தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”
அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக் கொண்டு, அந்த ஒரு சான்றே போதுமானது எனப் பேசுவது வழக்கம். ஆனால், அல்லாமா இக்பால், பாக்கிஸ்தானில் உள்ள ஸியால் கோட்டில் படித்துக்
கொண்டிருந்த பொழுதே அவர் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். கவி இக்பாலின் வரலாற்றை முறையாகப் படித்திருந்தால் விளங்கிக் கொள்ளமுடியும். அவர் வாலிபராக இருந்த காலத்தில், லூதியானாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற மௌலானாவும், கவிஞருமான ஸ அதுல்லாஹ் ஸஅதி என்பவர், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களைத் தாக்கித் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதை எழுதியிருந்தார். அச்சமயம் கல்லூரி மாணவரான கவி இக்பால் ஒரு கவிதையின் மூலமே பதிலடி கொடுத்து ஒரு கவிதை எழுதினார்கள் அது பின்வருமாறு:
கொண்டிருந்த பொழுதே அவர் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். கவி இக்பாலின் வரலாற்றை முறையாகப் படித்திருந்தால் விளங்கிக் கொள்ளமுடியும். அவர் வாலிபராக இருந்த காலத்தில், லூதியானாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற மௌலானாவும், கவிஞருமான ஸ அதுல்லாஹ் ஸஅதி என்பவர், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களைத் தாக்கித் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதை எழுதியிருந்தார். அச்சமயம் கல்லூரி மாணவரான கவி இக்பால் ஒரு கவிதையின் மூலமே பதிலடி கொடுத்து ஒரு கவிதை எழுதினார்கள் அது பின்வருமாறு:
நாற்றமெடுக்கும் உமது நாவு கண்டோம் – அதை
போற்றுவோர் தோட்டிகளே!
மலர் கொழிக்கும் பூங்காவல்ல உமது கவிதை
மலஜல கூடமே காண்பீர்!
முத்துகளல்ல உமது கவிதைகள் – மாறாக
மௌத்துக்கள், இழவுகள் இன்னாத சொற்கள்,
தூரிகையால் வரைந்த ஓவியமன்று உமது கவிதை – அன்றி
துடப்பக்கட்டை குச்சிகளின் கீரல்கள்
உண்மையெனும் வெயிலில் நின்று தவிக்கின்றவரே – உமக்கு
உலகியற்றியான் நிழல் தரட்டும்.
யூதராக மாறிவிட்ட உமக்கு – இனி
வேதியர் வேஷமெதற்கு – அதிலிருந்து வில
காத தூரம் சென்றுவிட்டீரே ஐயோ! போதும் போதும்
கழற்றிடுவீர் உமது தலைப்பாகையை!
(ஆயினாயே ஹக் நுமா பக்கம் 107)
இப்போதைய இந்த மௌலானக்களுக்கும் இக்கவிதை ஒரு அறிவுறையாக இருக்கின்ற படியால், இதைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களைப் பற்றி, இக்பால் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.
“தற்போது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் மிர்ஸா குலாம் அஹ்மத் மிகப் பெரிய சிந்தனையாளராக இருக்கிறார். (இந்தியன் என்குயரி 1900 A D)
மேலும் அஹ்மதிகளைப் பற்றி அவர் ஒரு நூலில் கூறியுள்ளதாவது:
“என்னுடைய கருத்து என்னவென்றால் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கு முறையை, ஹஸ்ரத் நபிகரீம் (ஸல்) அவர்கள் தங்கள் செயல் முறை மூலம் முன் மாதிரியை கட்டித்தந்துள்ளார்கள். இம் முன்மாதிரியை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
பஞ்சாபிலுள்ள காதியானி ஜமாத்தின் இஸ்லாமிய ஒழுங்கு முறை பரிபூரண மாதிரி வெளிப்பட்டிருக்கின்றது. (மில்லத் தே பைலபார் ஏக் இம்றானி நஸர் 1919)
கவி இக்பாலும் ஈஸா நபி (அலை) மரணமும்:
இவ்விஷயம் பற்றி இக்பால் கூறுவதாவது, ‘நான் இந்த (அஹ்மதிய்யா) இயக்கம் பற்றிப்படித்ததன் காரணமாக, நான் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால், ஈஸா நபி அவர்களின் மரணம், ஒரு சாதாரணம் மனிதனின் மரணத்திற்கொப்பானதுதான் என்பதும், அவருடைய இரண்டாவது வருகையாகக் கூறப்படுவது, அவருடைய குண இயல்புகளைக் கொண்டவரும், அவருக்கொப்பானவருமான ஒருவர் வருகையைப் பற்றியதே என்பதாகும். (அல்லாமா இக்பால்கா பைகாம் மில்லத்தே இஸ்லாமியாகே நாம்: பக்கம்: 32)
இக்பாலும், ஜிஹாதும்:
‘வன்முறையை ஆதரிக்கின்றவன் முஸ்லிம் அல்ல. ஷரியத்தின் அடிப்படையில் வன்முறையை ‘ஜிஹாத்’ எனக் கூறுவதற்கில்லை. மார்க்கப் பிரச்சாரத்தினிமித்தம் வாளேந்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. (மகாதீபே இக்பால் பாகம் 1. பக்கம் 203)
இக்பாலும் ‘இறுதி நபி’ கொள்கையும்:
இன்றைய முஸ்லிம்களையும், அவர்களுடைய நிலை கெட்ட மௌலானாக்களையும் கண்டு, அவர்களை சீர்திருத்த, ஒரு நபி வரவேண்டியது அவசியமென, இக்பால் கீழ்வரும் வசனங்களில் எழுதுகிறார். 19-07-1916 இல் மௌலானா ஹசன் நிசாமி என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகின்றார்.
