அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்


“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.” 

நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10) 

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது. 

வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய அவை முழுக்க முழுக்க
இறை வசனங்கள் எனக் கூறயியலாது. ஏனெனில் அவற்றில் நீக்கப்பட்டதும் புதிதாக சேர்க்கப்பட்டதும் அநேகம் உண்டு. 

இந்த உண்மையை அந்த வேத நூற்களைப் போன்றுகின்றவர்கள் கூட ஒப்புக் கொள்கின்றனர். 

ஆனால் திருக்குர்ஆன் அன்று அருளப்பட்ட விதமே இன்றும் இலங்குகின்றது. 

இந்த உண்மையை இஸ்லாமை தூற்றுகின்றவர்கள் கூட ஒப்புக் கொள்கின்றனர். 

இஸ்லாத்தின் எதிரியாகிய சர் வில்லியம் மூயிர் திருக்குர்ஆனைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் முகம்மதால் தொகுக்கப்பட்டவிதமே அசலாகவும் மாற்றப்படாததகவும் இருக்கிறது.” (லைப் ஆப் முஹம்மது எனும் நூலின் முன்னுரையில்) 

ஜெர்மானிய அறிஞரான பேராசிரியர் நோல்டெக் இவ்வாறு கூறுகிறார். 

“......ஆனாலும் உதுமானின் குர்ஆன் சில இடங்களில் நூதனமாக அமையப் பெற்றிருந்தாலும் அதிலுள்ளவை அசலான வசனங்களாகும்.” (என்சைகிளோ பீடியா பிரிட்டானிகா) 

பேராசிரியர் நிக்கல்சன் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

“இஸ்லாத்தின் மூலாதாரத்தை அதன் ஆரம்பகால வளர்ச்சியையும் கண்டறியத் தக்கவகையில், இதில் (திருக்குர்ஆனில்) தனித்துவமானதும் மறுக்கயிலாதுமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய விஷயங்கள் பௌதீக நூற்களிலோ கிருத்துவ நூற்களிலோ அல்லது வேறு புராதன மத நூற்களிலோ இல்லை” (லிடரரி ஹிஸ்டரி ஆப் தி அரப்) 

ஏனைய மறை நூற்களோடு திருக்குர்ஆனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது திருக்குரானை இறைவனே பாதுகாத்து வருகின்றான். அதற்கான ஏற்பாடுகளை அவனே செய்திருக்கிறான் என்ற உண்மையை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். 

திருக்குர்ஆன், எழுத்தறிவற்ற மக்களிடம் தரப்பட்டது. ஆனால் அதன் ஒவ்வொரு சொல்லும் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்வியறிவுமிக்க மக்களுக்குத் தரப்பட்ட மறை நூற்களில் எதுவுமே அசலாக இல்லை. அவற்றில் சில காணாமலே போய்விட்டன. 

திருக்குர்ஆன் எவ்வித மாற்றமும் நிகழாமல் திகழ்வதற்கு இரண்டு முக்கிய ஏற்பாடுகளை இறைவனே செய்திருக்கின்றான். ஒன்ற, திருக்குரானின் ஒவ்வொரு வசனமும் அது அருளப்பட்ட உடனேயே எழுதப்பட்டு மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. அடுத்து முஸ்லிம்களில் பலர் அந்த வசனங்களை அப்போதே உடனடியாக மனனம் செய்திருக்கின்றனர். 

இந்த உன்னத கைங்கரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த நூற்றாண்டுகளில் லட்சோப லட்சம் முஸ்லிம்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருக்கின்றனர். 

திருக்குர்ஆன் எவ்வித அப்பழுக்கின்றி திகழ்வதற்கு இன்னும் பல காரணங்களைக் கூறலாம். 

இறைவன், முஸ்லிம்களை திருக்குர்ஆன் மீது அசாதாரணமான பற்றுதல் கொள்ளச் செய்திருக்கிறான். திருக்குர்ஆனின் வசனங்களில் அர்த்தம் புரியாத நிலையில் கூட திருக்குர்ஆனை முஸ்லிம்கள் ஓதுகின்றனர். மனனம் செய்கின்றனர். 

திருக்குர்ஆனின் வசனங்கள் பாடல்கள் போன்று அமைந்துள்ளன அதனால் அவற்றை எளிதில் மனனம் செய்யமுடிகிறது. 

