிலும் ஈடுபட்டு மக்களை பயத்தில் ஆழ்த்தித் திருட்டை மட்டுமே தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு சமூகத்தையே சீரழித்து வரும் ஒரு திருடன் பிடிபட்டால் அவனுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்வது மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும்.
ஐ.நா சபை நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி (அஹமதிய்யா ஜமாத்தை சார்ந்த ஸர் முஹம்மது ஸபருல்லாகான் ஸாஹிப்) இந்த தண்டனை முறை குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
ஐதி (கைகள்) என்று திருக்குர்ஆன் கூறுவதற்கு ஓர் உட்பொருள் உண்டு. உதாரணமாக ஹஸ்ரத் இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் முதலிய இறை தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போதும் அவர்கள் ‘ஊரில் ஐதி வல் அப்ஸார் (கைகளும் கண்களும் உள்ளவர்கள்) என்று திருக்குர்ஆன் (38:46) கூறுகிறது. இதற்கு (சக்தியும், செயல்படுதிறனும்) அகப்பார்வை கொண்டவர்கள் என்றுதான் பொருள். இதிலிருந்து ‘ஐதி’ (கைகள்) எனபதற்கு சக்தி, தகுதி, செயல்படுதிறன் என்ற உட்பொருளும் உண்டு என்பது புலனாகிறது அதே போன்று ‘கத்அ’ (அறுத்தல், முறித்தல்) என்ற சொல்லுக்கும் உட்பொருள் உண்டு. உதாரணமாக ‘கத் உல்லிஸான்’ (நாக்கை அறுத்தல்) என்பதற்கு மவுனமாகுதல் பேச்சை அடைத்தல் என்று பொருள் தரப்படுகிறது. அதே போன்று, ‘கத் உல் ஐதி’ கைகளை முறித்தல், என்பதற்கு கைகளைக் கட்டுப்படுத்துதல், கைகளை கட்டிப் போட்டு செயலிழக்க செய்தல் என்று பொருள்படுகிறது (இஸ்லாமிய மனித உரிமைகள் என்ற நூலில்)
மேலே கூறப்பட்ட விளக்கத்தின்படி ஒரு திருடனைப் பிடித்தால், அவன் எதற்க்காக திருடுகிறான் என்பதையறிந்து அந்தக் காரணத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவன் மேலும் மேலும் திருடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தால் அவனை ஒரு குறிப்பிட்ட காலம்வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தினால் அவனது கைகளைச் செயலற்றவையாக்குவதற்குகொப்பான நடவடிக்கையாக அது அமையும்.
உண்மையில் ஒரு திருடன் ஒருபோதும் திருந்தமாட்டான் என்றால் அவனது கைகள் நிச்சயமாக வெட்டப்படத்தான் வேண்டும். அப்போதுதான் மக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்படும் பிறருக்கு படிப்பினைத் தரக்கூடிய அடையாளமாகவும் அது அமையும்.
ஆரம்ப காலத்தில் மக்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்க்கை நடத்தியபோது அதற்கேற்றவாறு தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுதான் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்பதாகும். இதைப் பற்றி பைபிளில் பின்வருமாறு காணப்படுகிறது. ஸ்திரியோடு ஒருவன் சயனிக்கக் கண்டு பிடிக்கபட்டால் அந்த ஸ்திரியோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரியும் இருவரும் சாகவேண்டும்....... இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்கு முன் கொண்டு போய் அவர்கள் மேல் கல்லெறிந்து கொல்லக் கடவீர்கள். இப்படியே உன் தீமையை உன் நடுவிலிருந்து விலக்ககடவாய். ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து அவளோடு சயனித்தானேயாகில் அவளோடு சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.” (உபாகமம் 22:22-25)
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட ஷரியத்தில் மேலே கூறப்பட்ட சட்டம் முற்றிலும் திருத்தி அமைக்கபப்ட்டிருக்கிறது. கல்லெறிந்து கொல்லும் தண்டனை திருக்குரானில் எங்கேயும் கூறப்படவில்லை.
விபச்சாரக் குற்றத்திற்கு திருக்குர்ஆன் கூறம் தண்டனை பின்வருமாறு அமைந்திருக்கிறது.
விபச்சாரம் செய்யும் ஆண், பெண் இருவருக்கும் ஆளுக்கு நூறு கசையடி வீதம் கொடுக்கப்பட வேண்டும். அல்லாஹ் விதித்த இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதில் இவ்விருவருடைய விஷயத்தில் உங்களுக்கு எந்தவிதமான இரக்கமும் இருக்க வேண்டாம். (24:3)
திருக்குர்ஆன் கூறும் இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு சாட்சிகள் ஆஜர் படுத்தவேண்டும். அது மட்டுமன்று: அது ஒரு பொய்க் குற்றச்சாட்டென்று நிரூபிக்கப்பட்டால், அவ்வாறு பொய்க் குற்றம் சாட்டியவருக்கு 80 கசையடிகள் கொடுக்கவேண்டும். என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
எவர் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, அதை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வருவதில்லையோ அவருக்கு என்பது கசையடிகள் கொடுக்கவேண்டும். அதன்பின் அப்படிப்பட்டவரின் சாட்சியத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ளக்கூடாது. ஏனென்றால அவர்கள் வரம்புமீறும் தீயவர்களாவார்கள். (24:5) ‘
இவ்வாறு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டங்களை அலசி ஆராய்ந்தால், அதிலுள்ள ஒவ்வொரு சட்டமும் மனிதனுடைய ஆன்மீக நோயை அகற்றக் கூடிய ஒரு நிரந்தர விளைவுள்ள சிகிச்சையாக அமைந்திருப்பதைக் காணமுடியும். திருமணம், பலதாரமணம், விவாகரத்து, விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்படும் ஜீவனாம்சம் போன்றவைகளைப் பற்றி இஸ்லாமிய ஷரியத் கூறும் கட்டளைகளை அலசி ஆராய்ந்தால் அவற்றின் மேன்மையான தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். இஸ்லாமிய ஷரியத்தே முழுமையான இறுதியான ஷரியத்தாக இருக்கிறது.