“..........உங்கள் பிராத்தனை இக்காலத்தில் நிறைவேறினால் எவ்வளவு நலமாக இருக்கும்! அல்லது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் ஒரு முறை இங்கு வந்து, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு உண்மையான இஸ்லாத்தைப் பற்றி விளக்கிக் கூறுவார்களேயாயின், அது எவ்வளவு நல்லதாக இருக்கும். (மகாதிபே இக்பால் பாகம் 1, பக்கம் 41)
இது மட்டுமின்றி, இன்னொரு கடிதத்தில் கீழ்வருமாறு எழுதுகிறார். அதாவது, ‘நான் நபிகள் நாயகத்தின் பிரதிபலிப்பு – நிழல் என்று வாதிக்கும் இயக்கத்தின் ஸ்தாபகரின் வாதத்தை, நாம் வரலாற்று அடிப்படையில் ஆராய வேண்டும்.” (மகாதிபே இக்பால் பக்கம் 1, பக்கம் 419)
இக்பாலும் அஹ்மதிய்யா ஜமாத்தும்:
“அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்டோர் ஏராளமாகக் காணமுடியும். இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக அவர்கள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குறியவை ஆகும். ஒரு இயக்கத்தில் சேருவதும், சேராமலிருப்பதும் வேறு விஷயம். ஆனால், உலகில் இஸ்லாத்தை வெற்றி பெறச்செய்வதற்காக அஹ்மதிய்யா ஜமாஅத்து காட்டிவருகின்ற ஆர்வமும், துடிப்பும், தீவிரமும் உளமாரப்பாராட்டப்பட வேண்டியதாகும்” (மகாதீபே இக்பால் பாகம் II: பக்கம் 232)
மேற்கண்டவாறெல்லாம், அஹ்மதிய்யா இயக்கம் பற்றியும், அதன் ஸ்தாபகர் பற்றியும் பாராட்டியதுடன், அதன் கொள்கைகளையும் ஆதரித்து ஆமோதித்து வந்த இக்பால், பிற்காலத்தில் அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்க்கத் துவங்கினார் என்பது சிந்திக்கவேண்டிய ஒரு விஷயமாகும். இந்த மனமாற்றத்திற்கு ஒரு வரலாற்று உண்மை மறைந்திருக்கிறது.
24-07-1931 ம் வருடம் சிம்லாவில் ஒரு அனைத்திந்திய முஸ்லிம் மாநாடு நடைபெற்றது. காஜா ஹஸன் நிஜாமி, அல்லாமா இக்பால் கலந்து கொண்ட அம்மாநாட்டிற்கு விஷேச அழைப்பின் பேரில் அப்போதைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் இமாம், ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மத் அவர்களும் வருகைதந்திருந்தார்கள். அம்மாநாட்டில் காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மிகவும் பரிதாபகரமான அவலநிலை குறித்து ஆராய்ந்து அவ்வவலநிலை நீங்க திட்டம் தீட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்கமிட்டியின் தலைவர் பதவிக்கு, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா அவர்களின் பெயரை, அல்லாமா இக்பால்தான் முன் மொழிந்தார். அங்கு கூடியிருந்த மற்ற தலைவர்களும் அதை ஏகமனதாக ஆதரித்தனர். ஏகோபித்த அம்முடிவை ஏற்று, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது அவர்கள், அக்குழுவின் தலைவராக, காஷ்மீர் மக்களின் துயர் நீக்க பல திட்டங்களை தீட்டி, செயலாற்றினார்கள். இத்திட்டங்களை நிறைவேற்றும்பொருட்டு அஹ்மதிய்யா ஜமாஅத்து ஏராளமான பொருள் தியாகங்கள் செய்தது. அதன் காரணமாக, அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கும், அதன் தலைவர் அவர்களுக்கும், காஷ்மீர் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது.
அதே சமயத்தில் அதாவது 1934,35 ஆம் ஆண்டில், பஞ்சாபிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் அஹ்ராரி இயக்கம் தோன்றி, அஹ்மதிய்யா ஜமாத்திற்கெதிராக மக்கள் மத்தியில் மாபெரும் கிளர்ச்சியை தூண்டிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் வெற்றிகரமான பணியைக் கண்டு பொறாமை கொண்டு, அதன் காரணமாக அல்லாமா இக்பாலின் மனதைக் கலைக்க அஹ்ரார் இயக்கம் அவரைத்த லைவராக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அதோடு, மேலும் பல பதவிகளை தருவதாக வாக்களித்தனர். இவ்வாறான காரணங்களால், உலகாசை, பதவி, புகழ் இவற்றிக்கு ஆசைப்பட்ட இக்பால், அச்சமயம் முதற் கொண்டு தமது எண்ணங்களைப் படிப்படியாக மாற்றிக்கொண்டு அஹ்மதிய்யா ஜமாஅத்தை எதிர்க்கும் வகையில் தமது அபிப்ராயங்களை வெளியிடத் துவங்கினார்.
இதுவே நடந்த உண்மை. பதவி ஆசையாலும், பண மோகத்தாலும் கண்கள் மறைக்கப்பட்டு, இன்றும்கூட, ஆலிம் சாஹிபுகள் அஹ்மதிகளை எதிர்த்துக்கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணமுடியும். அந்த வகையில் ‘இஸ்மியின்’ மௌலானாவும் ஒருவராக இடம்பெற்றுள்ளார் என்பதில் எமக்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.