திருக்குர்ஆன் உலகெங்கும் அதன் ஆரம்ப நாட்களிலேயே பரப்பப்பட்டுவிட்டது. அதனால் அதன் வசனங்களைச் சிதைக்க யாருக்கும் வாய்ப்பே இல்லாது போய்விட்டது. 

திருக்குர்ஆனின் மொழியாகிய அராபிய மொழியை இறைவன் உயிருள்ள மொழியாக இன்றும் நடைமுறையிலுள்ள மொழியாக விளங்கச் செய்திருக்கின்றான். 

இயேசு பெருமான் பேசிய எபிரேய மொழியோ ரிஷிகளின் சமஸ்கிருத மொழியோ இன்று வழக்கில் இல்லையென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. 

சுருக்கமாகக் கூறுவதென்றால் திருக்குர்ஆன் எவ்வித இடைச் செருகலுக்கோ நீக்கலுக்கோ இலக்காகாமல் அன்று அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட விதமே இன்றும் அப்பழுக்கின்றி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

என்றாலும், பல்வேறு கால கட்டங்களில் இந்தத் தூய திருமறைக்கு மாசு கற்பிக்கின்றவர்கள் இருந்தே வந்திருக்கின்றனர். 

அண்மையில் திருக்குர்ஆனை “கம்பியூட்டர்” மூலம் ஆய்வு செய்த அமரிக்காவைச் சார்ந்த டாக்டர் ராஷித் கலீபா என்பவர் திருக்குர்ஆனின் அத்-தௌபா எனும் அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இடையில் சேர்க்கப்பட்டவை அல்லது அந்த அத்தியாயம் முழுவதுமே இடைச்செருகலாயிருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

சிறிது காலத்திற்கு முன் இந்த டாக்டர் ராஷித் கலீபா திருக்குர்ஆன் முழுவதுமே ஒரு கணக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுவே மனிதக் கரத்தால் ஆனா ஒரு மறை நூலன்று என்பதற்குச் சான்றாகும் என்று கூறி கீழ்வருமாறு தமது கண்டு பிடிப்பை விளக்கியிருந்தார். 

திருக்குர்ஆனின் முதற் சொல்லான ‘பிஸ்மி’ திருமறையில் 19 இடங்களில் காணப்படுகிறது திருக்குர்ஆன் 114 சூராக்களைக் கொண்டது இது 19 இன் 6 மடங்கு ஆகும். முதலில் அருளப்பட்ட இக்ரஹ் சூரா (சூரா அல்-அலக்) 19 வாக்கியங்களைக் கொண்டது. முதலில் அருளப்பட்ட வசனங்கள் 19 சொற்களை கொண்டிருந்தது. இந்த 19 சொற்களில் 285 எழுத்துக்கள் அது 19X5 ஆகும் இறுதியாக இறங்கிய அந் நஸர் என்ற அத்தியாயமும் 19 வார்த்தைகளைக் கொண்டது. ‘அல்லாஹ்’ என்ற சொல் திருக்குர்ஆனில் 2698 இடங்களில் காணப்படுகிறது. இது 19X142 ஆகும். அதுபோல் (ஒரு பிஸ்மில்லாஹ்வை மட்டும் கணக்கில் கொண்டு) அர்-ரஹ்மான், 57 இடத்தில் காணப்படுகிறது இது 19X3 ஆகும். அர்-ரஹீம் 114 இடத்தில் காணப்படுகிறது. இது 19X6 ஆகும். இப்படி திருக்குர்ஆன் முழுவதுமே 19 ஆம் எண்ணுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. இதைத்தான் ‘அதன் மேலிருப்பது பத்தொன்பதாகும்’ (74:31) என்று திருமறை வசனம் உணர்த்துகிறது. 

இவ்வாறு டாக்டர் ராஷித் கலீபா எண் கணித அடிப்படையில் திருக்குர்ஆனின் சிறப்பை விளக்கிட முயன்றிருந்தார். ஆனால் இப்போது சூரா “அத்-தௌபா’வின் இரண்டு வசனங்கள் இவருடைய கணிப்பிற்கு இணங்கி வராத காரணத்தால் அவை பிற் காலத்தில் சேர்க்கப்பட்டவை என்கிறார். 

அகில உலகையும் படைத்துக் காத்து பரிபாலித்து வரும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் வசனங்கள் கம்பியூட்டரில் அடங்க வேண்டும் என இந்த ராஷித் கலீபா எதிர் பார்ப்பது எத்துணை பேதமைத்தனமானது? 

இடைச்செருகல் என்பதற்கு திருக்குர்ஆனைப் பொறுத்த அளவில் எக்காலத்திலும் வாய்ப்பு இருக்கவில்லை என்பது இஸ்லாமிய வரலாறு கூறும் ஓர் உண்மையாகும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று திருக்குர்ஆன் எழுதி வைக்கப்பட்ட மறைநூல் மட்டுமல்லாது மனனம் செய்யப்பட்ட நூலும் ஆகும். நபிபெருமானாரவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே முழுத் திருக்குர்ஆனையும் ஆயிரக்கணக்கானோர் மனனம் செய்திருந்தனர். திருக்குர்ஆனை மக்களுக்கு கற்றுத் தரும் ஏற்பாடும் அப்போது செய்யப்பட்டிருந்தது. “திருக்குர்ஆனைக் கற்க விரும்புவோர் அதனை அப்துல்லாஹ் பின் மஸ்வூத், ஸாலிம் மவ்லா, அபிஹுதைபா, மவ்அத்தா பின் ஜபல், உபை பின் காப் ஆகியோரிடமிருந்து கற்கலாம் என நபிபெருமானார் கூறியதாக ஸஹிஹ் முஸ்லிமில் காணப்படுகிறது. 

ஆரம்பகால முஸ்லிம்கள் திருக்குர்ஆனை கற்பதிலும் அதனை மனனம் செய்வதிலும் அசாதாரணமான ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த மறையை தமது உயிரைவிட மேலாக நேசித்தார்கள். இவர்களைத் தொடர்ந்து கோடிக்கணக்கானோர் இந்த அருள் மறையை தமது இதயங்களிலே பதிய வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மீறி இரண்டு வசனங்கள் புகுந்துவிட்டன என கூறுவதென்றால் அது அபத்தமேயாகும். டாக்டர் ராஷித் கலீபா கம்பியூட்டரில் நேரத்தை செலவிட்டதற்கு பதில் இஸ்லாமிய வரலாற்றை ஆராய்வதற்குச் செலவிட்டிருந்தால் இது போன்ற அபத்தக் கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். 

அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களும் கலீபாக்களும் திருக்குர்ஆன் விஷயத்தில் எந்த அளவுக்கு கவனமுள்ளவர்களாக இருந்தார்களென்றால் அதன் சொற்களை உச்சரிப்பதில்கூட தவறு வரக்கூடாது என்று விரும்பினார்கள். திருக்குர்ஆனை ஒரு சஹாபி கற்றுக் கொடுக்கும்போது அவர் சரியாக ஒதுகின்றாரா என்பதை நபிபெருமானாரவர்கள் மறைந்திருந்து கண்காணித்த ஒரு நிகழ்ச்சி ஸஹீஹ் முஸ்லிமில் விபரிக்கப்பட்டிருக்கிறது. 

அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் முஸைலமா என்பவன் முஸ்லிம்களோடு போர்தொடுத்தான். அந்தப் போரில் ஐநூறு ஹாபில்கள் ஷஹீத் ஆனார்கள். அப்போது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அப்போதிருந்த கலீபாவான ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் திருக்குர்ஆனை நூல் வடிவிலாக்க வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார்கள். ஹஸ்ரத் அபூபக்கர் அவர்கள் முதலில் இதற்கு இணங்காவிட்டாலும் பிறகு அந்த ஆலோசனையை ஏற்று அப்பணியை ஹஸ்ரத் செய்து பின் தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஹஸ்ரத் செய்த் அவர்கள் நபிபெருமானாரிடமிருந்து திருக்குர்ஆன் வசனங்களைக் கேட்டு அவற்றை பதிவு செய்தவர்களில் ஒருவராவார். பதிவேடுகளைத் திரட்டி அதிலுள்ளவைகளை, முழுத் திருக்குர்ஆனையும் மனனம் செய்தவர்களைக் கொண்டு சரிபார்த்து திருக்குர்ஆனை நூல்வடிவில் அமைக்க ஹஸ்ரத் அபூபக்கர் அவர்கள் பணித்தார்கள். 

திருக்குர்ஆனை நூல்வடிவாக்கும் இப்பெரும் பணி மிகுந்த கவனத்தோடு பல சஹாபிகளின் கண்காணிப்புடன் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடைச் செருகல் என்பது எள்ளளவும் சாத்தியமில்லை. டாக்டர் ராஷித் கூறுவது போன்று புதிதாக இரண்டு வசனங்களை யாரேனும் புகுத்த முற்பட்டிருந்தால் முழுத் திருக்குர்ஆனையும் தமது உள்ளத்தில் வைத்துள்ள சஹாபா பெருமக்கள் அதற்கு அனுமதித்திருப்பார்களா? பொங்கி எழுந்து அப்படி செய்ய முனைந்தவனின் தலையை கொய்திருக்கமாட்டார்களா? 

திருக்குர்ஆனுக்கு மாசு கற்பிக்க முனைந்தவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வியை தழுவியுள்ளார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். பேராசிரியர் நோல்டாக் இதனை அழகாகச் சொல்கிறார்:- 

“குர்ஆனில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் இருப்பதாக நிரூபிக்க ஐரோப்பிய அறிஞர்களால் செய்யப்பட்ட முயற்ச்சிகள் தோல்வியடைந்தன” (என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா) 

திருமறையில் இடைச்செருகல் உண்டு என்ற தமது தவறான கருத்தை உலகெங்கும் பரப்ப டாக்டர் ரஷித் கலீபா முயன்றிருக்கிறார். 

இறுதியாக, திருக்குரானுக்கு ஒரு சிறந்த விரிவுரையை இக்காலத்தில் வழங்கியவர்களும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இரண்டாவது கலீபாவாகத் திகழ்ந்த இஸ்லாத்திற்கு ஈடிணையற்ற ஒரு மகத்தான தொண்டினைச் செய்திருந்தவர்களுமான ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களின் கவிதை வடிவிலான ஓர் அறிவுரையையே டாக்டர் ராஷிதிற்கு கூறவேண்டியதிருக்கிறது. அது இதுதான். 

“அகல்கோ தேனுபே ஹாகிம்நா பனாவோ, ஹர்கிஸ் ஏ தோ ஹூத் அந்திஹே, கர் நய்யரே இல்ஹாம் நஹோ”

அறிவைக் கொண்டு மார்க்கத்திற்கு ஒருபோதும் தீர்ப்பளிக்காதே! இல்ஹாம் எனும் இறையொளி இல்லையென்றால் அறிவு குருடானதே!

இறுதியாக டாக்டர் ராஷித் கலீபாவிற்கு திருக்குர்ஆனின் பதில்!

இவருடைய கம்பியூட்டர் கணிப்புகளால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மேற் கூறப்பட்ட தவறான கூற்றுக்குக் கிடைக்கும் தண்டனைப்பற்றியும் அவர் எந்த அத்தியாயத்தின் அடிப்படையில் கணக்கெடுத்துள்ளாரோ அதிலேயே அல்லாஹ் கூறியிருக்கிறான். 

நிச்சயமாக அவன் நினைப்பது போல் அல்ல. அவன் நம்முடைய வசனங்களுக்கு கடும் விரோதியாக இருக்கின்றான். விரைவில் நான் அவனை கடினமான சிகரத்தில் ஏற்றி விடுவேன் (ஏனென்றால்) அவன் திருக்குர்ஆனைப் பற்றி) சிந்தனை செய்து தவறான கணிப்பை செய்திருக்கிறான். அவன் தவறான கணிப்பு செய்ததினால் அவனுக்கு அழிவே ஏற்பட்டு விடும். (மீண்டும் நான் கூறுகிறேன்) அவனுடைய பொய்யான கணிப்புகள் அவனை நாசத்திற்கே ஆளாக்கிவிடும். (74:16-18) 

இது மனிதனுடைய வசனம் (இடைச் செருகல்) என்று கூறுபவனை ஸகர எனும் நரகத்தில் நான் எறிவேன். அந்த ஸகர் எனும் நரகம் என்ன வென்பதை நீர் அறிவீரா? அது எவரையும் விட்டுவைக்காது. மனிதனுடைய தோலை எரித்துவிடும். அதன் மீது (அவனுக்கு தண்டனை கொடுக்க) பத்தொன்பது அமரர்கள் இருப்பார்கள். (74:25-30)